சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       


80
பாங்குறு முலோகா யதமே பௌத்தஞ்
சாங்கியம் நையா யிகம்வை சேடிகம்
மீமாஞ் சகமாஞ் சமயவா சிரியர்
தாம்பிரு கற்பதி சினனே கபிலன்
அக்க பாதன் கணாதன் சைமினி
மெய்ப்பிரத் தியமனு மானஞ் சாத்தம்
உவமான மருத்தா பத்தி யபாவம்

78
உரை
84

       பாங்குறும்-பகுதிப்படுகின்ற, உலகாயதம் பௌத்தம் சாங்கியம் வைசேடிகம் மீமாஞ்சகமாம்-உலகாயதமும் பௌத்தமும் சாங்கியமும் வைசேடிகமும் மீமாஞ்சையுமாகிய, சமய ஆசிரியர் தாம் - சமயங்கட்கு முறையே ஆசிரியராவார், பிருகற்பதி சினன் கபிலன் அக்கபாதனும் கணாதன் சைமினி - வியாழனும் புத்தனும் கபிலனும் அக்கபாதனும் கணாதனும் சைமினியுமாவர், மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம் உவமானம் அருத்தாபத்தி அபாவம்-அவருள் வியாழன் காட்சி யொன்றும், 1புத்தன் காட்சியும் அனுமானமுமாகிய இரண்டும், கபிலன் அவ்விரண்டுடன் ஆகமம் சேர மூன்றும், அக்கபாதன் அம்மூன்றோடு உவமானம் கூட்டி நான்கும், கணாதன் அந்நான்குடன் அருத்தாபத்தியைச் சேர்த்து ஐந்தும், சைமினி காட்சி முதல் அபாவ மீறாகவுள்ள ஆறும் அளவைகளாகக் கொண்டனர், இப்போது இவையே இயன்றுள அளவைகள் - இப்போழ்து இவ்வறுமே அச் சமயிகளால் வழங்கப்பட்டு வரும் அளவைகளாகும் எ - று.

       இறைவன், முறை செய்து காக்கும் முதல்வன், உயிர்கட்கு உடலும் பிரத்தியக்கமெனினு மொக்கும். காட்சிக் கண் பொருளை நேரேயுற்றறிதலின், அதனை "மெய்ப்பிரத்தியம்" என்றார். பிரத்திய முதலிய ஆறுமே பொருள்களின் உண்மை துணிதற்குரியவையாதல்பற்றி இவ்வாறு சிறப்பித்தாரெனினுமாம். எண்ணுக் குறித்தியலும் எண்ணேகாரம் இடையிட்டு நின்றது. அக்கபாதரைக் கௌதமபுத்தரென்றும், கணாதரைக் கணாசனரென்றும் கூறுவதுண்டு. ஏற்புடைய சொற்கள் இசை எச்ச வகையால் பெய்து கூறப்பட்டன.


1 தார்க்கிகரட்சையென்னும் நூலாசிரியரான வரதராசரென்பார், உலகாயதர் காட்சயாகிய ஓரளவையும், புத்தரும் வைசேடிகரும் காட்சியும் கருதலுமாகிய இரண்டளவையும், சாங்கியர் அவ்விரண்டோடு உரையினைக் கூட்டி மூன்றளவையும், நையாயிகருள் ஒரு சாரார் அம்மூன்றோடு உவமையைக் கூட்டி நான்களவையும், மீமாஞ்சகருள் ஒருசாரார் அந்நான்குடன் அபாவத்தைக் கூட்டி ஐந்தளவையும் கொண்டனர் என்பர். சைவருட் பெரும்பாலோர் காண்டல், கருதல், உரையென்ற மூன்றளவையும், பௌட்கர முதலிய ஆகமவழி நின்றோர் அம் மூன்றோடு அருத்தாபத்தியைக் கூட்டி நான்களவையும் கொள்ப. பட்டாசாரியன் நெறி நின்றோர், காட்சி, கருதல், உரை, உவமை, அருத்தாபத்தி, அபாவம் என்ற ஆறுமே கொண்டனரென்றும், பிரபாகர நெறி நின்றோர் அபாவமொழிந்த ஏனை ஐந்துமே கொண்டனரென்றும், நையாயிகர் அருத்தாபத்தி யொழிந்த ஏனை நான்குமே கொண்டனரென்றும், சாங்கியர் உவமை யொழிந்த மூன்றும் கொண்டனரென்றும், வைசேடிகரும், புத்தரும் காட்சியும் கருத்துமே கொள்பவென்றும், உலகாயதர் காட்சியொன்றே கொள்வரென்றும் சாத்திர தீபிகையின் ஆங்கில முன்னுரை கூறுகிறது.