சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       
100
கற்பங் கைசந் தங்கா லெண்கண்
தெற்றெ னிருத்தஞ் செவிக் கைமூக்
குற்ற வியாகர ணமுகம் பெற்றுச்
சார்பிற் றோன்றா வாரண 1வேதக்
காதி யந்த மில்லையது நெறியெனும்

100
உரை
105

[ வேதவாதி ]
       கற்பம் கை சந்தம் கால் எண் கண்-கற்பமென்னும் அங்கம் கையாகவும் சந்தமென்பது காலாகவும் கணிதமென்பது கண்ணாகவும், தெற்றென் நிருத்தம் செவி-தெற்றென விளக்கம் செய்யும் நிருத்த மென்னும் அங்கம் காதாகவும், சிக்கை மூக்கு-சிஷை மூக்காகவும், உற்ற வியாகரணம் முகம் பெற்று - இவற்றோடு பொருந்தும் சொல் இலக்கணம் என்னும் அங்கம் முகமாகவும் கொண்டு, சார்பின் தோன்றா-யாதொன்றனையும் சார்ந்து தோன்றுதலில்லாது தான்றோன்றி யாகிய, ஆரணவேதக்கு-ஆரணமாகிய வேதபுருடனுக்கு, ஆதி அந்தமில்லை-தோற்றமும் கேடும் இல்லை,அது நெறி - அவ்வேதம் கூறுவதே எங்கட்குச் சமய நெறியாம். எ - று.

       சந்தம், சந்தோவிசிதி. வைதிகச் சொற்களை யாராய்தற்குக்கருவி யாதலின், "தெற்றென் நிருத்த" மெனப்பட்டது. வியாகரணம் ஐந்திர முதலிய வடமொழி யிலக்கணம். வேதம் அநாதி யென்றும் அதனை யுருவகத்தாற் புருடனென்றும் கூறுவது வைதிக வேதியர் மரபு. "வேதம் அபௌருஷேயம்" என்பது பற்றி "சார்பிற் றோன்றாது" என்றார். ஊழிதோறும் தொடக்கத்தே இறைவன் இவ்வேதங்களைத் தொகுத்தளிக்கின்றா னென்பான், அதற்கு இறைவன் போல அநாதி யுண்மைத் தன்மை கற்பித்து, 2"வேதக்கு ஆதியந்தமில்லை" என்றான் "மாயா வாய்மொழி" (பரி. 3.47) என்பதற்கும், "முதுமொழி" (பரி 3.47) என்பதற்கும் கூறப்படும் உரையகத்தும், "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதி" (குறள். 543) என்பதன் உரையகத்தும் ஆசிரியர் பரிமேலழகர் வேதம் அநாதி நித்தியம் என்பது காணப்படும். வேத புருடற்குக் கற்ப முதலியன கை முதலிய உறுப்புக்களாகக் கூறுவது பற்றி இக்கற்ப முதலிய ஆறும் வேதாங்கமெனப்படும். இனி, நச்சினார்க்கினியார் சிக்கையையொழித்துப் பிரமத்தைக் கூட்டி ஆறங்கமாவன: உலகியற் சொல்லை யொழித்து வைதிகச் சொல்லை யாராயும் நிருத்தமும், அவ்விரண்டையு முடனாராய்ந்த ஐந்திரத் தொடக்கத்து வியா கரணமும், போதாயனீயம், பாரத்துவாசம், ஆபத்தம்பம், "ஆத்திரேயம் முதலிய கற்பங்களும், நாராயணீயம் வராகம் முதலிய கணிதங்களும், எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும், செய்யுளிலக்கணமாகிய சந்தமுமாம்" (தொல். புறத். 20. உரை) என்றனர். இனி ஈண்டுக் கூறிய எண்ணைச் சோதிடம் என்றும் கொள்ப. "மனக்கினியாற்கு" (மணி. 21.30.) என் புழிப் போல வேதக்கு என்பதும் சாரியை பெறாது முடிந்தது. அவ்வேதம் கூறும் விதி விலக்குகளையே சமயநெறியாகக் கொண்டொழுகுதலின்; "அது நெறி" என்றான்.


(பாடம்) 1வேதத், தாதியந்த மில்லை யதுவே நெறியெனும்.   2 வேதம் அநாதி நித்தியமென்பது பற்றி நிகழும் தடை விடைகளை நியாய பாடியத்தும் நியாயவார்த்திக தாற்பரிய டீகை (ii. 1. 68)யிலும் நீலகேசி வேதவாதச் சருக்கத்தும் (ix) சாத்திர தீபிகை (அதி. VIII) முதலிய வேறு பல நூல்களிலும் காணலாம்.