சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       
105
வேதிய னுரையின் விதியுங் கேட்டு
மெய்த்திறம் வழக்கென விளம்பு கின்ற
எத்திறத் தினுமிசை யாதிவ ருரைதென
ஆசீ வகநூ லறிந்த 1புராணனைப்
பேசுநின் னிறையார் நூற்பொருள் யாதென

105
உரை
109

       எனும்-இவ்வாறு சொல்லும், வேதியன் உரையின் விதியும் கேட்டு - வேதவாதியால் உரைக்கப்படும் பொருள்களைக் கேட்டு, மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற-மெய்யாய நூல் வழக்கு உலக வழக்கு என்று கூறப்படும், எத்திறத்தினும் இவர் உரை இசையாது என -- எவ்வகையினும் இவ்வேதியர் முதலாயினோர் கூறுவது பொருந்தாதென்று கருதினவளாய், ஆசீவக நூல் அறிந்த புராணனை-ஆசீவக நூற்பொருளை யோதியுணர்ந்த முதியோனொருவனைக் கண்டு, பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என - நின்னாற் பரவப்படும் இறைவன் யார் நினக்கு மேற்கோளாகிய நூற்பொருள் யாது என்று வினவி எ - று.

       
வேதங்கூறும் பொருள்கள் விதியும் விலக்குமாகிய வடிவிலிருந்தலின் "விதியும் கேட்டு" என்றார். உம்மையால் விலக்கும் தழுவப்பட்டது. "மெய்த்திறம் வழக்கு" என்பவற்றுள், வழங்கு உலக வழக்கு. "வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்" (தொல். பாயி.) என்பது காண்க. எனவே, மெய்த்திறம் நூல் வழக்காயிற்று. "மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடு" (மணி. 1: 11) என்று முன்பும் கூறியிருத்தல் காண்க. நூல்வழக்கும் உலக வழக்குமென்ற இரண்டும் உண்மை யாராய்ச்சிக்கும் வேண்டுவன எனச் சான்றோர் கூறுதல் தோன்ற, "விளம்புகின்ற" என்று மணிமேகலை கருதினாள். இவர் என்றது, அளவைவாதி முதல் வேதவாதி யீறாகக் கூறிய வாதிகளை. இவர் கூற்றைக் கேட்ட மணிமேகலை அமையாது மேலும் சமயக்கணக்கர் பலரையும் வினவுதற்கு விழைந்தமையின், ஏதுவொன்றும் கூறாது "எத்திறத்தினுமிசையாதிவர் உரையென" ஒழிகின்றான். பன்னெடுநாள் ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் அறிவு நிரம்பினமை தோன்றப் "புராணன்" என்றார். பூரணனென்றும் பாடம். பூரணன், ஆசீவக நூலைக்கூறிய மற்கலி. "விரையாவறிவிற் புகழ்பூரணனே" (நீல.673) என்புழி, பூரணன் என்பதற்கு, "பூரணனென்னு மெம்முடைய ஆப்தன்" என்று சமயதிவாகர வாமனமுனிவர் உரை கூறுவதனாலறிக.
1 பூரணனை.