சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       


140



145
நிறைந்தவிவ் வணுக்கள் பூதமாய் நிகழிற்
குறைந்து மொத்துங் கூடா வரிசையின்
ஒன்று முக்கா லரைசா லா1யுறும்
துன்று2மிக் கதனாற் பெயர்சொலப் படுமே
இக்குணத் தடைந்தா லல்லது நிலனாய்ச்
சிக்கென் பதுவும் நீரா யிழிவதும்
தீயாய்ச் சுடுவதுங் காற்றாய் வீசலும்
ஆய தொழிலை யடைந்திட மாட்டா

138
உரை
145

       நிறைந்த இவ்வணுக்கள் பூதமாய் நிகழின்-எல்லாப் பொருள்களிலும் நிறைந்திருக்கும் இந்த நிலமுதலிய நால்வகை யணுக்களும் நிலநீர் முதலிய பூதங்களாக நிலவுமிடத்து; வரிசையின் குறைந்தும் ஒத்தும் கூடா - தத்தமக்குரிய அளவிற் குறைதலும் சம்மாதலுமின்றி; ஒன்று முக்கால் அரை காலாய் உறும் - நிலமாகிய பூத நிகழ்ச்சிக்கு நிலவணு ஒன்று கூடின் நீரணுவுக்கு முக்காலும் நெருப்புக்கு அரையும் காற்றுக்குக் காலுமாய்ப் பொருந்தும்; துன்றும் மிக்கதனால் பெயர் சொல்லப்படும்-பொருந்தும் அணுக்களுள் மிக்கவற்றால் இன்ன பூதமெனப் பெயர் கூறப் படும்; இக்குணத்து அடைந்தாலல்லது-இவ்வளவாக அணுக்கள் செறிவுற்றாலன்றி; நிலனாய்ச் சிக்கென்பதுவும் - நிலமாய் வன்மை யுற்றிருப்பதும்; நீராய் இழிவதும்-நீராகிப் பள்ளம் நோக்கி யோடுவதும்; தீயாய்ச் சுடுவதும் - நெருப்பாகிச் சுடுவதும்; காற்றாய் வீசலும்-காற்றாய் இயங்குவதும்; ஆய தொழிலை யடைத்திடமாட்ட - ஆகிய இத்தொழில்களைச் செய்யா எ - று.

       இவ்வணுக்கள் பூதமாய் நிகழுமிடத்து ஒவ்வொரு பூதத்துக்கும் வேண்டும் அணுத்திரள் தம் அளவில் குறைந்தோ, தம்மோடு கூடும் பிற அணுக்களின் அளவிற்கொப்பவோ கூடவென்றற்கு, "வரிசையின் குறைந்தும் ஒத்தும் கூடா" என்றும், அவ்வளவினை, "ஒன்று முக்கால் அரை காலாயுறும்" என்றும் கூறினான். பிறரும், "இரண்டுங்கூடும் நெறி நில நான்கு நீர் மூன், றின்றிரண் டழல்கா லொன்றா விசைந்திடும் பூமியிவ்வா, றென்று நீர் தீ காலாதி யீண்டுவ தென்றியம்பும்" (சிவ. சித். பர. ஆசீவ. 7) என்று கூறுவது காண்க. ஒன்று முக்கால் அரை காலாயுறும் என்பதே பிறிதோர் வாய்பாட்டால் நான்கு மூன்று இரண்டு ஒன்றாகக் கூறப்பட்டதென்க. நிலவணு மிக்கது நிலமென்றும் நீரணுமிக்கது நீரென்றும் இவ்வாறே பிறவுமாதலின், "துன்று மிக்கதனாற் பெயர் சொலப்படுமே" என்றான்.

1துன்றும். 2 மிக்க வதனிற்.