சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       




170

சொற்றடு மாற்றத் தொடர்ச்சியை விட்டு
நிகண்ட வாதியை நீயிரை நின்னாற்
புகழுந் தலைவன்யார் நூற்பொருள் யாவை
அப்பொரு ணிகழ்வுங் கட்டும் வீடும்
மெய்ப்பட விளம்பென விளம்ப லுறுவோன்


166
உரை
170

       சொல்தடுமாற்றத்தொடர்ச்சியைவிட்டு-முன்னுக்குப்பின் தடுமாறிக்கூறும் ஆசீவகனுடன் தொடர்ந்து சொல்லாடுவதை விட்டகன்று ; நிகண்ட வாதியை - ஆங்கேயிருந்த நிகண்டவாதியைக் கண்டு ; நின்னாற்புகழும் தலைவன் யார்-நின்னாற் பாராட்டப்படும் இறைவன் யார் ; நூற்பொருள் யாவை - நூற்பொருள்கள் யாவை ; அப்பொருள் நிகழ்வும் கட்டும் வீடும் மெய்ப்பட விளம்பு என - அப்பொருள்களின் வரலாறும் உயிர்கட்குளவாகும் கட்டும் அதனினின்று விடுதலை பெறுமாறும் நன்கு விளங்கக் கூறுக என்று கேட்க ; விளம்பல் உறுவோன் - அவன் சொல்லலுற்றான் எ - று.

          முன்மொழிந்ததும் பின்மொழிவதும் மாறுபடக் கூறுமுகத்தால் உண்மை தோன்றாமற் கூறுவது, சொற்றடுமாற்றம்; "நில நீர் தீக் காற்றென நால்வகையின், மலைமரம் உடம்பெனத் திரள்வதும் செய்யும்" (மணி. 27 : 116-7) என்று முன்னே மொழிந்து, பின்னே "முது நீரணு நிலவணு வாய்த்திரியா" (மணி.27:129) என்பது முதலாகத் தடுமாற்ற மெய்தக் கூறுதல் சொல்தடுமாற்றம். தடுமாற்றமுற்று மொழிவோனுடன் சொல்லாடுவது பயனில் செயலாதலின், "தொடர்ச்சியை விட்டு" என்றார். நிகண்டவாதி, நிக்கந்தவாதி யென்றும், நிர்க்கிரந்தவாதியென்றும் நிர்க்கிரண்டவாதியென்றும் கூறப்படுவன். நிக்கிரண்டம் - உடையில்லாமை; இந்நிகண்டவாதியர் சைனருள் ஒருவகையினரான திகம்பரரென்றும், அருகரென்றும், சமணரென்றும், கூறுப. புகழும்: செய்வினை வாய்பாட்டில் வந்த செயப்பாட்டுவினை. விளங்கக் கூறாத வழி மெய்ம்மை தோன்றாதாதலால், "மெய்ப்பட விளம்பு" என்றாள். விளம்பலுறுவோன் என்பது பெயராய் "அது வீடாகும் என்றனன்" (மணி. 27 : 201) என்பதனோடு முடியுமாயினும், ஈண்டு உரை யினிது நடத்தற்கு வினைப்படுத்துப் பொருள் கூறப்பட்டது.