சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       


200

ஓரணு புற்கலம் புறவுரு வாகும்
சீர்சா னல்வினை தீவினை யாவைசெயும்
வருவழி யிரண்டையு மாற்றி முன்செய்
அருவினைப் பயனனு பவித்தறுத் திடுதல்


196
உரை
201

        புற்கலம் ஓர் அணு-புற்கலமாவது பரமாணுவும், புறவுருவாகும்-பொருட்குப் புறவடிவமாகும், சீர் சால் நல்வினை தீவினையவை செயும் - சிறப்புப் பொருந்திய நல்வினையும் அஃதில்லாத தீவினையுமாகிய அவ்விரண்டும் பயக்கும், வருவழி இரண்டையு மாற்றி-இன்பமும் துன்பமும் வரும் வழியை யடைத்துப் போக்கி, முன்னே செய் அருவினைப்பயன்-முன்பே செய்துகொண்ட அரிய பழவினைப் பயன்களை, அனுபவித்தறுத்திடுதல்-ஒருங்கே நுகர்ந்து கழிப்பதாகிய, அது வீடாகும்-அதுவே வீடுபேறாகும், என்றனன்-என்று நிகண்டவாதி கூறினான் எ - று.

       பொருளின் புறத்தவாகிய நாற்றம் சுவை ஊறு வண்ணம் முதலிய வியல்புகளை யுடைமைபற்றி, "புறவுருவாகும்" என்றான்; உயிர்களை யுலகவாழ்வில் ஈடுபடுத்தித் துன்ப மெய்துவிப்பதும் அணுவாதலும் இதற்கு இயல்பாதலை, "புற்கலந்தான், மாற்றிடை யுயிரைப்பற்றி வினை முதலாகித் துன்பம், ஆற்றவும் செய்து கந்த மணுவுமாய் நிற்ப தாமே' (மேரு மந். 83) என்று பிறரும் கூறுதல் காண்க. நல்வினை இன்பம் பயக்கும் சிறப்புடையதாதலின், "சீர்சால் நல்வினை" யென்றும், அச்சிறப்பில்லாமையின், தீவினையை வாளாதும் கூறினான். வினைகளைப் பற்றிப் "பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதைக்"' கண்கூறுதலாலும், பந்தத்தின் இயல்பை, "அவ்வினையாற் செய்வுறுபந்தமும்" (மணி, 27; 175-6) என்றமையலும், அவற்றைக் கூறாது, வீட்டினைமட்டில் ஈண்டுக் கூறினார். வரும் வழியிரண்டையு மடைத்தலாவது," வருகின்ற கர்மங்களைக் குப்தி சமிதி முதலாயினவற்றால் அடைத்து" விடுதல். பழவினை நிற்க வீடுபெறல் கூடாமையின், அவ் வினைப்பயனை முறையே நுகர்ந்து கழிப்பதின்றி, ஒருங்கே நுகர்ந்து கெடுத்தலையே "அனுபவித்தறுத்திடுதல்" என்றான். பிறரும் இக் கருத்தே கொண்டு, "வரும்பாவமெதிர்காத்து மன்னுந்தம் பழவினையும், ஒருங்காக வுதிர்த்தக்கால் உயிர்த்தூய்மை வீடென்றாள்" (நீல 312) என்று கூறினர்.