சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       

265

தாதகிப் பூவுங் கட்டியு மிட்டு
மற்றுங் கூட்ட மதுக்களி பிறந்தாங்
குற்றிடு பூதத் துணர்வு தோன்றிடும்
அவ்வுணர் வவ்வப் பூதத் தழிவுகளின்
வெவ்வேறு பிரியும் பறையோ சையிற்கெடும்


264
உரை
268

        தாதகிப் பூவும் கட்டியும் இட்டு-ஆத்திப் பூவையும் கருப்புக் கட்டியையும் பெய்து, மற்றும் கூட்ட-வேறுபிற பொருள்களையும் கலந்தவழி. மதுக்களி பிறந்தாங்கு-கள்ளினிடத்தே களிப்புண் டானாற்போல, உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்-பொருந்துகின்ற பூதங்களின் கூட்டத்தால் உணர்வு பிறக்கும், அவ்வுணர்வு- அவ்வாறு தோன்றிய உணர்வுதானும், அவ்வப் பூதத்தழிவுகளின்- அவ்வப்பூதங்களின் கூட்டம் கலைந்து நீங்குமிடத்து, வெவ்வேறு பிரியும் - வேறுவேறாகப் பிரிந்து, பறைஓசையிற் கெடும் - பறை யிடத் தெழுந்த ஒசையானது சென்று சென்று தேய்ந்து கெடுவது போலத் தேய்ந்து தேய்ந்து தத்தம் முதலொடு ஒன்றிவிடும் எ - று.

        தாதகிப்பூ-ஆதித்திப்பூ. கட்டி-கரும்பின் சாறடுகட்டி. நீலகேசியுரை காரர், "மா முதலாகிய வைந்து திரவியத்தின் கூட்டத்தின் மத்திய சக்தி பிறந்தாற்போல" (858 உரை) என்று கூறுகின்றார். மா முதலா கிய ஐந்தனுள், மாவொடு தாதகியும் கட்டியும் பெறப்படுவதால் ஏனை யிரண்டையும் "மற்றும் கூட்ட" என்பதனால் கொண்டார் என்று கொள்க. அவை இரண்டும் இன்னவெனத் தெரிந்தில. தாதகி முதலிய ஐந்தின் கூட்டத்தால் மதுவிடத்தே களிப்புத் தோன்று மென்றது, ஐம்பூதக் கூட்டுறவால் உணர்வு பிறக்குமென்றற்குவமை. அவ்வப் பூதக் கூறுகள் தத்தம் முதலொடு பிரிந்து சென்று கூடிவிடுதலின், "வெவ்வேறு பிரியு" மென்றும், பூதங்களிற் கூடுந் திறத்தைப் "பறையோசை யிற் கெடும்" என்றும் கூறினான். பூதவாதிகட்கு நிலம் நீர் தீ வளி விசும்பு என்ற ஐம்பூதமும் உடன்பாடு; இதனை, "திண்ணென் றீநில நீர் வளி காயத்தாற், கண்ணு மூக்கெடு நாமெய் செவிகளாய், வண்ண நாற்றஞ் சுவையுனொ டூறொலி, எண்ணுங்காலை யியைந்துழி யெய்துமே" (நீல. 857) என்று பிறரும் எடுத்தோதிக் காட்டுவர். இனி, உலகாயதர் விசும்பொழிந்த பூதநான்கையுமே கொண்டு அவற்றின் கூட்டுறவால் உடலுணர்வுண்டா மென்றம், வெற்றிலையும் பாக்கும் சுண்ணாம்பும் கலந்தவழிச் செந்நிறம் பிறத்தல்போலப் பூதக்கலப்பால் உணர்வு பிறக்கு மென்றும் கூறப மதுவி னிடத்தே களிப்புப்பிறக்குமாற்றினை இவர் கூறியதுபோலச் சாருவாகரும் கூறுகின்றனர். இதனை மாதவர் எழுதிய சருவ தரிசன சங்கிரகத்துச் சாருவாக தரிசனத்துட் காண்க.