கச்சிமாநகர் புக்க காதை

       




110

இலங்கா தீவத்துச் சமனொளி யென்னும்
சிலம்பினை யெய்தி வரங்கொண்டு மீளும்
தரும சாரணர் தங்கிய குணத்தோர்

கருமுகிற் படலத்துக் ககனத் தியங்குவோர்
அரைசற் கேது வவ்வழி நிகழ்தலின்
புரையோர் தாமுமிப் பூம்பொழி லிழிந்து
கற்றலத் திருந்துழிக் காவலன் விரும்பி


107
உரை
113

       இலங்கா தீவத்துச் சமனொளி என்னும் சிலம்பினை எய்தி வலங்கொண்டு மீளும்-இலங்கைத் தீவின்கணுள்ள சம்னொளி என்னும் மலையை அடைந்து வலஞ்செய்து வணங்கி மீள்வோராகிய, தரும சாரணர் தங்கிய குணத்தோர் கருமுகிற் படலத்துக் ககனத்து இயங்குவோர் - தரும சாரணரும் நற்குணங்கள் அமைந்தோரும் கரிய முகிற் கூட்டங்களையுடைய விசும்பின் வழியே திரிவோரும் ஆகிய, புரையோர் தாமும் அரைசற்கு ஏது அவ்வழி நிகழ்தலில்-உயர்ந்தோர்கள் அரசனுக்கு நல்வினையாகிய காரணம் பயனளித்திடற்கு அவ்விடத்தே தோன்றிடலால், இப் பூம்பொழில் இழிந்து - இவ் வழகிய பொழிலின் கண்ணே இளங்கி, கற்றலத்து இருந்துழி - சிலாதலத்தின்கண் அமர்ந்தபொழுது;

       புத்த தருமத்தை ஆங்காங்குச் சென்று பகரும் தொழிலினரைத் தருமசாரணரென்ப. அசோகமன்னனால் தருமவுரை குறித்துநாடுகட்கு விடுக்கபட்டோரைச் சாரணரென்பவென நாட்டு வரலாறுகூறுகிறது. ஈண்டுக் கூறப்படும் சாரணர் இலங்கைக்குச் சென்று மீள்வோராவர். கருமுகிற் படலத்துக் ககனத் தியங்குவோரென்றற்குக் கருமுகிற்கூட்டத்தை ஊர்தியாகக் கொண்டு வானவீதியிற்செல்பவரென்றுமாம். புரை யோர் - உயர்ந்தோர். உம்மை: சிறப்பு. இதனால் வான்வழியாகச் செல்லும் சாரணர் இப் பொழிற்கண் இறங்குதற்குக் காரணம் கூறுதலின், "அரசற்கு ஏது அவ்வழி நிகழ்தலின்" என்றார். அவர்கள் இருந்து அறங்கூறுதற்பொருட்டுக் கற்றலம் எடுத்துவைத்தல் மரபு; இதனைச் சிலா தலம் என்றலும் வழக்கு; "இலங்கொளிச் சிலாதல மேலிருந் தருளிப், பெருமக னதிசயம் பிறழா வாய்மைத் தருமஞ் சாற்றும் சாரணர்" (சிலப்.10:161-163) என்று அடிகள் கூறுவது ஒப்புநோக்கத்தக்கது.