கச்சிமாநகர் புக்க காதை

       



25

வந்தெறி பொறிகள் வகைமாண் புடைய
கடிமதி லோங்கிய விடைநிலை வரைப்பில்

பசுமிளை பரந்து பஃறொழி னிறைந்த
வெள்ளிக் குன்ற முள்கிழிந் தன்ன
நெடுநிலை தோறு நிலாச்சுதை மலரும்
கொடிநிலை வாயில் குறுகினள் புக்குக்


23
உரை
28

       வந்தெறி பொறிகள் வகை மாண்புடைய-பகைவர் முற்றிய பொழுதில் முன் வந்து பகையெறியுந் தன்மையுடைய இயந்திரங்களின் வகையால் மாட்சிமையுடைய, ஓங்கிய கடிமதில் இடைநிலை வரைப்பில்-உயர்ந்த காவலையுடைய மதிலின் இடையேயுள்ள நில வெல்லையில், பசுமிளை பரந்து - பசிய காவற்காடு பரவப்பெற்று ; பல்தொழில் நிறைந்த-பலவகைத் தொழிலும் நிரம்பிய, வெள்ளிக் குன்றம் உள்கிழிந்தன்ன நெடு நிலைதோறும் நிலாச்சுதை மலரும் - வெள்ளி மலையை நடுவே பிளந்தாற்போல உயரிய நிலைகள்தோறும் நிலவினைப் போல வெள்ளிய சுதை விளங்கும்; கொடிமிடை வாயில் குறுகினள் புக்கு-கொடிகள் செறிந்த வாயிலை அடைந்து புகுந்து ;

       
       எந்திரவகைகளாவன : நூற்றுவரைக் கொல்லி, அரிநூல்பொறி விற்பொறி, கொக்குப்பொறி, கூகைப்பொறி முதலியன. இவற்றின் வகையைச் சிலப்பதிகாரம் சிந்தாமணி முதலிய நூல்களுட் காண்க. ஓங்கிய கடிமதில் என மாறுக. பஃறொழில் நிறைந்த நெடுநிலை, வெள்ளிக் குன்றம் கிழிந்தன்ன நெடுநிலை யென வியையும். மலர்தல், ஈண்டு விளக்கங் குறித்து நின்றது. மிடைதல், செறிதல். குறுகினள் : முற்றெச்சம்.