கச்சிமாநகர் புக்க காதை

       




165




170




175

அருந்தவ னருள வாயிழை வணங்கித்
திருந்திய பாத்திரஞ் செங்கையி னேந்திக்
கொடிமதின் மூதூர்க் குடக்கணின் றோங்கி

வடதிசை மருங்கின் வானத் தியங்கித்
தேவர் கோமான் காவன் மாநகர்
மண்மிசைக் கிடந்தென வளந்தலை மயங்கிய
பொன்னகர் வறிதாப் புல்லென் றாயது
கண்டுளங் கசிந்த வொண்டொடி நங்கை

பொற்கொடி மூதூர்ப் புரிசை வலங்கொண்டு
நடுநக ரெல்லை நண்ணின ளிழிந்து
தொடுகழற் கிள்ளி துணையிளங் கிள்ளி
செம்பொன் மாச்சினைத் திருமணிப் பாசடைப்
பைம்பூம் போதிப் பகவற் கியற்றிய

சேதியந் தொழுது தென்மேற் காகத்
தாதணி பூம்பொழி றான்சென் றெய்தலும்


162
உரை
176

       ஆயிழை வணங்கி - அழகிய இழையணிந்த மணிமேகலை மாசாத்துவானை வணங்கி விடைபெற்றுக்கொண்டு, திருந்தியபாத்திரம் செங்கையின் ஏந்தி-தெய்வத்தன்மை பொருந்திய அமுதசுரபியைத் தன் சிவந்த கைகளில் ஏந்தி, கொடிமதில் மூதூர்க்குடக்கண் நின்று ஓங்கி-கொடிகளையுடைய மதில் சூழ்ந்த பழமையாகிய வஞ்சிநகரத்தின் மேற்றியசையினின்றும் எழுந்து, வடதிசை மருங்கின் வானத்து இயங்கி - வடதிசைப் பக்கமாக விசும்பிற் சென்று, தேவர்கோமான் காவல்மாநகர் மண்மிசை கிடந்தென வளந்தலை மயங்கிய - தேவர்கட்கரசனான இந்திரன் அரசு புரியும் அமராவதியே வந்து நிலவுலகில் இருந்ததுபோல வளஞ்சிறந் திருந்த, பொன்னகர் வறிதாப் புல்லென்று ஆயது கண்டு உளங்கசிந்த ஒண்டொடி நங்கை - அழகிய நகரமான கச்சிமாநகரம், வறுமையாற் பொலிவிழந்து புல்லென்றிருந்த தன்மையைக் கண்டு மனங் கசிந்த மணிமேகலை, பொற்கொடி மூதூர்ப் புரிசை வலங்கொண்டு நடுநகர் எல்லை நண்ணினள் இழிந்து - அழகிய கொடி யினையுடைய அத்தொன்மை நகரத்தின் மதிலை வலஞ் செய்து நடுவூரின் எல்லையை அடைந்து இறங்கி, தொடுகழற்கிள்ளி துணையிளங் கிள்ளி - தொடுகழற் கிள்ளியின் தம்பியாகிய இளங்கிள்ளி, செம்பொன் மாச்சினைத் திருமணிப் பாசடைப் பைம்பூம்போதிப் பகவற்கு இயற்றிய சேதியம் தொழுது - சிவந்த பொன்போன்ற பெரிய கிளைகளையும் அழகிய மரகதமணியனைய பசிய இலைகளையும் பசிய பூக்களையுமுடைய போதியின் கீழமர்ந்த புத்ததேவற்குக் கட்டுவித்த கோயிலைப் பணிந்து, தென்மேற்காகத் தாதணிபூம் பொழில் தான் சென்று எய்தலும்-தென்மேற்றிசையிற் சென்று தேன் பொருந்திய அழகிய மலர்ச்சோலையைத்தான் அடைதலும்;
       மீட்டும் வணக்கம் செய்தது விடைபெறுவது குறித்தலின், வணங்கி யென்பதற்கு இவ்வாறு உரை கூறப்பட்டது. மணிமேகலை கையிலிருக்கும் அமுதசுரபி, அவள் போம்போது உடன்போதல் ஒருதலையாகவும், ''திருந்திய பாத்திரம் செங்கையி னேந்தி'' யென்றார். அதனால் மன்னுயி ரோம்பலும் அறவணனைக் காண்டலும் பின்பு அறங்கேட்டலும் நிகழ்தற் சிறப்புப் பற்றி, இந்திரன் காக்கும் அமராவதி நகரை, ''தேவர் கோமான் காவன் மாநகர்'' என மிகுத்தோதியது, பொலிவற்றுப் புல்லென்று தோன்றும் கச்சிநகர், வளமுற்றிருந்த காலத்திருந்த சிறப்பைப் புலப்படுத்தற்கு. வளந்தலை சிறந்த நகரம் பொலிவிழந்திருப்பது காண்பவள் அருள்மிகுதியால் உளங்கரைந்து இரங்குவது தோன்ற, ''கண்டுளங் கசிந்த'' என்றும், அதனைத் தொடி நெகிழ்ந்து காட்டுமாதலின் ''ஒண்டொடி'' யென்றும் குறித்தார். ஒண்டொடி நங்கை சுட்டுமாத் திரையாய் நின்றது. ''காணுநர் கைபுடைத் திரங்க, மாணா மாட்சிய மாண்டன பலவே'' (பதிற். 19) என்று பிறரும் கூறுப. இழிந்து நண்ணினள் என மாறுக. நண்ணினள்: முற்றெச்சம். சயித்தியம் என்பது சேதியம் என வந்தது. ஆயிழை வணங்கி, கண்டு, உளங் கசிந்தவள் வலங்கொண்டு, இழிந்து நண்ணி, தொழுது, சென்றெய்தலும் என முடிக்க.