கச்சிமாநகர் புக்க காதை

       




180

வையங் காவலன் றன்பாற் சென்று
கைதொழு திறைஞ்சிக் கஞ்சுக னுரைப்போன்
கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள்

நாவலந் தீவற் றானனி மிக்கோள்
அங்கையி னேந்திய வமுத சுரபியொடு
தங்கா திப்பதித் தருமத வனத்தே
வந்து தோன்றினள் மாமழை போலென


177
உரை
183

       வையங் காவலன் தன்பாற் சென்று கைதொழுது இறைஞ்சிக் கஞ்சுகன் உரைப்போன்-இளங்கொடையைக்கண்ணுற்ற கஞ்சுகன் ஒருவன் மாநிலங் காவல் புரியும் அரசன்பாற் சென்று கைகூப்பி வணங்கிக் கூறுவானாய், கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் நாவலந்தீவில் தான்நனிமிக்கோள் - கோவலனுடைய புதல்வியும் துறவறம் பூண்டு நற்றவம் புரிபவளும்சம்புத்தீவின்கண் மிகச் சிறந்தவளுமாகிய மணிமேகலை என்பாள், அங்கையின் ஏந்திய அமுத சுரபியொடு - தான் கையி லேந்தியுள்ள அமுதசுரபி என்னும் தெய்வக் கடிஞையுடன், தங்காது மாமழைபோல் இப்பதித் தருமத வனத்தே வந்து தோன்றினள் - இந்நகரத்தின்கணுள்ள தருமத வனத்தில் பெருமுகில் போல வந்துதோன்றினள் என மொழிய;

       கஞ்சுகன் சட்டையிட்ட அரச சேவகன், காவலன், இளங்கிள்ளி, குணவதம், இதனைக் குணவிரதம் என்ப; இச்சொல் சமணூல்களிற் பயில வழங்குவது. பௌத்த நூல்கள், தூதகுணம் என்றும் அது பன்னிருவகை விரதங்களையுடையதென்றும் கூறுதலின், அது குறித்து, ''குணவதம்'' என்றார். அவை பஞ்சகுலிகம், திரிசிவரிகம், நாமாதிகம், வைந்தபாதிகம், ஏகாசநிகம், கலுபச்சத் பத்திகம், ஆரணியகம், விருக்க மூலிகம், அபியவாகசிகம், சமச்சானிகம், நைசாதிகம், யதாசமஸ்தாரிகம் எனப் பன்னிரண்டாம். இவற்றை இஷ்ட சகஸ்ர பிரக்ஞ பாரமிதை முதலிய பௌத்த நூல்களிற் கண்டுகொள்க மழைமுகில் மலை முதலிய வற்றால் தடைப்பட்டுத் தங்கி யொழிவதுபோல தங்காது நேரே தான் குறித்தவிடம் போதருதலால் ''தங்காது'' என்றும், மழைவர உயிர்கள் தளிர்த்தல்போல் இவள் வரவால் மக்கள் பசி நீங்கி இன்பம் பெறுமாறு தோன்ற ''மாமழைபோல் வந்து தோன்றினள்'' என்றும், வந்து தங்கியிருக்குமிடந்தானும் இது வென்றற்கு ''தருமதவனத்தே'' யென்றுங் கூறினான். சென்று காண்பது நலம் என்பது குறிப்பு.