கச்சிமாநகர் புக்க காதை

       

60




65

புதுக்கோள் யானையும் பொற்றார்ப் புரவியும்
கதிக்குற வடிப்போர் கவின்பெறு வீதியும்
சேணோங் கருவி தாழ்ந்தசெய் குன்றமும்
வேணவா மிகுக்கும் விரைமரக் காவும்
விண்ணவர் தங்கள் விசும்பிட மறந்து

நண்ணுதற் கொத்த நன்னீ ரிடங்களும்
சாலையுங் கூடமுந் தமனியப் பொதியிலும்
கோலங் குயின்ற கொள்கை யிடங்களும்
கண்டுமகிழ் வுற்றுக் கொண்ட வேடமோடு


60
உரை
68

       புதுக்கோள் யானையும் பொற்றார்ப் புரவியும் கதிக்குற வடிப்போர் கவின்பெறு வீதியும்-புதிதாகக் கொணர்ந்த யானைகளையும் பொன்னாலாய கிண்கிணி மாலைகளையுடைய குதிரைகளையும் நடையில் மேம்பாடுறப் பயிற்றும் யானைப்பாகரும் குதிரைவாதுவரும் உறையும் அழகுமிக்க வீதியும், சேண் ஓங்கு தாழ்ந்த அருவி செய் குன்றமும் - மிக்க உயரத்திலிருந்து தாழ வீழுமாறமைந்த நீரருவி பொருந்திய கட்டு மலைகளும், வேணவா மிகுக்கும் விரைமரக்காவும் - மிக்க ஆர்வத்தை மேன்மேற் றூண்டும் நறுமணச் சோலையும், விண்ணவர் தங்கள் விசும்பிடம்மறந்து- தேவர்கள் தம்முடைய விண்ணுலகத்தையும் மறந்து, நண்ணுதற் கொத்த நன்னீரிடங்களும் - அடைதற்கு ஏற்புடைய நல்ல நீரினையுடைய பொய்கைகளும், சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும்-அறச்சாலைகளும் பேரகங்களும் பொன்னாலமைந்த அம் பலமும், கொள்கை கோலம் குயின்ற இடங்களும் கண்டு மகிழ்வுற்று - நிதானவகைகளை உருப்படுத்தி ஓவியத்தால் அழகுறுத்தப் பட்ட தவச் சாலைகளும் ஆகிய அனைத்தயும் கண்டு உளம் மகிழ்ச்சியுற்று;

       குதிரையின் செலவு முதலிய சிறப்பியல்களைக் கூறாது, "பொற்றாரை" விதந்தோதியது, புதிது கொணரப் பெற்றப் பயிற்சி செய்யப் படாமையுணர்ந்து நின்றது. கதி, செலவு, வடித்தல், குற்றம், போக்கி நற்செலவிற் பயிற்றுதல். திருத்தப்படாத சொல்லை, "வடியாக் கிளவி" (சிலப்பதிகாரம்-புறஞ்சேரி இறுத்த காதை, வரி 88) என்று சான்றோர் வழங்குமாறு காண்க. இயற்கை மலைபோல உயரமாகச் சமைத்து அதன் முடியிலிருந்து விழுமாறு அருவிகள் அமைத்த செய்குன்றங்கள் பண்டை நாளில் செல்வமிக்க நகரங்களில் இருந்தன வெனவறிக. உரோம் நாட்டு வரலாறுகளிலும் இத்தகைய செய்குன்றுகளும் செயற்கைச் சோலைகளும் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை உலகின் அற்புதங்களாகவும் குறிக்கின்றனர். துறவியருள்ளத்திலும் இன்ப விழைவு பயக்கும் நலம் பொருந்திய சோலைகள் என்றற்கு, "வேணவா மிகுக்கும் விரைமரக்கா" என்றார். வேட்கை அவா - வேணவா என முடிந்தது. "வேணவாத் தீர்த்த விளக்கே" (பதிகம் 18.) என முன்பும் கூறினர். நீர் நிலைகளில் தெய்வமுறையு மென்பதுபற்றி, "விண்ணவர் "நண்ணுதற் கொத்த நன்னீ ரிடங்கள்" என்றார். "அணங்குடைப் பனித்துறை" (ஐங். 174) எனப் பிறரும் கூறுப. பல மக்களும் ஒருங்கு கூடி இனிதிருக்கும் பேரகத்தைக் கூடமென்றார். பௌத்த முனிவர் இருந்து தவம் புரியுமிடங்களில் பௌத்த நூல்கள் கூறும் நிதானங்கள் ஒவ்வொன்றுக்கும் உருவங் கோலி ஓவியமெழுதி வைப்பது மரபு; இதனை அஜந்தா குகைகளில் குறித்திருப்பது காண்க. கொள்கை - நிதானம் பன்னிரண்டு. இத்தகைய வீதிகளையும் இடங்களையும் காண்போர் எப்பெற்றியராயினும் மகிழ்ச்சி கோடல் ஒருதலையாதலின், "கண்டு மகிழ்வுற்" றென்றார்.