தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

 

காரிய காரண சாமா னியக்கருத்
தோரிற் பிழைக்கையு முண்டுபிழை யாதது
கனலிற் புகைபோற் காரியக் கருத்தே
55 ஏனை யளவைக ளெல்லாங் கருத்தினில்
ஆன முறைமையி னனுமான மாம்பிற

52
உரை
56

        காரண காரிய சாமானியக் கருத்து-காரணானுமாம் காரியானுமானம் சாமானியானுமான மெனப்படும் மூன்று ; ஓரின் - பொதுப்பட நோக்குமிடத்து; பிழைக்கையுமுண்டு-உண்மையுணர் தற்குதவாது குற்றப்படுதலுமுண்டு; பிழையாத்து-அவற்றுள் வழுப் படாதது; கனலிற் புகைபோல் காரியக் கருத்து - கனலும் புகையும் போலக் காரியானுமான மொன்றேயாகும்; ஏனை அளவைக ளெல்லாம் - மற்ற ஆகம முதலாகக் கூறிய அளவைகளெல்லாம்; கருத்தினில் ஆனமுறைமையின்-வழியளவைக்குரியவாகும் முறைமையினையுடையவாதலால்; அனுமானமாம் - கருத்தளவைக்கண் அடங்கும் எ - று.

       
அளவை வாதி ''மூவகை யுற்றது பொதுவெச்ச முதலாம்'' என்று கூறிய அனுமான வகையை மறுத்துரைத்தலின் ''ஓரிற் பிழைக்கையு முண்டு'' என்றார். பொது வென்றது சாமானியச் கருத்தும், எச்சமென் பது காரியக் கருத்தும், முதலென்பது காரணக் கருத்துமாக அறவணவடிகளாற் கொண்டு கூறப்படுக்கின்றன. சாமானியக் கருத்தின்கண், சாதனமும் சாத்தியமும் அந்நுவயமாய் இல்லாமையின், ஐயத்துக்கிடமாம்; கானத்தில் எழும் யானையொலி, அக்கானத்தே இன்னவிடமென வரைந்து காட்டாமையின் பிழையாம் என்று நியாயபிந்து (3. 65) கூறுகிறது, கருமுகில் கண்டவிடத்து மழை பெய்யுமெனத் துணியும் காரணானுமானத்தின் சாதனமாகிய முகில் காரணமாகச் சாத்தியமாகிய மழை வரவு ஒருதலையாய்த் துணியப்படாமையின் பிழையாம். காரணமாகிய முகிற்கும் காரியமாகிய மழை வரவுக்கும் இடைக் காரணமாகக் காற்று முதலிய வுண்மையின் அவாந்தர காரணம் சாத்தியத்திற்குக் கட்டுப்பட்டதன்றாதலால் துணிவு ஒரு தலையாய்ப் பெறப்படாதென்பர்.

       
இவற்றின் விரிந்த ஆராய்ச்சியைத் திக்கநாகர்1 முதலியோர் கூறிய நுல்களிற் கண்டு கொள்க. காரியானுமானத்தின்கண், ஏதுவாகிய காரியத்தின்கண், காரணமாகிய பொருளுண்மை நியதமாதலின் பிழைத்தற்கு இடமின்மைபற்றி, ''பிழையாதது கனலின் புகைபோற் காரியக் கருத்தே'' என்றார். ஆகம மேற்கோள் அதனைக் கூறுவோம் கூறும் பொருளும் என இருதிறமாக வகுக்கப்பெற்றுக் கூறுவோனாயின் ஆகமம் அனுமானத் தடங்குமென்றும் பொருளாயின் காட்சிக்கண் அடங்குமென்றும் திக்கநாகர் கூறுகின்றார். இவ்வாறே ஐதிகத்தை ஆகமத்தும், அருத்தாபத்தியை யனுமானத்தும் நையாயிகரும் வைசேடி கரும் அடக்கிக் கூறுதலின், காட்சியுங் கருத்து மொழிந்த அளவைகள் யாவும் கருத்தினும் காட்சியினும் அடங்குமாறு கண்டு, காட்சிக்கண் அடங்குவன கருத்தின் கண்ணும் அடங்குமென்று தேர்ந்து ''கருத்தனிலான முறைமையின் அனுமானமாம்'' என்றார். பிற: அசைநிலை.

1 பிரமாண சமுச்சயம் ii. 30 Buddhistic Logic, Vol. I. P. 266.