தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

 

பக்க மேதுத் திட்டாந்த முபநயம்
நிகமன மென்ன வைந்துள வவற்றிற்
பக்க மிம்மலை நெருப்புடைத் தென்றல்
60 புகையுடைத் தாதலா லெனல் பொருந்தேது
வகையமை யடுக்களை போற்றிட் டாந்தம்
உபநய மலையும் புகையுடைத் தென்றல்
நிகமனம் புகையிடைத் தேநெருப் புடைத்தெனல்

57
உரை
63

       பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம் நிகமனம் என்ன ஐந்துள - மேற்கோளும் ஏதுவும் எடுத்துக்காட்டும் உபநயமும் நிகமனமும் என ஐந்து உறுப்புக்கள் கருத்தளவைக்குண்டு; அவற்றிற் பக்கம் இம்மலை நெருப்புடைத்து எனல் - அவ்வைந்தனுள் மேற் கோளாவது இம்மலை நெருப்பை யுடையது என்று மொழிதல் ; பொருந்து ஏது புகையுடைத்தாதலால் எனல் - இம்மேற்கோளைச் சாதித்தற்குப் பொருந்திய ஏதுவாவது புகையுடைமையால் என்பது; திட்டாந்தம் வகையமை அடுக்களைபோல் - எடுத்துக் காட்டாவது பலவகைப்பட்ட அடுக்களை போல என்று சொல்லுதல்; உபநயம் மலையும் புகையுடைத் தென்றல் - உபநயமாவது இம்மலையும் புகையுடையதாம் என்பது; நிகமனம் புகையுடைத்தே நெருப்புடைத்து எனல்-நிகமனமாவது யாது யாது புகையுடையது அது நெருப்புடையது என்று துணிந்து கூறல் எ - று.

       
ஆதி சினேந்திரன் கூறிய இருவகை யளவைகளையும் முறையே கூறுவார், அளவைவாதி அவ்விருவகையையும் பற்றிக் கூறியவற்றை மேற்கொண்டு அவற்றுள் தம் சமயக் கருத்துக்கொவ்வாதனவற்றை விலக்கித் தூய்மை செய்து வந்தாராகலின், இனி அனுமானத்துக்கு உறுப்பாகிய ஐந்தையும் விளக்கிக் கூறுவாராயினார். அனுமானம் தன் பொருட்டென்றும் பிறர் பொருட்டென்றும் இரு வகைப்படும் என எல்லாப் புத்தநூல்களும் கூறியிருப்பவும், இவ்வாசிரியர் கூறாராயினார். இவ்வகைமையை ஏனோரும் மேற்கொண்டிருத்தலின் பதார்த்த தரும சங்கிரக முடையார் சுநிச்சிதார்த்தம் என்றும் பரார்த்தம் (பக். 231) என்றும், நியாயபிந்து டீகையுடையார் ஞானான்மகம், சத்தான்மகம் (பக்.21) என்றும், சத்த பதார்த்தியுடையார் அருத்தரூபத்வம் சத்தரூபத்வம் (பக். 154) என்றும் கூறுப. புத்தருட் சிலர் பக்க முதலிய வைந் துறுப்பும் பரார்த்தானுமானத்துக்குரிய வென்றும் பக்க முதலிய மூன்று சுவார்த்தானுமானத்துக்குரிய வென்றுங் கூறுபவாயினும் இவ்வகைகள் பெயரால் வேறுபடினும் கருத்து ஒன்றாதல் காண்க. வாற்சாயனர் இவ்வைந்தனோடு, ஜிஞ்ஞாசம், சமுசயம், சக்கிய பிராப்தி, பிரயோசனம், சமுசய வியுதாசம் என்ற ஐந்தும் கூட்டிப் பத்தாகக் கூறுவ (நியாயபாடி 1. 1. 32)"ரென்றும். பத்திரபாகு வென்பார், இப்பத்தையும் பெயர் வேறுபடுத்து, பிரதிஞ்ஞை, பிரதிஞ்ஞாவிபத்தி, ஏது, ஏதுவிபத்தி, விபக்கம், விபக்கப் பிரதிசேதம், திருட்டாந்தம், ஆகாங்ஷை, ஆகாங்ஷா பிரதிசேதம், நிகமனம் என்று கூறுவதரென்றும் பேராசிரியர் இராதாகிருட்டினனார்1 எடுத்துக்காட்டுகின்றார். பக்கம், தன்பக்கம் மறுதலைப் பக்கம் என வகுக்கப்பட்டுச் சபக்கம்விபக்கம்என மேலே வழங்குபவாதலின், ஈண்டு மேற்கோளென்றாதல் பிரதிஞ்ஞை என்றாதல் கூறாராயினார். பொருந்தேது என்றதனால், பொருந்தாஎது வென்பதுண்டென்றும், அது குற்றமுடைத்தென விலக்கப்படுமெனவும் அறிக. அடுக்களை, ஒரு கிளையும் பல கிளையுமுடையவாய்ப் பல வகைப்படுவதுபற்றி, "வகையமை அடுக்களை" யென்றார் ; இனி, "வகையமை யடுக்களை" யென்றற்கு, "துணிபொருள் வகையும் எதுப்பொருள்
வகையும் பொருந்தியுள்ள பாகசாலை" யென்றும், "முறையானமைந்த பாகசாலைபோலும் எனக் கொள்வது மொன்" றென்றும், "முறையாவது வியாப்தி வசனத்துடன் கூறுதல்"; என்றும் கூறுவர்2
திரு. நாராயணையங்காரவர்கள். பக்கப் பொருளை ஏது திட்டாந்தங்களா லுண்மையெனத் துணிந்தபின் அத்துணியை யெடுத்தோதுவதுஉபநய மாதலின், "மலையும் புகையுடைத் தென்ற" லென்றார். திட்டாந்தப் பொருளைத் தழுவி நிற்றலின் உம்மை எச்சப் பொருட்டு.

1 Indian Philosophy p. 80.(2nd Edn.) 2; செந்தமிழ் Vol. 34.பக். 46.