தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

       



80
அநன்னு வயத்திற் பிரமாண மாவது
இவ்வெள் ளிடைக்கட் குடமிலை யென்றல்
செவ்விய பக்கந் தோன்றாமை யில்லெனல்

பக்க தன்ம வசன மாகும்
இன்மையிற் கண்டில முயற்கோ டென்றல்
அந்நெறிச் சபக்கம் யாதொன் றுண்டது
தோற்றா வடுக்குங் கைந்நெல்லி போலெனல்
ஏற்ற விபக்கத் துரையென லாகும்

77
உரை
84

       அநந்நுவயத்திற் பிரமாணமாவது - அந்நுவய வியாத்தி யில்லாத அநந்நுவய அநுமானத்தாற் பொருளை யுணருந் திறமாவது; இவ்வெள்ளிடைக்கண் குடம் இலை என்றல் செவ்விய பக்கம்- இவ் வெற்றிடத்தில் குடம் இல்லை என்பமு நல்ல பக்க மொழியாகும்; தோன்றாமையில் எனல் பக்க தன்ம வசனமாகும் - தோன்றாமையால் என்னும் ஏது பக்க தன்ம வசனமாம்; இன்மையின் கண்டில முயற்கோடுஎன்றல் அந்நெறிச் சபக்கம்-யாதொன்று வெள்ளிடை இல்லையோ அதனைக் காண்பது இல்லை, முயற்கோடு போல என்பது அந்நெறியிற் பெறப்படும்சபக்கத் தொடர்ச்சியாம்; யாதொன்று உண்டு அது தோற்றரவு அடுக்கும் கை நெல்லிபோல் எனல் - யாதொன்று வெள்ளிடை யுள்ளதோ அது காணப்படும், கையகத்துற்ற நெல்லிக்கனுபோல என்பது; ஏற்ற விபக்கத்து உரை எனலாகும் - அதற்கேற்ற விபக்கத் தொடர்ச்சி மொழியாகும்
எ - று.

        ஏற்புடைய சொற்கள் வருவிக்கப்பட்டன. வெள்ளிடை யென்றது சபக்க விபக்கங்கட்குக் கூட்டியுரைக்கப்பட்டது. அந்நுவய வியாத்தியில்லாதது அநந்நுவயம் என்றாயிற்று. பிரமாணம், அளத்தற் கருவி மேனின்றது. வெள்ளிடை யென்பதே குடமின்மை உணர்த்து மென்பாரை மறுத்தற்குச் "செவ்விய பக்க" மென்றார். முயற்கோ டென் புழித் திருட்டாந்த வியைபாகிய உவம வுருபு எஞ்சி நின்றது. தோற்றரவடுக்கு மென்பது ஒரு சொல்லாய்த் தோன்றுமென்பது பட நின்றது. வெள்ளிலையை வெற்றிலை யென்பதுபோல வெற்றிடம், வெள்ளிட மென வந்தது. வெண்மை, வெறுமை மேற்று. இல் : ஏதுப்பொருட்டாய ஐந்தாவதனுருபு. காண்டல் இலவென்பது கண்டில வென வந்தது. கண்டில மெனக்கொண்டு காண்ப தில்லே மென்றும், முயற்கோடு கண்டில எனவியைத்து முயற்கோடுகள் காணப்பட்டில வென்றும் கூறலுமொன்று. யாதொன் றுண்டென்புழி, உண்மை, கண் முதற் பொறிகட்குத் தோன்ற வுளதாதல்.