தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

       

165
ஆகம விருத்தந்தன் நூன்மா றறைதல்
அநித்த வாதியா யுள்ளவை சேடிகன்
அநித்தி யத்தைநித் தியமென நுவறல்

164
உரை
166

       ஆகம விருத்தம் - ஆகம விருத்தமெனப்படுவது; தன்நூல் மாறு அறைதல் - தான் ஆதரவாக மேற்கொள்ளும் நூலுக்கு மாறாகக் கூறுவது; அநித்த வாதியா உள்ள வைசேடிகன் - சத்தம் அநித்த மென்று நூன்முகமாக மேற்கொள்ளும் வைசேடிகவாதி; அநித்தியத்தை நித்தியம் என நுவறல்-சத்தம் அநித்த மென்னாது நித்தம் என்று சொல்லுவது போல்வது எ - று.

         வைசேடிக நூல்கள் "அவயவதிரவியங்கள்" சார்பு பொருள்களாதலின் அநித்த மென்றும், சத்தமும் அவ்வகையால் அநித்தமென்றும் கூறுவது பற்றி, "அநித்தவாதியாவுள்ள வைசேடிகன்" என்றார் மெய்யுணர்வுப் பேற்றுக்குக் கருத்தும் ஆகமமுமே நேரிய வாயில்கள்1 என்று விதந்து கூறும் இயல்புபற்றி ஏனை அநித்தவாதிகளைக் கூறாது வைசேடிகனை எடுத்தோதினாரென வறிக. நியாயப் பிரவேச முடையாரும் இதற்கு இலக்கணங் கூறிற்றிலராயினும், "வைசேடிகன் சத்தம் நித்த மென்பது" என்றே கூறுகின்றார். இனி, பிரசத்த பாதர் இதற்கு அசற் காரியவாதியாகிய வைசேடிகன் சற்காரிய வாதங்கூறல் ஆகம விரோதம் என்பர். இவ்வைந்தனையும் ஆராய்ந்த ஆசிரியன்மார் உலக விருத்தத்தை ஆகம விருத்தத்திலும் ஆகம விருத்த சுவவசன விருத்தங்களை முதலிரண்டிலும் அடக்கிக் கூறுவோரும், அடக்கலாகாதென மறுத்துக் கூறுவோரும் பலர். அவற்றை நியாய கந்தலி முதலியநூல்களிற் கண்டு கொள்க.

1 வைசேடிக சூத்திரம். iii. 2. 8. 12.