தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

       

ஏதுப் போலி யோதின்மூன் றாகும்
அசித்த மநைகாந் திகம்விருத் தம்மென

191
உரை
192

       ஏதுப்போலி ஓதின் -ஏதுப்போலி யெனப்படும் தீய வேதுவை வகுத்துக் கூறுமிடத்து; அசித்தம் அநைகாந்திகம் விருத்தம் என - அசித்தமென்றும் அநைகாந்திகமென்றும் விருத்த மென்றும்; மூன்றாகும் - மூவகைப்படும் எ - று.

         ஏதுப் போலியை அசித்தம் முதலிய மூன்றாக வகுத்துப் பின்னொவ் வொன்றையும் முறையே நான்கும் ஆறும் நான்குமாக விரித்துக் கூறுப வாதலின், அந் நெறிமை தோன்ற, ''ஓதின்'' என்றார். அசித்தமாவது ஏது பொருந்தாமையாற் கருதிய பயன் சித்தியாதொழிதல்; அநை காந்திகமாவது ஒரு முடிபுமின்றி யொழிவது; விருத்தமாவது ஏதுவானது வேண்டும் பயனைச் சாதியாது முரண்விளைத் தொழிவது. இனி 1நியாயப் பிரவேசமுடையாரும் ஏது வாபாசம் அசித்த முதலியமூன்று வகைப்படுமென்றேகூறுகின்றார்; மற்று, கோதமர், சவ்வியபிசாரி, விருத்தம் பிரகரண சமம், சாத்திய சமம். காலாதீதம் என ஐவகையாகவும் பிரசத்தபாதர், அசித்தம், விருத்தம், சந்திக்தம், அனத்தியாவசிதம் என நான்கு வகையாகவும் வேறு சிலர் ஆறுவகையாகவும் கூறுப, ஆராய்ச்சியாளர், அசித்தமென்னும் ஏதுப்போலிவகை வடநாட்டு அளவை நூலார்க்குப்2 பிற்காலத்தே தெரியவந்ததென்பர். ஏனை அநைகாந்திக மும் விருத்தமும் அளவை நூலார் பலர்க்கும் பண்டே தெரிந்தனவாம்.

நியா. பிர. பக். 3-8 2 Ind. Logic. P. 190.