தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

       


200

அன்னியதரா சித்த மாறாய் நின்றாற்கு
உன்னிய வேது வன்றா யொழிதல்

சத்தஞ் செயலுற லநித்த மென்னிற்
சித்த வெளிப்பா டல்லது செயலுறல்
உய்த்த சாங்கியனுக் கசித்த மாகுஞ்


198
உரை
202

       அநித்தியதராசித்தம் - அன்னிய தராசித்த மென்னும் அசித்தப் போலியாவது; மாறாய் நின்றாற்கு-பிரதிவாதியாய் நின்ற ஒருவனுக்கு; உன்னிய ஏது அன்றாய் ஒழிதல் - வாதியாகிய தான் எடுத்துக்கூறிய ஏது அவனால் ஏன்னுக்கொள்ளப்பட்ட சாதன மாகாது போவதாம்; சத்தம் அநித்தம் செயலுறல் என்னில் - சத்தம் அநித்தம் செய்கையிற் றோன்றுதலால் என்று பிரதிவாதியாய் நிற்கும் சாங்கியனொருவனுக்குச் சொன்னால் உய்த்த சாங்கியனுக்கு - சொல்லப்பட்ட சாங்கியனுக்கு; சித்தவெளிப்பாடு அல்லது - செயலிடைத் தோன்றுதலென்பது காரணமாகிய முலப் பகுதி செய்கைக்கண் சத்தமாய்த் தோன்றுகிறதென்று விளங்குமே யின்றி; அசித்தமாகும் - அநித்தியத்துவத்தைச் சாதிக்கும் சாதனமாகாது பயனில் ஏதுவாம் எ - று.

         அநித்தியதராசித்தமென்பதே உண்மைப்பாடம்;1அன்னியதாசித்த மென்பது உற்பாத காரணத்துக் கூறப்படும் குற்றமாதலாலும், ஈண்டு அனுமானத்துக்கு வேண்டும் ஏதுக்கட்காகா வென்ற குற்றமே கூறப் படலாலும் 'இம்மணிமேகலையைப் பின்பற்றி யெழுந்த நியாயப் பிரவே சத்து அன்னியதராசித்தமென்ற பாடமே காணப்படலாலும், பிரசத்த பாதர் முதலாயினோரும் ஏதுப்போலி வகைகளுள் அன்னியதராசித்தம் என்றே ஏதுப்போலி காட்டுதலாலும் அன்னியதாசித்தம் என்ற பாடம் பொருந்தாமை யறிக. திரு. நாரயணைங்காரும்2 அன்னியதராசித்த மென்றே பாடங்கோடல் நேரி தென்பர். அன்னியதரன், வாதி பிரதிவாதி யிருவரில் ஒருவன். பக்கவசனத்துக் கூறிய பொருளைச் சாதித்தற்குத் தக்கதென மேற்கொண்டு கூறுதலின், "உன்னியஏது" என்றும் அற்றாயினும் அது போலியாயிற்றென்றற்கு இவ்வாறு சிறப்பித்தும் கூறினார். செயலுறல் என்புழி, உறல் என்பது தோன்றுதல் என்னும் பொருட்டு. உறல் என்புழி, ஆனுருபு விகாரத்தாற்றொக்கது. சித்தம், மூலப்பகுதி, சத்தம் முதலிய யாவும் மூலப்பகுதியின் காரிய மென்றும், காரணவடிவில் தோற்றமின்மையும் காரியவடிவில் தோற்றமுடைமையும் பொருட்கியல்பென்னும் சற்காரியவாதியாதலின், சாங்கியன் செயலிடைத் தோன்றுவனயாவும் புதியவல்ல; காரணமாகிய மூலப்பகுதியின் காரியமென்றே கருதுதலால், அவற்கு இச்செயலிடைத் தோன்றலால் என்னும் ஏது, சத்தமாகிய தன்மியின் கண்ணும், அநித்தமாகிய தன்மத்தின்கண்ணும் பொருந்தாதொழிதலால், அசித்தமாம் என்பார், "உய்த்த சாங்கியனுக்குச் சித்த வெளிப்பா"டென்றும், சாதன சாத்திய வகையில் "அசித்தமாகும்" என்று கூறினார். சாதனமாகிய ஏதுவைக்கொண்டு பக்க வசனப் பொருளைக் கருதுதற்குச் சமைந்த சாங்கியன் என்றற்கு, "உய்த்த சாங்கியன்" என்றும் உய்த்துணருமிடத்து இது குற்றமென மேற்கொள்ளா னென்றும் கூறியவாறு அறிக. இங்குக் காட்டப்பட்ட எடுத்துக்காட்டே பதார்த்த தரும சங்கிரகத்தும் நியாயப்பிரவேசத்தும் காணப்படுகிறது. இவ்விரண்டும் முறையயே மீமாஞ்சகனையும் சாங்கியனையும் பிரதிவாதியாகக் கொள்ளுகின்றன.

1 முதல் துணை நிமித்தமெனக் கொண்டு செய்யும் காரணகாரிய வாராய்ச்சிக்கண் அன்னியதாசித்த மென்ற குற்றவாராய்ச்சி நிகழ்த்தப் படுதலை சித்தாந்த முக்தாவளி முதலிய வடநூல்களுட் காண்க.
2 செந்தமிழ் XXXii. பக். 207.