பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை



பவமெனப் படுவது கரும வீட்டந்
தருமுறை யிதுவெனத் தாந்தாஞ் சார்தல்

93
உரை
94

        பவம் எனப்படுவது - பவமென்று சொல்லப்படும் நிதானமாவது ; கரும ஈட்டம் - கருமங்களின் தொகுதி ; தரும் முறை இது என - தன் பயனை விளைத்துக் கொடுக்கும் முறைமை யிதுவாகு மென்று கருதி ; தாம்தாம் சார்தலை - கருமத்தைச் செய்தோர் அப் பயனையுடன்பட்டு என்று கொண்டமைவதாம் எ - று. உடன்பட்டு என்று கொண்டமைவதாவது,1 'நன்றாங்கால் நல்ல வாக் காண்பவன் அன்றாங்கால் அல்லற்' படாது அதன் விளைவாய துன்பத்தையும் நுகர்தற்குச் சமைந்தவுள்ள முடையனாதல். இதற்குப் பலரும் பலவாறாகக் கூறுகின்றனர். க்ஷேமேந்திரர் பவமாவது உருவு கோடலென்று கொண்டு, அது காமம், ரூபம், அரூபமென மூவகைப் படுமென்பர். ஒல்டன்பர்க் கென்பார், பிறப் பிறப்புக்களின் இடைய றாமை யென்பர். வடநாட்டுப் பௌத்தர்கள், பவத்தைத் திருமணம் போலவும் தோற்றத்தை மகப்பேறு போலவும் கொள்கின்றனர். இவர் கருத்தை யுணராது பலரும் பலவாறு கூறி இடர்ப்படும் திறத்தை ஹார் தயாள் என்பார்2 தாமெழுதிய ஆராய்ச்சி நூலில் விரியக் கூறுமாற்றா லறிக. முன்னைப் பிறப்புக்களிற் செய்த பற்றுக் காரணமாக வரும் பிறப்புக்கிடையே, பற்றுக் காரணமாக விளைந்த கருமத்தொகுதியில் வரக் கடவ நன்மை தீமைகட்கு இப்பவ மென்னும் நிதானம், இடமும் காலமுமா யமைவதென்பது பௌத்தநூல்கிளன் துணிபென வறிக. திபேத்தியர் இதனை ஒரு மணமகளாக வுருவங் கற்பிக்கின்றனர்.
1 பக் . 323. 2 Bodhi Sathva Docrine P. 242.