பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை



100

பிணியெனப் படுவது சார்பிற் பிறிதாய்
இயற்கையிற் றிரிந்துடம் பிடும்பை புரிதல்
மூப்பென மொழிவ தந்தத் தளவுந்
தாக்குநிலை யாமையிற் றாந்தளர்ந் திடுதல்
சாக்கா டென்ப தருவுருத் தன்மை
யாக்கை வீழ்கதி ரெனமறைந் திடுதல்

98
உரை
103

        பிணியெனப்படுவது - நோய் என்று சொல்லப்படுவது ; பிறிது சார்பாய் - பேதைமை முதலாகக் கூறியவற்றின் வேறாய சார்பாய், உடம்பு இயற்கையின் திரிந்து-உடம்பின் தன்மையின் வேறுபட்டு; இடும்பை புரிதல் - அதற்குத் துன்பத்தை யுண்டு பண்ணுவதாம்; மூப்பென மொழிவது-மூப்பென்று சொல்லப்படுவது; அந்தத்து அளவும் - சாகும் வரையில்; தாக்கும் நிலையாமையின் -வந்து மோதுகின்ற நிலையாமையால்; தளர்ந்திடுதல்-உடம்பு தளர்ச்சி யெய்துவதாம்; சாக்காடென்பது-இறத்தலென்று சொல்லப்படுவது; அருவுருத்தன்மை யாக்கை-அருவாதலும் உருவாதலு மாகிய தன்மையினையுடைய வுடம்பானது; வீழ்கதிரென மறைந் திடுதல்-மேலைக் கடலில் விழும் ஞாயிறுபோல மறைவதாம் எ - று.

       
பிணியும் மூப்பும் சாக்கடுமென இவர் கூறினாராக வடநூலார் பலரும் திரையும் மரணமுமென்ற இரண்டையே கூறுவர் ; சிலர் பிணியைக் கூட்டித் திரையும் பிணியும் மரணமும் என்பர். சிலர் இவற்றோடு அவலமும் கவலையும் கையாறும் அழுங்கலும் பிறவும் கூட்டிக் கூறுவர். இப் பிணி முதலியன தோற்றம் சார்வாகத் தோன்றுவனவாயினும் தம்முள் ஒன்றற்கொன்று சார்வாகாமையின், "சார்பிறிதாய்" என்றார் ; இதனைப் பிறிது சார்பாய் என மாறிக்கொள்க. உடம்பின் இயல்பான தன்மையில் உளதாகும் திரிபே நோய் என்பார். "இயற்கையின் திரிந்து" என்றும், இதனால் விளையும் பயன் இதுவென்பார், "இடும்பை பிரிதல்" என்றும் கூறினார். அந்தம் - சாக்காடு. கணந்தோறும் நிலையாமை

       
யெய்துதலின், "தாக்கும் நிலையாமை"யென்றும், அதன் தாக்கு தற்காற்றாது உடம்பு தளர்ச்சியடைகிறதென்பார், "தாக்கும் நிலையாமை யிற்றாந் தளர்ந்திடுதல்" என்றும் குறிப்பித்தார். உருவ வகையால் காயமென்றும், அருவவகையில் தன்மம், சித்தம், வேதனை என்றும் உடம்பானது போதி சத்துவரால் உணரப்படுவது பற்றி "அருவுருத் தன்மை யாக்கை" என்றார். உடம்பு, புறவுடம்பு, அகவுடம்பு, அகப்புற வுடம்பு எனக் காணப்படும் வழக்கும் புத்தர்களிடையே யுண்டு, "இளங் கதிர் ஞாயி றெள்ளுந் தோற்ற" த்தோடு விளங்கும் உடம்பு, இறக்குங் கால் அதன் வீழ்ச்சி போறலின், "வீழ் கதிரென மறைந்திடுதல்" என்றார். திபேத்தியர்களால் இங்கே கூறிய பிணி மூப்பு முதலியன சுடலைக்குக் கொண்டுபோகப்படும் பிணம்போல உருவமெழுதப்பட்டுள்ளன.