பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை

205

இயைந்துரை யென்ப தெழுத்துப்பல கூடச்
சொல்லெனத் தோற்றும் பலநாட் கூடிய
எல்லையைத் திங்க ளென்று வழங்குதல்

205
உரை
207

        இயைந்துரை என்பது-இயைந்துரை என்று சொல்லப்படுவது; எழுத்துப் பல கூடச் சொல்லெனத் தோற்றும் - எழுத்துக்கள் பல கூடிய வழிச் சொல்லென்பது தோற்றுமாறு போலன்றி; பல நாள் கூடிய எல்லையை - பல நாட்கள் கூடிய ஒரு கால வெல்லையை; திங்கள் என்று வழங்குதல் - திங்களென்று வழங்குவது போல்வது எ - று.

       
எழுத்துக்களின் கூட்டத்தால் உண்டாகும் சொல் தொகைத் திறமாதலின், அதனை விலக்கி, இத்துணையென வரையறுக்கப்பட்டவற்றின் கூட்டம் "இயைந்துரை"யென்றார். அன்றி யென்பது அவாய் நிலை. முப்பதும் முப்பத்தொன்றும் முப்பத்திரண்டும் இருபத்தொன்பதுமாய்த் திங்களின் நாளெல்லை வேறுபடுதலின், "பல நாள் கூடிய எல்லை" என்றார். ஆனித்திங்கள் முப்பத்திரண்டு நாட்களும் சித்திரை முதலியன முப்பத்தொரு நாட்களும் ஐப்பசி முதலியன முப்பது நாட்களும் கார்த்திகை இருபத்தொன்பது நாட்களும் கொண்டிருத்தல் காண்க. வரையறைப்படாத பல பொருள்தொகுதி தொகை யெனவும், வரையறைப்பட்ட பல பொருள் தொகுதி இயைந்துரையெனவும் வழங்குப.