பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை


230




தொக்க பொருளல தொன்றில்லை யென்றும்
அப்பொரு ளிடைப்பற் றாகா தொன்றுஞ்
செய்வா னொடுகொட் பாடிலை யென்றும்
எய்துகா ரணத்தால் காரிய மென்றும்
அதுவு மன்றத லாதது மன்றென்றும்
விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும்

229
உரை
234

        இவற்றின் நாம் கொள்பயன்-இந்நால்வகை நயங்களாலும் நாம் கொள்ளும் பயன்களாவன; தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும் - எல்லாம் காரண காரியமாய்த் தொக்க பொருள்களேயன்றித் தனியே ஒன்று கிடையாதென்றும்; அப் பொருளிடைப் பற்று ஆகாதென்றும் - அப்பொருள்களிடத்தே பற்று வைத்தல் கூடாதென்றும்; செய்வானொடு கோட்பாடு இலை என்றும் - வினை முதலாகிய கருத்தாவொடு செய்கைக்கு இயைபு கொள்ளுதல் இல்லை யென்றும்; எய்து காரணத்தால் காரியம் என்றும் - பொருந்துகின்ற காரணத்தினால் காரியம் பிறக்குமென்றும்; அதுவும் அன்று அது அலாததுமன்று என்றும் - அது காரண காரியமுமன்று அல்லாதது மன்று என்றும்; விதிமுறை - முறை முறையாக; தொகையினால் நான்கும் விரிந்த - தொகை முதலியவற்றால் நான்காய் விரிந்தன எ - று.

       
காரண காரியமாய்த் தொக்கவற்றை ஒற்றுமை நயத்தால் ஒன்றாய்க் காண்டலின், எல்லாம் தொக்க பொருள் எனத் துணிவது ஒற்றுமை நயத்தாலாம் பயன் என்றார். ஒற்றுமை நயத்தாற் சுகமென்றும் துக்கமென்றும் தோன்றுவன வேற்றுமை நயத்தால் பல்வேறு கூறுகளாய் வேறுபட்டுத் தோன்றுதலின், "அப் பொருளிடைப் பற்றாகா" தென்பது பயனாயிற்று. செய்வோனாகிய காரணத்தால் நிகழும் செய்கையும் கருமமும் புரிவின்மை நயத்தால் உணர வாராமையின், "செய்வானொடு கோட்பாடிலை" யென்பது பயனாயிற்று. நெல்வித்தினின்று நெல் முளை தோன்றக் காணும் இயல்பு நயத்தலால் காரணத்தினின்று காரியம் பிறக்கு மென்ற உணர்வும், வித்து முளையாகாமையும், முளை வித்தின் வேறன்றென்பதும் பயனாயின. இவ்வாறு ஒவ்வொரு நயமும் முறையே பயனை விளைத்தலின், "விதி முறை விரிந்த" என்றார். விரிந்த: அன் பெறாது முடிந்த அஃறிணைப் பன்மை முற்றுவினை.