மலர்வனம் புக்க காதை

       
80




85

அவ்வன மல்ல தணியிழை நின்மகள்
செவ்வனஞ் செல்லுஞ் செம்மை தானிலள்
மணிமே கலையொடு மாமலர் கொய்ய
அணியிழை நல்லாய் யானும் போவலென்
றணிப்பூங் கொம்பர் அவளொடுங் கூடி
மணித்தேர் வீதியிற் சுதமதி செல்வுழீ இச்


80
உரை
85

       அவ்வனம் அல்லது-அச்சோலையின்கணல்லது, அணியிழை- மாதவியே, நின்மகள் செவ்வனம் செல்லும் செம்மைதான் இலள்- நின்மகள் வேறாகச் செல்லும் தகுதியில்லாதவள்; மணிமேகலையொடு மாமலர் கொய்ய - மணிமேகலையுடன் மலர் கொய்யுமாறு, அணியிழை நல்லாய் யானும் போவல் என்று-அழகிய அணிகலனை யுடைய மாதவி யானும் செல்வேன் என்று,அணிப்பூங் கொம்பர் அவளொடும் கூடி - அழகிய பூங்கொம்பனைய மணிமேகலையுடன் சேர்ந்து, மணித்தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ - மணிகளுடன் கூடிய தேர்கள் செல்லும் வீதியின்கண் சுதமதி செல்லும்பொழுது;

      செவ்வனம் - வேறாக; 1 "திருமக யிருக்கை செவ்வனங் கழிந்து" என்பழி, செவ்வனம் கழிந்து எனபதற்கு, வேறாகக் கழிந்து என்று அடியார்க்கு நல்லார் பொருளுரைத்துள்ளமை காண்க ; நேராக என்றுமாம். செம்மை - ஈண்டுத் தகுதி.

1 சிலப். 6 : 127.