மலர்வனம் புக்க காதை

       




15

மாதவி மணிமே கலைமுகம் நோக்கித்
தாமரை தண்மதி சேர்ந்தது போலக்
காமர் செங்கையிற் கண்ணீர் மாற்றித்
தூநீர் மாலை தூத்தகை இழந்தது
நிகர்மலர் நீயே கொணர்வா யென்றலும்
மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும்
சுதமதி கேட்டுத் துயரொடுங் கூறும்


11
உரை
17

      மாதவி மணிமேகலை முகம் நோக்கி-மாதவி மணிமேகலையின் முகத்தினைப் பார்த்து, தாமரை தண்மதி சேர்ந்ததுபோலக் காமர் செங்கையில் கண்ணீர் மாற்றி-செந்தாமரை மலர் குளிர்ச்சி பொருந்திய முழுமதியைச் சேர்ந்ததுபோலத் தன் விருப்பம் பொருந்திய சிவந்த கையினால் மணிமேகலையின் கண்ணினின் றொழுகும் நீரைத் துடைத்து, தூநீர் மாலை தூத்தகை இழந்தது - தூய நீர்மையையுடைய நறுமலர் மாலை கண்ணீரால் நனைந்து தூய தன்மையை இழந்தது ஆகலின், நிகர்மலர் நீயே கொணர்வாய் என்றலும்-வேறு மாலை தொடுத்தற்கு ஒளி பொருந்திய மலர்களை நீயே சென்று கொண்டுவருக என உரைத்தலும், மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும்-தேன்பொருந்திய மலர்களை யணிந்த கூந்தலையுடைய மணிமேகலையுடன் மலர் தொடுத்துக்கொண்டிருக்கும், சுதமதி கேட்டுத் துயரொடும் கூறும் - சுதமதி யென்பவள் அதனைக் கேட்டுத் துயருடன் கூறுகின்றாள் ;

       மாதவி நோக்கி, மாற்றி, கொணர்வாய் என்றலும், சுதமதி கேட்டுக் கூறுமென்க. போல - போலும்படி, தாமரை மலர் மாதவி கைக்கும், மதி மணிமேகலை முகத்திற்கும் உவமை. காமர் - விருப்பம் ; உடையாளது விருப்பம் கையின்மேல் ஏற்றப்பட்டது ; அழகுமாம். நிகர்-ஒளி ; 1"நீர்வார் நிகர். மலர்" 2"அரும்பவிழ் முல்லை, நிகர் மலர்" என்பன காண்க. நீயே கொணர்வாய் என்றது கழுவாய் கூறுவது போன்று அவளது துயரினை மாற்றுவதோ ருபாயங் கருதியாம்.

1 அகம். 11.  2 சிலப். 9 : 1-2.