மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை

       


15


குருகுபெயர்க் குன்றங் கொன்றோ னன்னநின்
முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால்
பருகா ளாயினிப் பைந்தொடி நங்கை
ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி
காமற் கடந்த வாய்மைய ளென்றே
தூமலர்க் கூந்தற் சுதமதி யுரைப்பச்


13
உரை
18

       குருகு பெயர்க் குன்றங் கொன்றோன் அன்ன நின் முருகச் செவ்வி- கிரவுஞ்ச மலையை எறிந்த முருகவேளை யொத்த நினது இளமை யழகினை, முகந்து தன் கண்ணால் பருகாள் 1ஆயின் பைந்தொடி நங்கை-ஆராயுமிடத்துப் பசிய வளையல்களை யணிந்த மணிமேகலை தன் கண்களால் முகந்து பருகாள், ஊழ்தரு தவத்தள் - முறையாகப் பெற்ற தவத்தினையுடையள், சாபசரத்தி-சாபமாகிய அம்பையுடையவள், காமற் கடந்த வாய்மையள் என்றே - காமனை வென்ற மெய்ம்மையை யுடையவள் என்று, தூமலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப-தூய மலரணிந்த கூந்தலையுடைய சுதமதி கூற ;

       குருகு-அன்றில்; கிரவுஞ்சம்; அதன் பெயர் பெற்ற குன்றமென்க ; 2 "குருகுபெயர்க்குன்றங் கொன்ற நெடுவேலே" "குருகுபெயர்க்குன் றங்கொன்றான்" என்பன காண்க. முருகு-இளமை ; ஈறு திரிந்தது ; ஊழ்தரு தவத்தள்- ஊழினாலே தரப்பட்ட தவத்தினள் என்றுமாம் ; என்னை? 3 தவமுந் தவமுடையார்க் காகும்" என்பவாகலின். சாப சரத்தி - வில்லையும் அம்பையும் உடையாள் என்பதோர் பொருளும் தோன்ற நின்றது ; சாபம் - வில். ஆயின், நங்கை பருகாள் ; தவத்தள் ; சரத்தி ; வாய்ம்மையள் ; என்று உரைப்பவென்க.


பா. வே. ஆயினிப் பைந்தொடீ என்பதும் பாடம்.  2 சிலப். 34 : 'சரவண' : ஆய்வளை. 3 குறள். 262.