மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை

       

20




25


சிறையு முண்டோ செழும்புனல் மிக்குழீஇ
நிறையு முண்டோ காமங் காழ்க்கொளின்
செவ்விய ளாயினென் செவ்விய ளாகென
அவ்விய நெஞ்சமோ டகல்வோ னாயிடை
அஞ்செஞ் சாய லராந்தா ணத்துளோர்
விஞ்சைய னிட்ட விளங்கிழை யென்றே
கல்லென் பேரூர்ப் பல்லோ ருரையினை
ஆங்கவ ருறைவிடம் நீங்கி யாயிழை
ஈங்கிவள் தன்னொ டெய்திய துரையென


19
உரை
27

       சிறையும் உண்டோ செழும்புனல் மிக்குழீஇ- வளவிய நீர் மிகுந்த விடத்து அதனைத் தாங்கும் அரணும் உண்டோ, நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்-அவ்வாறே காமம் அடிப்படின் அதனை நிறுத்தும் தன்மையும் உளதாகுமோ, செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆகென - செவ்வியையுடையளாயின் என்னை ? அவள் செவ்வியளாகட்டும் என்று, அவ்விய நெஞ்சமொடு அகல் வோன்-பொறாமை கொண்ட உள்ளத்தோடும் நீங்குவோன்,ஆயிடை-அப்பொழுது, அம்செஞ் சாயல் - அழகிய சிவந்த சாயலையுடையாய் அராந்தாணத்துள்-சமண் பள்ளியில், ஓர் விஞ்சையன் இட்ட விளங்கிழை என்றே-ஒரு விஞ்சையனாலிடப்பட்ட மெல்லியல் என்றே, கல்லென் பேரூர்ப் பல்லோர் உரையினை-கல்லென்னும் ஒலியினையுடைய நகரின்கண் பல்லோராலுங் கூறப்படுவாய், ஆங்கவர் உறைவிடம் நீங்கி ஆயிழை-ஆயிழாய் நீ அச்சமணமுனிவர் வாழ்விடத்தை நீங்கி, ஈங்கிவள் தன்னோடு எய்தியது உரை என - இம் மணிமேகலையுடன் ஈண்டு எய்திய காரணத்தைக் கூறு வாயாக என ;

       குருகு-அன்றில்; கிரவுஞ்சம்; அதன் பெயர் பெற்ற குன்றமென்க ; சிறை-அணை. நிறை-காமத்தை உள்ளேயடக்கி நிறுத்துதல் ; மனத்தை நிறுத்தலுமாம் ; காழ்க்கொளின்-வைரமேறின் ; முதிர்ந்தால் என்றபடி; 1 "நீர் மிகிற் சிறையுமில்லை" 2 "நீர்மிகி னில்லை சிறை" 3 "சிறையென்ப தில்லைச் செவ்வே செம்புனல் பெருகு மாயின், நிறை யென்ப தில்லைக் காம நேர்நின்று சிறக்குமாயின்" 4 "பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே" என்பன ஈண்டு அறியற்பாலன. தவத்தள், சரத்தி, வாய்மையள் என்பவற்றைச் செவ்வியள் என அடக்கிக் கூறினான். ஆகென, விகாரம், அவ்வியம்-பிறர்க்குரியளாதல் கூடா தென்னும் பொறாமை; கோட்டமுமாம். அஞ்செஞ் சாயல், விளி. அராந்தாணம் என்பதற்கு மேல் (3 : 87) உரைத்தமை காண்க.

புறம். 51.  2 பழ.190.  3 சூளா. கல்யாண. 155. 4 குறுந். 17