மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை

       
40




45

வடமொழி யாளரொடு வருவோன் கண்டீங்
கியாங்ஙனம் வந்தனை யென்மக ளென்றே
தாங்காக் கண்ணீ ரென்றலை யுதிர்த்தாங்
கோத லந்தணர்க் கொவ்வே னாயினும்
காதல னாதலிற் கைவிட லீயான்
இரந்தூண் தலைக்கொண் டிந்நகர் மருங்கில்
பரந்துபடு மனைதொறுந் திரிவோ னொருநாள்


40
உரை
46

       கண்டு ஈங்கு-என்னை இந்நகரத்திற் கண்டு, யாங்ஙனம் வந்தனை என்மகள் என்றே தாங்காக் கண்ணீர் என்றலை உதிர்த் தாங்கு-என் மகளே ஈண்டு எவ்வாறு வந்தாய் என்று கூறிப் பெருகிய கண்ணீரை என்மீது சொரிந்து, ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்-யான் மறையோதும் அந்தணர்களுடனிருத்தற்குத் தகாதவளாயினும், காதலன் ஆதலின் கைவிடலீயான் - என்மீது மிருந்த அன்புடையனாதலால் என்னைக் கைவிடானாய், இரந்தூண் தலைக்கொண்டு-இரந்துண்டு வாழ்தலை மேற்கொண்டு. இந்நகர் மருங்கில்-இவ்வூரின் கண், பரந்துபடு மனைதொறும் திரிவோன் - பரந்து தோன்றும் இல்லங்கள் தோறும் சென்று ஏற்போன் ;
       

       கைவிடலீயான்-கைவிடான் ; "காவலன் மகனோ கைவிடலீயான்" (19 : 32) என்பர் பின்னும் ; "காட்டியதாதலிற் கைவிடலீயான்" (13 : 85) என்பது சிலப்பதிகாரம்.