மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை

       


60




65




70


மங்குறோய் மாடம் மனைதொறும் புகூஉம்
அங்கையைற் கொண்ட பாத்திர முடையோன்
கதிர்சுடும் அமயத்துப் பனிமதி முகத்தோன்
பொன்னிற் றிகழும் பொலம்பூ வாடையன்
என்னுற் றனிரோ என்றெமை நோக்கி
அன்புட னளைஇய அருண்மொழி யதனா
ல்
அஞ்செவி நிறைத்து நெஞ்சகங் குளிர்ப்பித்துத்
தன்கைப் பாத்திர மென்கைத் தந்தாங்
கெந்தைக் குற்ற இடும்பை நீங்க
எடுத்தனன் றழீஇக் கடுப்பத் தலையேற்றி
மாதவ ருறைவிடங் காட்டிய மறையோன்
சாதுயர் நீக்கிய தலைவன் றவமுனி
சங்க தருமன் தானெமக் கருளிய

58
உரை
70

       மங்குல் தோய் மாட மனைதொறும் புகூஉம் அங்கையிற் கொண்ட பாத்திரம் உடையோன் - வானளாவிய மாடங்களையுடைய மனைகள்தோறும் செல்லும் கையிற்கொண்ட பிச்சைப் பாத்திரத்தையுடையவனும், கதிர்சுடும் அமயத்துப் பனிமதி முகத்தோன்-ஞாயிறு காயும் நண்பகற் பொழுதில் குளிர்ச்சி பொருந்திய மதிபோலும் முகத்தினையுடையவனும், பொன்னில் திகழும் பொலம்பூ ஆடையன்-பொன்போல் விளங்கும் அழகிய ஆடையை உடையவனுமாகி, என் உற்றனிரோ என்று எமை நோக்கி-என்ன துன்பம் எய்தினீர் என்று எங்களை நோக்கி, அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால் - அன்பொடு கலந்த அருள் மிகுந்த இன் மொழிகளால், அஞ்செவி நிறைத்து நெஞ்சகம் குளிர்ப்பித்து- செவியகத்தை நிறைத்து உள்ளத்தைக் குளிரச்செய்து, தன்கைப் பாத்திரம் என்கைத் தந்து-தன் கையிலுள்ள பாத்திரத்தை என் கையில் கொடுத்துவிட்டு, எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க - என் தந்தைக்கு எய்திய துன்பம் நீங்குமாறு, எடுத்தனன் தழீஇக் கடுப்பத் தலையேற்றி-விரையத் தழுவி எடுத்துத் தன் உடம்பினிடத்தே சுமந்து சென்று, மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்-புத்த முனிவர்கள் உறைவிடத்தைக் காட்டிய மறையவனாகிய, சாதுயர் நீக்கிய தலைவன்-எந்தையின் இறப்புத் துன்பத்தை நீக்கிக் காப்பாற்றிய தலைவன், தவமுனி சங்கதருமன் - சங்கதருமன் என்னும் தவத்தையுடைய முனிவனாவான் ;
       

       இல்லறத்தோர் யாவரும் உண்டபின் உச்சிப்பொழுதிற் பிச்சைக் சூச் செல்வது புத்தமதத் துறவியர் இயல்பாகலின், "கதிர்சுடுமம யத்து" என்றார் ; "வெங்கதி ரமயத்து வியன்பொழி லகவயின், வந்து தோன்றலும்," "வெயில்விளங் கமயத்து விளங்கித் தோன்றிய, சாது சக்கரன் றன்னையானூட்டிய" (10 : 27 - 8 ; 11 : 102 -3) எனப் பின்னர் வருதலுங் காண்க. மருதந் துவரில் தோய்க்கப்பட்டு மஞ்சள் நிறமுள்ளதாகலின் "பொன்னிற் றிகழும பொலம்பூ வாடை" எனப் பட்டது. அன்பும் அருளுமுடைய மொழியா லென்க. கடுப்ப-விரைய. தலை-இடம். ஆடையனாய் நோக்கி நிறைத்துக் குளிர்ப்பித்துத் தந்து ஏற்றிக் காட்டிய மறையோனாகிய தலைவன் சங்கதருமன் ஆவானென்க.