மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை

       


125




130




135




140
அன்னச் சேவல் அயர்ந்துவிளை யாடிய
தன்னுறு பெடையைத் தாமரை யடக்கப்
பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்
டோங்கிருந் தெங்கின் உயர்மட லேற
அன்றிற் பேடை அரிக்குர லழைஇச்
சென்றுவீழ் பொழுது சேவற் கிசைப்பப்
பவளச் செங்காற் பறவைக் கானத்துக்
குவளை மேய்ந்த குடக்கட் சேதா
முலைபொழி தீம்பால் எழுதுக ளவிப்பக்
கன்றுநினை குரல மன்றுவழிப் படர
அந்தி யந்தனர் செந்தீப் பேணப்
பைந்தொடி மகளிர் பலர்விளக் கெடுப்ப
யாழோர் மருதத் தின்னரம் புளரக்
கோவலர் முல்லை குழன்மேற் கொள்ள
அமரக மருங்கிற் கணவனை யிழந்து
தமரகம் புகூஉம் ஒருமகள் போலக்
கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமோ
டந்தி யென்னும் பசலைமெய் யாட்டி
வந்திறுத் தனளால் மாநகர் மருங்கென்.


123
உரை
141

       அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய தன்னுறுபெடையைத் தாமரை அடக்க - அன்னச சேவலானது மெய்ம்மறந்து விளையாடிய தனது பேடையைத் தாமரை மலர் குவிந்து தன்னுள் அடக்கிக் கொள்ள பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடை கொண்டு ஓங்கு இருந் தெங்கின் உயர் மடல் ஏற-பூலினது கட்டு அழியுமாறு கிழித்துப் பேட்டினைக் கொண்டு உயர்ந்த பெரிய தென்னையினது வளர்ந்த மடலிற் சேரவும், அன்றில் பேடைஅரிக் குரல் அழைஇச் சென்று வீழ்பொழுது சேவற்கு இசைப்ப-அன்றிலின் பேடு மெல்லிய குரலால் சேவலை அழைத்து ஞாயிறுசென்று மறையும் அந்திப் பொழுதை உரைக்கவும், பவளச் செங்கால் பறவைக் கானத்துக் குவளை மேய்ந்த குடக்கட் சேதா-பவளம்போற் சிவந்த கால்களையுடைய அன்னப்புட்கள் நிறைந்த கானத்தில் குவளை மலரை மேய்ந்த திரண்ட கண்களையுடைய செவ்விய பசுக்கள், முலைபொழி தீம்பால் எழு துகள் அவிப்ப - மடியிலிருந்து பொழிகின்ற இனிய பால் நிலத்தினின்றும் எழுகின்ற புழுதியை அவிப்ப, கன்று நினை குரல மன்று வழிப் படா-கன்றுகளை நினைந்த குரலை யுடையனவாய் மன்றுகளின் வழியே செல்லவும், அந்தி அந்தணர் செந்தீப் பேண - அந்தணர்கள் அந்திச் செந் தீயை வளர்க்கவும், பைந்தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப - பசிய வளையலணிந்த மகளிர் பலர் விளக்குகளை ஏற்றவும், யாழோர் மருதத்து இன்னரம் புளர - யாழினையுடைய பாணர் யாழின் நரம்பினை வருடி இனிய மருதப் பண்ணை யெழுப்பவும், கோவலர் முல்லை குழல் மேற்கொள்ள - கோவலர் முல்லைப்பண்ணை வேய்ங் குழலினிடமாக இசைப்பவும், அமரக மருங்கில் கணவனை இழந்து-போர்க்களத்தில் கணவனை இழந்து, தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல-தம்மவரிடம் செல்லும் ஒரு மங்கையைப்போல, கதிர் ஆற்றுப்படுத்த முதிராத் துன்பமோடு - ஞாயிற்றினைப் போக்கிய முடிவில்லாத துன்பத்துடன், அந்தி என்னும் பசலை மெய்யாட்டி - அந்திப்பொழுது என்கின்ற பசலை போர்த்த மேனியை யுடையாள், வந்து இறுத்தனளால் மாநகர் மருங்கு என் - பெரிய நகரத்தின் மருங்கே வந்து தங்கினள்என்க.
                 அயர்ந்து - விரும்பி என்றுமாம். அடக்க - அடக்கலால். இரவிற் சிறிதும் பிரிந்திருத்தலருமையின் 'சேவற் கிசைப்ப' என்றார். கானம் - ஈண்டு நீர்நிலை. சேதா - செவ்விப் பசு ; செந்நிறமுடைய பசுவுமாம். கன்றினை நினைந்தமையாற் பால் பொழிவனவாயின. மன்று-ஆனினங்களை அடைத்து வைக்கும் வேலி நடுவணதாய வெளியிடம் ; கொட்டிலுமாம். பகலில் மேயச்சென்ற ஆனினங்கள் மாலைப்பொழுதில் கன்றை நினைந்து அழைக்குங் குரலோடு போந்து மன்றிலே புகுதல் இயல்பு ; 1''ஆன்கணம், கன்று பயிர்குரல மன்றுநிறை புகுதர,'' 2 "மதவு நடை நல்லான், வீங்குமாண் செருத்த றீம்பால் பிலிற்றக், கன்று பயிர் குரல மன்றுநிறை புகுதரு, மாலையும்'' என்பனவுங் காண்க. எடுத்தல் - கொளுத்தல், 'யாழோர்...புளர' - ஈண்டு மருதத்திற்குரிய இயைபு புலப்பட்டிலது ; இவ்வடி இடைப்புகுத்துப் போலும். 'முல்லைக் குழல்' என்ற பாடத்திற்கு முல்லையைக் குழலுக்கு அடையாக்குக ; என்னை? 3 "முல்லைக் கொடியால் முப்புரியாகத் தெற்றிய வளையை வளைவாய்க் கட்செறித்தூதலின் முல்லைக் குழலாயிற்று" என அடியார்க்கு நல்லார் உரைத்தலின் என்க. தமர்-தந்தை, தமையன் முதலியோர். முதிர்தல் ஈண்டு முடிதல் ; மேல் முதிதற்கு இடனில்லாத என்றுமாம். கணவனைப் பிரிந்தாட்கு மெய் பசக்குமாகலின் 'பசலை மெய்யாட்டி' என்றார் ; ஈண்டுப் பசலையாவது அந்திப் பொழுதின் புற்கென்ற நிறம். திருமுக வாட்டி தோடாகப் பெய்தலும் பசலை மெய்யாட்டி மாநகர் மருங்கு வந்திறுத்தனள் என்க
                 பூங்கொடி உருவம் பெயர்ப்ப, சூழ்வோன் சுதமதி முக நோக்கி உரையென, உரைப்ப, அகல்வோன் எய்தியது உரையென, அவள் சங்கதருமன் அருளிய வாமன் பாதத்தைப்பாராட்டுதலல்லது மிகைநா இல்லேன் என, அவன் போயபின், மணிமேகலை சுதமதியோடு நின்ற வெல்லையுள், மணிமேகலா தெய்வம் பைந்தொடியாகிப் பீடிகையை வலங்கொண்டு ஓங்கி ஒதுங்கி நாநீட்டும் ; நீட்டுழி, திருமுகவாட்டி பெய்தலும், பசலை மெய்யாட்டி முதிராத் துன்பமொடு மாநகர் மருங்கு வந்திறுத்தனள் என்று முடிக்க. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை முற்றிற்று.


1 குறிஞ்சிப். 217-8. 2 அகம். 14. 3 சிலப். 17 : கொல்லை