சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை

70




75

எஞ்சியோர் மருங்கின் ஈமஞ் சாற்றி
நெஞ்சு நடுக்குறூஉம் நெய்த லோசையும்
துறவோ ரிறந்த தொழுவிளிப் பூசலும்
பிறவோ ரிறந்த அழுவிளிப் பூசலும்
நீண்முக நரியின் தீவிளிக் கூவும்
சாவோர்ப் பயிருங் கூகையின் குரலும்
புலவூண் பொருந்திய குராலின் குரலும்
ஊண்டலை துற்றிய ஆண்டலைக் குரலும்
நன்னீர்ப் புணரி நளிகட லோதையின்
இன்னா இசையொலி என்றுநின் றறாது


70
உரை
79

       எஞ்சியோர் மருங்கின் ஈமஞ்சாற்றி நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்-உயிர் வாழ்ந்திருப்போரிடம் ஈமம் உண்டென்பதைக் கூறி உள்ளம் நடுங்குமாறு புரியும் நெய்தற்பறையின் ஒலியும், துறவோர் இறந்த தொழுவிளிப் பூசலும்-துறவியர் இறந்ததனாற் போந்த துதிமுழக்கமும், பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்-இல்லறத்தோர் இறந்ததனாலாகிய அழுகை யொலியும், நீள்முக நரியின் தீவிளிக்கூவும்-நீண்ட முகத்தையுடைய நரியின் தீய ஒலியினையுடைய கூப்பீடும். சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்-இறப்போரை யழைக்கும் பேராந்தையின் குரலும், புலவூண் பொருந்திய குராலின் குரலும் - புலாலாகிய உணவைப் பொருந்திய கோட்டானின் ஒலியும், ஊண்தலை துற்றிய ஆண்டலைக் குரலும் - உணவாகத் தலை முளையைக் கடித்துண்ட ஆண்டலைப் பறவையின் முழக்கமும், நன்னீர்ப் புணரி நளிகடல் ஒதையின் இன்னா இசைஒலி என்றும் நின்று அறாது-தூநீர்ச் சேர்க்கை யினையுடைய செறிந்த கடல் ஓசையைப்போல் இன்னாதனவாகிய முழக்கம் என்றும் நின்று நீங்காமல் ;


       நெய்தல் - சாப்பறை ; அஃது ஈமஞ்சாற்றுதலை 1"மணங்கொண்டீண், டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே, தொண்டொண்டொண் ணென்னும் பறை" என்பதனாலுமறிக. முன் துறவோர் என்றமையின் பிறவோர் இல்லறத்தாராயிற்று. தொழுவிளியாகிய பூசல், அழுவிளியாகிய பூசல் என்க ; விளி - ஓசை. பயிர்தல் - அழைத்தல், 2"போழ்வாய்க்கூகை, சுட்டுக்குவியெனச் செத்தோர்ப் பயிரும், கள்ளியம் பறந்தலை" என்பதனால் பேராந்தை இறந்தோரை அழைக்குமென்பதும் போதரும். ஆண்டலை - ஆண்மகனது தலை போன்ற வடிவமுள்ள ஒருவகைப் பறவை; இதனை, 3"நீண்ட பலி பீடத்தி லரிந்துவைத்த நெடுங்குஞ்சிச் சிரத்தைத்தன் னினமென் றெண்ணி, ஆண்டலைப்புள் அருகணைந்து பார்க்கு மாலோ" என்பதனானறிக. நெய்தலோசை முதலிய இன்னா இசையொலி கடலோதையின் என்றும் நின்றறாதென்க.


1 நாலடி. 25. 2 புறம். 240. 3 கலிங்க. கோயில். 16.