சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை

80




85




90

தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலு மோங்கிக்
கான்றையுஞ் சூரையுங் கள்ளியு மடர்ந்து
காய்பசிக் கடும்பேய் கணங்கொண் டீண்டும்
மாலமர் பெருஞ்சினை வாகை மன்றமும்
வெண்ணிணந் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து
புள்ளிறை கூறும் வெள்ளின் மன்றமும்
சுடலை நோன்பிகள் ஒடியா வுள்ளமொடு
மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும்
விரத யாக்கைய ருடைதலை தொகுத்தாங்
கிருந்தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும்
பிணந்தின் மாக்கள் நிணம்படு குழிசியில்
விருந்தாட் டயரும் வெள்ளிடை மன்றமும்


80
உரை
91

       தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி - தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் உயர்ந்து, கான்றையும் சூரையுங் கள்ளியும் அடர்ந்து - கான்றையுஞ் சூரையுங் கள்ளியும் செறிந்து, காய்பசிக் கடும்பேய் கணங்கொண்டு ஈண்டும் - காய்கின்ற பசியையுடைய கொடிய பேய்கள் கூட்டமாகத் திரண்டிருக்கும், மால் அமர் பெருஞ்சினை வாகை மன்றமும் - முகில் தங்குகின்ற பெருங் கிளை களையுடைய வாகை மரம் நிற்கும் மன்றமும், வெள் நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து - வெள்ளிய நிணத்தினைத் தசையுடன் உண்டு மகிழ்ச்சி மிகுந்து, புள் இறை கூரும் வெள்ளில் மன்றமும்- பறவைகள் தங்குகின்ற விளாமரம் நிற்கும் மன்றமும், சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடைதீயுறுக்கும் வன்னிமன்றமும் - காபாலிகர் தளராத உள்ளத்துடன் சோறடுகின்ற தீயையுடைய வன்னிமரம் நிற்கும் மன்றமும். விரத யாக்கையர் உடைதலை தொகுத்தாங்கு இருந்தொடர்ப்படுக்கும் இரத்தி மன்றமும் - விரதங் காக்கும் உடம்பினை யுடையோர் உடைந்த தலைகளைத் தொகுத்துப் பெரிய மாலைகளாகச் செய்யும் இலந்தைமரம் நிற்கும் மன்றமும், பிணம் தின் மாக்கள் - பிணத்தினைத் தின்னும் மாக்களாயினார், நிணம்படு குழிசியில் விருந்தாட்டு அயரும் - நிணம் பொருந்திய பானையில் விருந்து செய்கின்ற, வெள்ளிடை மன்றமும் - வெளியான இடத்தையுடைய மன்றமும் ஆகிய இவ்விடங்களில்;


       ஒடுவை-ஒடுமரம். உழிஞ்சில் - வாகை ; உன்னமுமாம். தான்றி முதலிய மூன்றும் மரமும், கான்றை முதலிய மூன்றும் செடியுமாம். மால்-மேகம். இறைகூர்தல்-தங்குதல். சுடலை நோன்பிகள்-மயானத்திலிருந்து நோன்பியற்றுவோர் ; காபாலிக சமயத்தோர். விரத யாக்கையர் -மாவிரத சமயத்தோர். பலர் கூடுமிடம் மன்ற மெனப்படும் ; பண்டை நாளில் மன்றங்கள் பெரும்பாலும் மரத்தடியில் இருந்தன ; பேய்கள் கூடுதலின் வாகையடி மன்றமாயிற்று ; இங்ஙனமே ஏனையவும் கொள்க.