சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை




135




140

பார்ப்பான் றன்னொடு கண்ணிழந் திருந்தவித்
தீத்தொழி லாட்டியென் சிறுவன் றன்னை
யாருமில் தமியே னென்பது நோக்காது
ஆருயி ருண்ட தணங்கோ பேயோ
துறையு மன்றமுந் தொல்வலி மானும்
உறையுளுங் கோட்டமுங் காப்பாய் காவாய்
தகவிலை கொல்லோ சம்பா பதியென
மகன்மெய் யாக்கையை மார்புறத் தழீஇ
ஈமப் புறங்காட் டெயிற்புற வாயிலில்
கோதமை யென்பாள் கொடுந்துயர் சாற்றக


132
உரை
141

       பார்ப்பான் தன்னொடு கண் இழந்திருந்த - கணவனோடு கண் இழந்திருந்த, இத் தீத் தொழிலாட்டி என் சிறுவன் தன்னை- இக் கொடுவினையேனுடைய புதல்வனை, யாரும் இல் தமியேன் என்பது நோக்காது - யான் யாருமற்ற ஏழை யென்பதனைக் கருதாமல், ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ - அணங்கோ அன்றிப் பேயோ அரிய உயிரை யுண்டது, துறையும் மன்றமும் தொல் வலி மரனும் - நீர்த்துறைகளும் மன்றங்களும் பழைய வலி யுடைய மரங்களும், உறையுளும் கோட்டமும் காப்பாய் - தங்கு மிடங்களும் கோயில்களு மாதியவற்றின்கணிருந்து காத்து வருவோய், காவாய் தகவிலை கொல்லோ சம்பாபதி என-சம்பாபதியே நீ என் மகனுயிரைக் காவாமலிருந்தாய் தகவின்மையை யுடையையோ என அழைத்து, மகன் மெய் யாக்கையை மார்புறத் தழீஇ - மகனது உடலாகிய உயிரற்ற யாக்கையை மார்புடன் தழுவிக்கொண்டு; ஈமப் புறங்காட்டு எயில்புற வாயிலில் - இடு காட்டின் மதிற்புறத்துள்ள வாயிலில் நின்று, கோதமை என்பாள் கொடுந்துயர் சாற்ற - கோதமை என்னும் பார்ப்பனி கொடிய துன்பத்தினைக் கூற ;


       பார்ப்பன் - சார்ங்கலனுடைய தந்தை ; அவன் கண்ணிழந்திருந்தமை "கண்ணில் கணவனை" (6 : 155.) எனப் பின் வருதலானும் துணியப்படும். தீத்தொழிலாட்டி-பார்ப்பனி யென்றுமாம்; 1 தீத்திறம் புரிந்தோன்" எனப் பார்ப்பனன் கூறப்படுதல் காண்க ; அங்கி காரியம் செய்பவன் என்றபடி. கணவனும் கண்ணிழந்தானாகலின் சிறுவனை யன்றித் தனக்குக் களைகண் இல்லை யென்பாள் 'யாருமில் தமியேன்' என்றாள். நோக்காது - கருதாது ; நோக்கனோக்கம். மன்றம் - பலர்கூடும் வெளியிடம். தகவு இலை கொல்லோ-நின்னிடம் தகவு இல்லையோ என்றுமாம் ; தகவு - நடுவு நிலை ; எவ்விடத்தும் யாரையுங் காக்குந் தெய்வம் ஈண்டு இவனைக் காவாமையின் 'தகவிலை கொல்லோ' என்றாள். கோதமை தகவிலை கொல்லோ என மார்புறத் தழீஇ வாயிலிற் சாற்றவென்க.

1 சிலப். 11 : 57.