சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை

190




195




200

சம்பா பதிதன் ஆற்றல் தோன்ற
எங்குவாழ் தேவருங் கூடிய இடந்தனில்
சூழ்கடல் வளைஇய ஆழியங் குன்றத்து
நடுவு நின்ற மேருக் குன்றமும்
புடையி னின்ற எழுவகைக் குன்றமும்
நால்வகை மரபின் மாபெருந் தீவும்
ஓரீ ராயிரஞ் சிற்றுடைத் தீவும்
பிறவும் ஆங்கதன் இடவகை யுரியன
பெறுமுறை மரபின் அறிவுவரக் காட்டி
ஆங்குவா ழுயிர்களும் அவ்வுயி ரிடங்களும்
பாங்குற மண்ணீட்டிற் பண்புற வகுத்து
மிக்க மயனால் இழைக்கப் பட்ட
சக்கர வாளக் கோட்டமீங் கிதுகாண்


190
உரை
202

       சம்பாபதி தன் ஆற்றல் தோன்ற - சம்பாபதியினுடைய பேராற்றல் வெளிப்படுமாறு, எங்கு வாழ் தேவரும் கூடிய இடந்தனில்-எங்குமுறைகின்ற தேவர்களெல்லோரும் கூடிய அந்த இடத்தில், சூழ்கடல் வளைஇய ஆழியங்குன்றத்து - பெரும்புறக் கடலாற் சூழப்பட்ட சக்கரவாள மலையின் உட்பட்ட இடத்தில், நடுவு நின்ற மேருக்குன்றமும் - நடுவிடத்தே நின்றதாகிய மேருமலையும், புடையின்நின்ற எழுவகைக் குன்றமும்-அதன் பக்கத்தே சூழ்ந்து நின்ற எழுவகைக் குலமலைகளும், நால்வகை மரபின் மாபெருந்தீவும்-நான்கு வகைப்பட்ட மரபினையிடைய மிகப்பெரிய தீவுகளும், ஓரீ ராயிரம் சிற்றிடைத்தீவும் - அவற்றைச் சூழ்ந்துள்ள இரண்டாயிரம் சிறு தீவுகளும், பிறவும் ஆங்கதன் இடவகை உரியன-பிறவுமாகிய அதன் உரிய இடவகைகளை, பெறு முறை மரபின் அறிவுரக் காட்டி-அவை அமைந்த முறைப்படி காண்போர்க்கு அறிவுரை அமைத்துக் காட்டி, ஆங்குவாழ் உயிர்களும் அவ்வுயிர் இடங்களும்-ஆங்கே வாழும் உயிர்களையும் அவை வசிக்கும் இடங்களையும், பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து-அழகு பொருந்த மண்ணீடுகளாக இலக்கணப்படி வகுத்து, மிக்க மயனால் இழைக்கப்பட்ட - அறிவின் மேம்பட்ட தெய்வத் தச்சனால் இயற்றப்பட்ட, சக்கரவாளக்கோட்டம் ஈங்கிதுகாண்-சக்கர வாளக்கோட்டம் என்பது இதுவாகும்:


       தோன்றக்கூடிய இடம் என்க; தோன்ற இழைக்கப்பட்ட என் றியைத்தலும் பொருந்தும். மேருமலை எண்பத்தீராயிரம் யோசனை உயரமும், அதற்குத் தக்க பருமையும் உள்ளதென்றும், அதனைச் சூழக் குலகிரிகள் ஏழும், அவற்றுள் ஒவ்வொன்றனையும் சூழ்ந்து அவ்வக்கிரி யின் உயரவளவுள்ள ஆழமும் அகலமுமுடைய ஏழு கடல்களும் உள்ளனவென்றும், இவையெல்லாவற்றையும் புறஞ் சூழ்ந்துகிடக்கும் பெரும்புறக்கடலில் சம்புத்தீவு முதலிய நான்கு மாபெருந்தீவுகளும், அவைஒவ்வொன்றையும் ஐந்நூறு ஐந்நூறு ஆகச்சூழ்ந்த இரண்டாயிரம் சிறு தீவுகளும் உள்ளன என்றும், சம்பத்தீவு தெற்கிலுள்ளது என்றும்

       கூறுவர்; இப்பகுதிக்கு டாக்டர் உ.. வே. சாமிநாதையர் எழுதிய அரும்பதவுரை காண்க.

       சிறு தீவுகள் அந்தரத்தீவுகள் என்றும் கூறப்படும்; "அந்தரத் தீவினும் அகன்பெருந் தீவினும்" (25 : 224)என்று பின்வருதல் காண்க. உயிர்கள் என்றது அவற்றுக்கு நிலைக்களமாகிய உடம்புகளை. இடம் என்றது நீர், நிலம் முதலியவற்றை. மண்ணீடு-சுதையாற் செய்யப்பட்ட பாவை முதலியன. மயன் - அசுரத்தச்சன் என்பாருமுளர்.