சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை


40




45

ஊரா நற்றேர் ஓவியப் படுத்துத்
தேவர் புகுதரூஉஞ் செழுங்கொடி வாயிலும்
நெல்லுங் கரும்பு நீருஞ் சோலையும்
நல்வழி யெழுதிய நலங்கிளர் வாயிலும்
வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத்
துள்ளுரு வெழுதா வெள்ளிடை வாயிலும்
மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கின்
தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து
நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும்
நாற்பெரு வாயிலும் பாற்பட் டோங்கிய
காப்புடை யிஞ்சிக் கடிவழங் காரிடை


39
உரை
49

       ஊரா நல்தேர் ஓவியப்படுத்து - ஓவியம்போல விமானம் விசும்பின்கண்ணே நிற்குமாறு செய்து, தேவர் புகுதரூஉம் செழுங் கொடி வாயிலும் - விண்ணவர் நுழைந்து செல்லுஞ் செழுங் கொடியினையுடைய வாயிலும், நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் நல்வழி எழுதிய நலங்கிளர் வாயிலும் - நெற்பயிரும் கரும்பும் பொய்கையும் பொழிலும் நன்கனமெழுதிய நலஞ்சிறந்த வாயிலும் வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத்துள் - மிக்க வெண்மை யுடைய சுதையாற் பூசப்பட்ட மாடத்தில், உரு எழுதா வெள்ளிடை வாயிலும் - வடிவங்கள் எழுதப்பெறாத வெளியான இடத்தினையுடைய வாயிலும், மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கில் தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து - மடிக்கப்பட்ட சிவந்த வாயையும் சினந்த நோக்கையும் பிறரைத்தொடுத்த பாசத்தையும் கையிற் பிடித்த சூலப்படையையுமுடைய, நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும் - நீண்ட தோற்றத்தையுடைய பூதவடிவம் நிற்கின்ற வாயிலும் ஆகிய, நாற்பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய - நான்கு பெரிய வாயில்களும் பகுதிப்பட்டு உயர்ந்த, காப்புடை இஞ்சிக் கடி வழங்கு ஆரிடை - காவலுடைய மதில் சூழ்ந்த பேய்கள் நடமாடுகின்ற அரிய இடத்தில்;

       ஊராத் தேர்-பாகராற் செலுத்தப்படாது தானே செல்லுந் தேர், விமானம். விமானத்துடன் தேவர் புகுவதாக ஓவியப்படுத்த வாயில் என்றலுமாம். நீர் - பொய்கை முதலியன. மண்ணீடு - சுதையாற் செய்யப்பட்ட பாவை; "மண்ணீட்டிற் பண்புற வகுத்து," "ஈங்கிம் மண்ணீட்டு" (6: 200; 18 - 156.) என மேல் இந்நூலுள் வருதல் காண்க. கடி - பேய்.