துயிலெழுப்பிய காதை



100




105
இரவி வன்மன் ஒருபெரு மகளே
தூரகத் தானைத் துச்சயன் றேவி
தயங்கிணர்க் கோதை தாரை சாவுற
மயங்கி யானைமுன் மன்னுயிர் நீத்தோய்
காராளர் சண்பையிற் கௌசிகன் மகளே
மாருத வேகனோ டிந்நகர் புகுந்து
தாரை தவ்வை தன்னொடு கூடிய
வீரை யாகிய சுதமதி கேளாய்

98
உரை
105

       இரவிவன்மன் ஒரு பெருமகளே - அசோதர நகரத்தரசனாகிய இரவிவன்மனது ஒரு பெருமகளே, துரகத் தானைத் துச்சயன்தேவி - குதிரைச் சேனைகளை யுடையனும் கச்சய நகரத் தரசனுமாகிய துச்சயனுடைய மனைவியே, தயங்கு இணர்க்கோதை தாரை சாவுற-விளங்குகின்ற பூங்கொத்தினாலாய மாலையையுடைய தாரை இறக்குமாறு, மயங்கி யானைமுன் மன்னுயிர் நீத்தோய்- யானையின் முன்னே மயங்கி உயிர் துறந்தோய், காராளர் சண்பையில் கௌசிகன் மகளே - காராளருடைய சண்பை நகரத்தில் உள்ள கௌசிகன் என்பவனுடைய புதல்வியே, மாருதவேகனோடு இந்நகர் புகுந்து - மாருதவேகன் என்னும் விஞ்சையனுடன் இந் நகரத்திற் சேர்ந்து, தாரை தவ்வை தன்னொடு கூடிய - தமக்கை யாகிய தாரையுடன் கூடிய, வீரையாகிய சுதமதி கேளாய் - வீரை யாகிய சுதமதியே கேட்பாயாக ;

இரவின்மன் - சுதமதியின் முற்பிறப்பிலே தந்தையாயிருந்தவன். துச்சயன் - சுதமதியின் முற்பிறப்பிற் கணவனாயிருந்தவன். தாரை- சுதமதியின் முற்பிறப்பின் தமக்கையாயிருந்தவள். வீரை யானையால் இறந்தது கேட்டு இவள் இறந்தமையால் 'தாரை சாவுற' என்றாள் ; சாவுற : எதிர்காலத்தில் வந்தது. காராளர் - வேளாளர் ; சண்பை - சீகாழி ; சண்பை யென்பது அங்கநாட்டிற் கங்கைக் கரையிலுள்ளதாகிய சம்பா நகரம் என்றும், காராளர் என்பது கராளர் என்பதன் திரிபென்றும் கூறுவாருமுளர் ; தாரை, வீரை, இலக்குமி என்னும் மூன்று சகோதரிகளுள், தாரை மாதவியாகவும், இலக்குமி மணிமேகலை யாகவும் காவிரிப்பூம் பட்டினத்திற் பிறந்திருத்தலானும், இந்திரவிழாக் காண்டற்கு வந்த மாருதவேகன் என்னும் விஞ்சையன் தான் பூக் கொய்யும்பொழுது தன்னை எடுத்தேகினனென்று மேல் (3:28-39) சுதமதி கூறுதலானும் புகார் நகருக்கு அணித்தாகிய சீகாழியென்று கொள்வதே பொருத்தமாம். கௌசிகன் - சுதமதியின் தந்தை.