நாட்டு வளம்
 
30.
  • நா வீற்று இருந்த புல மா மகளோடு நன் பொன்
  • பூ வீற்று இருந்த திருமாமகள் புல்ல நாளும்
  • பா வீற்று இருந்த கலை பார் அறச் சென்ற கேள்விக்
  • கோ வீற்று இருந்த குடி நாட்டு அணி கூறல் உற்றேன்
   
31.
  • காய் மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப்
  • பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து
  • தேமாங் கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
  • ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டே
   
32.
  • இலங்கல் ஆழியினான் களிற்று ஈட்டம் போல்
  • கலங்கு தெண் திரை மேய்ந்து கண மழை
  • பொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னி
  • விலங்கல் சேர்ந்து விண் ஏறி விட்டு ஆர்த்தவே
   
33.
  • தேன் நிரைத்து உயர் மொய்வரைச் சென்னியின்
  • மேல் நிரைத்து விசும்பு உற வெள்ளி வெண்
  • கோல் நிரைத்தன போல் கொழுந் தாரைகள்
  • வான் நிரைத்து மணந்து சொரிந்தவே
   
34.
  • குழவி வெண் மதிக் கோடு உழக் கீண்டு தேன்
  • முழவின் நின்று அதிர் மொய் வரைச் சென்னியின்
  • இழியும் வெள் அருவித் திரள் யாவையும்
  • குழுவின் மாடத் துகில் கொடி போன்றவே
   
35.
  • இலங்கு நீள் முடி இந்திரன் மார்பின் மேல்
  • விலங்கி வீழ்ந்த முத்தாரமும் போன்றவை
  • நலம் கொள் பொன்னொடு நல் மணி சிந்தலால்
  • கலன் பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே
   
36.
  • வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரைக்
  • கொள்ளை கொண்ட கொழு நிதிக் குப்பையை
  • உள்ளம் இல்லவர்க்கு ஊர் தொறும் உய்த்துராய்
  • வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே
   
37.
  • மையல் யானையின் மும் மதம் ஆர்ந்து தேன்
  • ஐய பொன் அசும்பு ஆடி அளைந்து உராய்ச்
  • செய்ய சந்தனம் தீம் பழம் ஆதியா
  • நைய வாரி நடந்தது நன்று அரோ
   
38.
  • வீடு இல் பட்டினம் வெளவிய வேந்து எனக்
  • காடு கையரிக் கொண்டு கவர்ந்து போய்
  • மோடு கொள் புனல் மூரி நெடுங் கடல்
  • நாடு முற்றியதோ என நண்ணிற்றே
   
39.
  • திரை பொரு கனை கடல் செல்வன் சென்னி மேல்
  • நுரை எனும் மாலையை நுகரச் சூட்டுவான்
  • சரை எனும் பெயர் உடைத் தடம் கொள் வெம் முலைக்
  • குரை புனல் கன்னி கொண்டு இழிந்தது என்பவே
   
40.
  • பழம் கொள் தெங்கு இலை எனப் பரந்து பாய் புனல்
  • வழங்க முன் இயற்றிய சுதை செய் வாய்த் தலை
  • தழம் குரல் பம்பையில் சாற்றி நாடு எலாம்
  • முழங்கு தீம் புனல் அகம் முரிய மொய்த்தவே
   
41.
  • வெலற்கு அரும் குஞ்சரம் வேட்டம் பட்டு எனத்
  • தலைத் தலை அவர் கதம் தவிர்ப்பத் தாழ்ந்து போய்க்
  • குலத் தலை மகளிர் தம் கற்பின் கோட்டகம்
  • நிலைப் படா நிறைந்தன பிறவும் என்பவே
   
42.
  • கவ்வையும் கடும் புனல் ஒலியும் காப்பவர்
  • செவ்வன் நூறு ஆயிரம் சிலைக்கும் பம்பையும்
  • எவ் எலாத் திசைகளும் ஈண்டிக் காரொடு
  • பவ்வம் நின்று இயம்புவது ஒத்த என்பவே
   
43.
  • மாமனும் மருகனும் போலும் அன்பின
  • காமனும் சாமனும் கலந்த காட்சிய
  • பூமனும் அரிசிப் புல் ஆர்ந்த மோட்டின
  • தாம் இனம் அமைந்து தம் தொழிலின் மிக்கவே
   
44.
  • நெறி மருப்பு எருமையின் ஒருத்தல் நீள் இனம்
  • செறி மருப்பு ஏற்று இனம் சிலம்பப் பண்ணுறீஇப்
  • பொறி வரி வராலினம் இரியப் புக்கு உடன்
  • வெறி கமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே
   
45.
  • சேறு அமை செறுவினுள் செந்நெல் வான் முளை
  • வீறொடு விளைக எனத் தொழுது வித்துவார்
  • நாறு இது பதம் எனப் பறித்து நாள் செய்வார்
  • கூறிய கடைசியர் குழாம் கொண்டு ஏகுவார்
   
46.
  • முலைத் தடம் சேதகம் பொறிப்ப மற்று அவர்
  • குலைத்து உடன் பதித்தலின் குதித்த வாள் கயல்
  • புலத்து இடைக் கவரி கன்று ஊட்டப் போந்த பால்
  • நிலத்து இடைப் பாய்ந்து அவை பிறழும் நீரவே
   
47.
  • பால் சுவை அறிந்து அவை பழனத் தாமரை
  • மேல் செலப் பாய்தலின் வெரீஇய வண்டு இனம்
  • கோல் தொடி நுளைச்சியர் முத்தம் கோப்பவர்
  • ஏற்றிய மாலைத் தேன் இரியப் பாய்ந்தவே
   
48.
  • இரிந்த தேன் குவளையின் நெற்றி தைவர
  • முரிந்து போது அவிழ்ந்து கொங்கு உயிர்க்கும் முல்லையின்
  • அரும்பு சேர்ந்து அணி ஞிமிறு ஆர்ப்ப வாய் பதம்
  • விருந்து எதிர் கொண்ம் எனத் தழுவி வீழ்ந்தவே
   
49.
  • வள முடி நடுபவர் வரம்பு இல் கம்பலை
  • இள மழை முழக்கு என மஞ்ஞை ஏங்கலின்
  • அளமரு குயிலினம் அழுங்கிப் பூம் பொழில்
  • உளம் மெலி மகளிரின் ஒடுங்கும் என்பவே
   
50.
  • வளைக் கையால் கடைசியர் மட்டு வாக்கலின்
  • திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழிக்
  • களிப்ப உண்டு இள அனம் கன்னி நாரையைத்
  • திளைத்தலின் பெடை மயில் தெருட்டும் செம்மற்றே
   
51.
  • கண் எனக் குவளையும் கட்டல் ஓம்பினார்
  • வண்ண வாள் முகம் என மரையின் உள் புகார்
  • பண் எழுத்து இயல் படப் பரப்பி இட்டனர்
  • தண் வயல் உழவர் தம் தன்மை இன்னதே
   
52.
  • நித்திலப் பந்துடன் ஈன்று பாதிரி
  • ஒத்த பூ உடற்றிய நாவின் நாகினால்
  • தத்து நீர் நாரை மேல் எறியத் தண் கடல்
  • பைத்து எழு திரை எனப் பறவை ஆலுமே
   
53.
  • சொல் அரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல்
  • மெல்லவே கரு இருந்து ஈன்று மேல் அலார்
  • செல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்த நூல்
  • கல்வி சேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே
   
54.
  • மீன் கணின் அளவும் வெற்று இடங்கள் இன்மையால்
  • தேன் கணக் கரும்பு இயல் காடும் செந் நெலின்
  • வான் புகழ் களிறு மாய் கழனி ஆக்கமும்
  • ஊன் கணார்க்கு உரைப்ப அரிது ஒல் என் சும்மைத்தே
   
55.
  • ஆய் பிழி விருத்து வண்டு அயிற்றி உண்டு தேன்
  • வாய் பொழி குவளைகள் சூடி மள்ளர்கள்
  • தேய் பிறை இரும்பு தம் வலக்கை சேர்த்தினர்
  • ஆய் செந் நெல் அகன்ற காடு அரிகுற்றார்களே
   
56.
  • வலியுடைக் கைகளால் மலர்ந்த தாமரை
  • மெலிவு எய்தக் குவளைகள் வாடக் கம்பலம்
  • பொலிவு எய்தப் பூம் பொய்கை சிலம்பிப் பார்ப்பு எழ
  • மலை பட அரிந்து கூன் குயம் கை மாற்றினார்
   
57.
  • வாளையின் இனம் தலை இரிய வண்டு அலர்
  • தாள் உடைத் தாமரை கிழிய வண் சுமை
  • கோள் உடை இளையவர் குழாம் கொண்டு ஏகலில்
  • பாளை வாய் கமுகு இனம் பழங்கள் சிந்துமே
   
58.
  • சோர் புயல் முகில் தலை விலங்கித் தூ நிலம்
  • மார்பு கொண்டு ஆர்ந்து அது நரல வண் சுளை
  • ஆர்புறு பலாப் பழம் அழிந்த நீள் களம்
  • போர்பினான் மலிந்து உடன் பொலிந்த நீரவே
   
59.
  • ஈடு சால் போர் பழித்து எருமைப் போத்தினால்
  • மாடு உறத் தெழித்து வை களைந்து கால் உறீஇச்
  • சேடு உறக் கூப்பிய செந்நெல் குப்பைகள்
  • கோடு உயர் கொழும் பொனின் குன்றம் ஒத்தவே
   
60.
  • கரும்பு கண் உடைப்பவர் ஆலை தோறெலாம்
  • விரும்பி வந்து அடைந்தவர் பருகி விஞ்சிய
  • திருந்து சாறு அடுவுழிப் பிறந்த தீம் புகை
  • பரந்து விண் புகுதலின் பருதி சேந்ததே
   
61.
  • கிணை நிலைப் பொருநர் தம் செல்லல் கீழ்ப் படப்
  • பணை நிலையாய் செந்நெல் பகரும் பண்டியும்
  • கணை நிலைக் கரும்பினில் கவரும் பண்டியும்
  • மண நிலை மலர் பெய்து மறுகும் பண்டியும்
   
62.
  • மல்லல் அம் தெங்கு இள நீர் பெய் பண்டியும்
  • மெல் இலைப் பண்டியும் கமுகின் மேதகு
  • பல் பழுக்காய்க் குலை பெய்த பண்டியும்
  • ஒல்கு தீம் பண்டம் பெய்து ஒழுகும் பண்டியும்
   
63.
  • கருங் கடல் வளம் தரக் கரையும் பண்டியும்
  • நெருங்குபு முதிரையின் நிறைந்த பண்டியும்
  • பெருங் கலிப் பண்டிகள் பிறவும் செற்றுபு
  • திருந்தி எத் திசைகளும் செறிந்த என்பவே
   
64.
  • கிளி வளர் பூ மருது அணிந்து கேடு இலா
  • வள வயல் வைகலும் இன்னது என்ப தேன்
  • துளியொடு மதுத் துளி அறாத சோலை சூழ்
  • ஒளி அமை இருக்கை ஊர் உரைக்க நின்றவே
   
65.
  • சேவல் அன்னம் தாமரையின் தோடு அவிழ்ந்த செவ்விப் பூக்
  • காவில் கூடு எடுக்கிய கவ்விக் கொண்டு இருந்தன
  • தாவில் பொன் விளக்கமாத் தண் குயில் முழவமாத்
  • தூவி மஞ்ஞை நன் மணம் புகுத்தும் தும்பிக் கொம்பரோ
   
66.
  • கூடினார் கண் அம்மலர்க் குவளை அம் குழி இடை
  • வாடு வள்ளை மேல் எலாம் வாளை ஏறப் பாய்வன
  • பாடு சால் கயிற்றில் பாய்ந்து பல் கலன் ஒலிப்பப் போந்து
  • ஆடு கூத்தி ஆடல் போன்ற நாரை காண்ப ஒத்தவே
   
67.
  • காவி அன்ன கண்ணினார் கயம் தலைக் குடைதலின்
  • ஆவி அன்ன பூந் துகில் அணிந்த அல்குல் பல் கலை
  • கோவை அற்று உதிர்ந்தன கொள்ளும் நீரர் இன்மையின்
  • வாவி யாவும் பொன் அணிந்து வானம் பூத்தது ஒத்தவே
   
68.
  • பாசவல் இடிப்பவர் உலக்கை வாழைப் பல் பழம்
  • ஆசினி வருக்கை மா தடிந்து தேம் கனி உதிர்த்து
  • ஊசல் ஆடு பைங் கமுகு தெங்கின் ஒண் பழம் பரீஇ
  • வாசத் தாழை சண்பகத்தின் வான் மலர்கள் நக்குமே
   
69.
  • மன்றல் நாறு இலஞ்சி மேய்ந்து மா முலை சுரந்த பால்
  • நின்ற தாரையால் நிலம் நனைப்ப ஏகி நீள் மனைக்
  • கன்று அருத்தி மங்கையர் கலம் நிறை பொழிதர
  • நின்ற மேதியால் பொலிந்த நீர மாட மாலையே
   
70.
  • வெள்ளிப் போழ் விலங்க வைத்து அனைய வாய் மணித் தலை
  • கொள் பவளம் கோத்த அனைய கால குன்றிச் செங்கண
  • ஒள் அகில் புகை திரண்டது ஒக்கும் மா மணிப் புறாக்
  • கிள்ளையோடு பால் உணும் கேடு இல் பூவை பாடவே
   
71.
  • காடி உண்ட பூந் துகில் கழும ஊட்டும் பூம் புகை
  • மாட மாலை மேல் நலார் மணிக் குழலின் மூழ்கலின்
  • கோடு உயர்ந்த குன்றின் மேல் குழீஇய மஞ்ஞைதம் சிறகு
  • ஆடும் மஞ்சினுள் விரித்து இருந்த வண்ணம் அன்னரே
   
72.
  • கண் உளார் நும் காதலர் ஒழிக காமம் ஈங்கு என
  • உள் நிலாய வேட்கையால் ஊடினாரை ஆடவர்
  • வண்ண மேகலைகளைப் பற்ற அற்று உதிர்ந்தன
  • எண் இல் பொன் சுடு நெருப்பு உக்க முற்றம் ஒத்தவே
   
73.
  • கோட்டு இளந் தகர்களும் கொய் மலர தோன்றி போல்
  • சூட்டு உடைய சேவலும் தோணிக் கோழி ஆதியா
  • வேட்டவற்றின் ஊறு உளார் வெருளி மாந்தர் போர்க் கொளீஇக்
  • காட்டி ஆர்க்கும் கௌவையும் கடியும் கௌவை கௌவையே
   
74.
  • இறும் நுசுப்பின் அம் நலார் ஏந்து வள்ளத்து ஏந்திய
  • நறவம் கொப்புளித்தலின் நாகு புன்னை பூத்தன
  • சிறகர் வண்டு செவ்வழி பாட மாடத்து ஊடு எலாம்
  • இறை கொள் வானின் மீன் என அரம்பை முலையின் இருந்தவே
   
75.
  • விலக்கு இல் சாலை யாவர்க்கும் வெப்பின் முப் பழச் சுனைத்
  • தலைத் தணீர் மலர் அணிந்து சந்தனம் செய் பந்தரும்
  • கொலைத் தலைய வேல் கணார் கூத்தும் அன்றி ஐம் பொறி
  • நிலத் தலைய துப்பு எலாம் நிறை துளும்பும் ஊர்களே
   
76.
  • அடிசில் வைகல் ஆயிரம் அறப் புறமும் ஆயிரம்
  • கொடி அனார் செய் கோலமும் வைகல் தோறும் ஆயிரம்
  • மடிவு இல் கம்மியர்களோடும் மங்கலமும் ஆயிரம்
  • ஒடிவு இலை வேறு ஆயிரம் ஓம்புவாரின் ஓம்பவே
   
77.
  • நல்தவம் செய்வார்க்கு இடம் தவம் செய்வார்க்கும் அஃது இடம்
  • நல் பொருள் செய்வார்க்கு இடம் பொருள் செய்வார்க்கும் அஃது இடம்
  • வெற்ற இன்பம் விழைவிப்பான் விண் உவந்து வீழ்ந்து என
  • மற்ற நாடு வட்டம் ஆக வைகும் அற்ற நாடு அரோ