சோலை நுகர்வு
 
2707.
  • பூ நிறை செய்த செம் பொன் கோடிகம் புரையும் அல்குல்
  • வீ நிறை கொடி அனாரும் வேந்தனும் இருந்த போழ்தில்
  • தூ நிறத் துகிலின் மூடிப் படலிகை கொண்டு வாழ்த்தி
  • மா நிறத் தளிர் நல் மேனி மல்லிகை மாலை சொன்னாள்
   
2708.
  • தட முலை முகங்கள் சாடிச் சாந்து அகம் கிழிந்த மார்பின்
  • குட வரை அனைய கோலக் குங்குமக் குவவுத் தோளாய்
  • தொடை மலர் வெறுக்கை ஏந்தித் துன்னினன் வேனில் வேந்தன்
  • இடம் அது காண்க என்றாள் இறைவனும் எழுக என்றான்
   
2709.
  • முடித் தலை முத்தம் மின்னும் முகிழ் முலை முற்றம் எல்லாம்
  • பொடித்துப் பொன் பிதிர்ந்த ஆகத்து இளையவர் புகழ்ந்து சூழக்
  • கடுத்த வாள் கனல ஏந்திக் கன்னியர் காவல் ஓம்ப
  • இடிக் குரல் சீயம் ஒப்பான் இழை ஒளி விளங்கப் புக்கான்
   
2710.
  • இலங்கு பொன் ஆரம் மார்பின் இந்திரன் உரிமை சூழக்
  • கலந்த பொன் காவு காண்பான் காமுறப் புக்கதே போல்
  • அலங்கு பொன் கொம்பு அனாரும் மன்னனும் ஆட மாதோ
  • நலம் கவின் கொண்ட காவு நல் ஒளி நந்திற்று அன்றே
   
2711.
  • புலவியுள் மகளிர் கூந்தல் போது உகுக்கின்றதே போல்
  • குலவிய சிறகர்ச் செங் கண் கருங் குயில் குடையக் கொம்பர்
  • நிலவிய தாது பொங்க நீள் மலர் மணலில் போர்த்துக்
  • கலவியில் படுத்த காய் பொன் கம்பலம் ஒத்தது அன்றே
   
2712.
  • காசு நூல் பரிந்து சிந்திக் கம்பலத்து உக்கதே போல்
  • மூசு தேன் வண்டு மொய்த்து முருகு உண்டு துயில மஞ்ஞை
  • மாசு இல் பூம் பள்ளி வைகி வளர்ந்து எழு மகளிர் ஒப்பத்
  • தூசு போல் சிறகர் அன்னம் தொழுதியோடு இரியச் சேர்ந்தார்
   
2713.
  • காதிக் கண் அரிந்து வென்ற உலகு உணர் கடவுள் காலத்து
  • ஆதிக் கண் மரங்கள் போன்ற அம் சொலீர் இதனின் உங்கள்
  • காதலின் காணல் உற்ற இடம் எலாம் காண்மின் என்றான்
  • நீதிக் கண் நின்ற செங் கோல் நிலவு வீற்று இருந்த பூணான்
   
2714.
  • வானவர் மகளிர் என்ன வார் கயிற்று ஊசல் ஊர்ந்தும்
  • கானவர் மகளிர் என்னக் கடிமலர் நல்ல கொய்தும்
  • தேன் இமிர் குன்றம் ஏறிச் சிலம்பு எதிர் சென்று கூயும்
  • கோன் அமர் மகளிர் கானில் குழாம் மயில் பிரிவது ஒத்தார்
   
2715.
  • நெடு வரை அருவி ஆடிச் சந்தனம் நிவந்த சோலைப்
  • படு மதம் கவரும் வண்டு பைந் தளிர்க் கவரி ஏந்திப்
  • பிடி மகிழ்ந்து ஓப்ப நின்ற பெருங் களிற்று அரசு நோக்கி
  • வடி மதர் மழைக் கண் நல்லார் மன்னனை மகிழ்ந்து நின்றார்
   
2716.
  • கொழு மடல் குமரி வாழைத் துகில் சுருள் கொண்டு தோன்றச்
  • செழுமலர்க் காம வல்லி செருக் கயல் சிற்பம் ஆகக்
  • கழுமணிச் செம் பொன் ஆழிக் கைவிரல் உகிரின் கிள்ளி
  • விழு முலைச் சூட்டி நின்றார் விண்ணவர் மகளிர் ஒத்தார்
   
2717.
  • கடைதயிர்க் குரல வேங்கை கண் உறச் சென்று நண்ணி
  • மிடை மயிர்க் கவரி நல் ஆன் கன்று உணக் கண்டு நிற்பார்
  • புடை திரண்டு எழுந்த பொம்மல் வனமுலை பொறுக்கல் ஆற்றார்
  • நடை மெலிந்து இகலி அன்ன நல் நடை நயந்து நிற்பார்
   
2718.
  • எம் வயின் வருக வேந்தன் இங்கு என இரங்கு நல்லியாழ்
  • வெம்மையின் விழையப் பண்ணி எஃகு நுண் செவிகள் வீழச்
  • செம்மையின் கனிந்த காமத் தூது விட்டு ஓத முத்தம்
  • வெம் முலை மகளிர் வீழ் பூம் பொதும்பருள் விதும்பினாரே
   
2719.
  • பிடி மருள் நடையினார் தம் பெருங் கவின் குழையப் புல்லித்
  • தொடை மலர்க் கண்ணி சேர்த்திச் சுரும்பு உண மலர்ந்த மாலை
  • உடை மது ஒழுகச் சூட்டி உருவத் தார் குழைய வைகிக்
  • கடிமலர் மகளிர் ஒத்தார் காவலன் களி வண்டு ஒத்தான்
   
2720.
  • இழைந்தவர் நலத்தை எய்தி இனம் திரி ஏறு போலக்
  • குழைந்த தார் நெகிழ்ந்த தானைக் கொற்றவன் பெயர்ந்து போகி
  • வழிந்து தேன் வார்ந்து சோரும் வருக்கையின் நீழல் சேர்ந்தான்
  • விழைந்த அக் கடுவன் ஆங்கு ஓர் மந்தியை விளித்தது அன்றே
   
2721.
  • அளித்து இள மந்தி தன்னை
  • ஆர்வத்தால் விடாது புல்லி
  • ஒளித்து ஒரு பொதும்பர்ச் சேர்ந்து
  • ஆங்கு ஒரு சிறை மகிழ்ச்சி ஆர்ந்து
  • தளிர்த் தலைப் பொதும்பர் நீங்கித்
  • தம் இனம் இரண்டும் சேர்ந்த
  • களித் தலைக் கூட்டம் காதல் மந்தி
  • கண்டு இருந்தது அன்றே
   
2722.
  • பரத்தையர் தோய்ந்த மார்பம்
  • பத்தினி மகளிர் தீண்டார்
  • திருத்தகைத்து அன்று தௌ நீர்
  • ஆடி நீர் வம்மின் என்ன
  • உரைத்தது என் மனத்தில் இல்லை
  • உயர் வரைத் தேனை உண்பார்
  • வருத்தும் காஞ்சிரமும் வேம்பும்
  • வாய்க் கொள்வார் யாவர் சொல்லாய்
   
2723.
  • ஈகு இனி என்னை நோக்கி எவன் செய்தி எனக்கு வாழ்நாள்
  • நீங்கிற்றுச் சிறிது நிற்பின் காண்டியால் நீயும் என்னத்
  • தூங்கித் தான் துளங்க மந்தி தொழுத்தையேன் செய்தது என்று
  • தாங்குபு தழுவிக் கொண்டு தன்னைத் தான் பழித்தது அன்றே
   
2724.
  • கண்ணினால் குற்றம் கண்டும் காதலன் தெளிப்பத் தேறிப்
  • பெண்மையால் பழித்த மந்தி பெரு மகிழ் உவகை செய்வான்
  • திண் நிலைப் பலவின் தேம் கொள் பெரும் பழம் கொண்டு கீறிப்
  • பண் உறு சுளைகள் கையால் பகுத்து உணக் கொடுத்தது அன்றே
   
2725.
  • இன் கனி கவரும் மந்தி கடுவனோடு இரிய ஆட்டி
  • நன் கனி சிலதன் உண்ண நச்சுவேல் மன்னன் நோக்கி
  • என்பொடு மிடைந்த காமம் இழிபொடு வெறுத்து நின்றான்
  • அன்புடை அரிவை கூட்டம் பிறன் உழைக் கண்டது ஒத்ததே
   
2726.
  • கைப் பழம் இழந்த மந்தி கட்டியங் காரன் ஒத்தது
  • இப்பழம் துரந்து கொண்ட சிலதனும் என்னை ஒத்தான்
  • இப்பழம் இன்று போகத்து இன்பமே போலும் என்று
  • மெய்ப்பட உணர்வு தோன்றி மீட்டு இது கூறினானே
   
2727.
  • மெலியவர் பெற்ற செல்வம் வேரொடும் கீழ்ந்து வெளவி
  • வலியவர் கொண்டு மேலை வரம்பு இகந்து அரம்பு செய்யும்
  • கலி அது பிறவி கண்டாம் காலத்தால் அடங்கி நோற்று
  • நலிவு இலா உலகம் எய்தல் நல்லதே போலும் என்றான்
   
2728.
  • நல் வினை என்னும் நன் பொன் கற்பக மகளிர் என்னும்
  • பல் பழ மணிக் கொம்பு ஈன்று பரிசில் வண்டு உண்ணப் பூத்துச்
  • செல்வப் பொன் சிறுவர் என்னும் தாமங்கள் தாழ்ந்து நின்றது
  • ஒல்கிப் போம் பாவக் காற்றின் ஒழிக இப் புணர்ச்சி என்றான்
   
2729.
  • வேட்கைமை என்னும் நாவின் காம வெம் தேறல் மாந்தி
  • மாட்சி ஒன்றானும் இன்றி மயங்கினேற்கு இருளை நீங்கக்
  • காட்டினார் தேவர் ஆவர் கை விளக்கு அதனை என்று
  • தோட்டியால் தொடக்கப் பட்ட சொரி மதக் களிற்றின் மீண்டான்
   
2730.
  • கைந்நிறை எஃகம் ஏந்திக் கன மணிக் குழை வில் வீச
  • மைந் நிற மணி வண்டு ஆர்ப்ப வார்தளிர் கவரி வீச
  • மெய்ந் நெறி மகிழ்ந்து நின்றான் வேனில் வாய்க் காமன் ஒத்தான்
  • மொய்ந் நிற மாலை வேய்ந்து முருகு உலாம் முடியினானே
   
2731.
  • நடுச் சிகை முத்துத் தாமம் வாள் நுதல் நான்று நக்கப்
  • படுத்தனர் பைம் பொன் கட்டில் பாடினார் கீதம் தூபம்
  • எடுத்தனர் எழுந்து தேன் ஆர் எரி மணி வீணை ஆர்த்த
  • கொடிப் பல பூத்துச் சூழ்ந்த குங்குமக் குன்றம் ஒத்தான்
   
2732.
  • மௌளவே புருவம் கோலி விலங்கிக் கண் பிறழ நோக்கி
  • முள் எயிறு இலங்கச் செவ்வாய் முறுவல் தூது ஆதி ஆக
  • அள்ளிக் கொண்டு உண்ணக் காமம் கனிவித்தார் பனிவில் தாழ்ந்த
  • வள் இதழ் மாலை மார்பன் வச்சிர மனத்தன் ஆனான்
   
2733.
  • முலை முகம் சுமந்த முத்தத் தொத்து ஒளிர் மாலையாரும்
  • மலை முகந்த அனைய மார்பின் மன்னனும் இருந்த போழ்தில்
  • கொலை முகக் களிறு அனாற்கு நாழிகை சென்று கூறக்
  • கலைமுக மல்லர் புல்லிக் கமழும் நீர் ஆட்டினாரே
   
2734.
  • வெண் துகில் மாலை சாந்தம் விழுக்கலம் வீதியில் சேர்த்தி
  • நுண் துகில் திரைகள் சேர்ந்த நூற்று உலா மண்டபத்துக்
  • கண் திரள் முத்தம் மென் தோள் காவிக் கண் மகளிர் போற்றி
  • எண் திசை மருங்கும் ஏத்த இனிதினின் ஏறினானே
   
2735.
  • நெய் வளம் கனிந்து வாசம் நிறைந்து வான் வறைகள் ஆர்ந்து
  • குய் வளம் கழுமி வெம்மைத் தீம் சுவை குன்றல் இன்றி
  • ஐவருள் ஒருவன் அன்ன அடிசில் நூல் மடையன் ஏந்த
  • மை வரை மாலை மார்பன் வான் சுவை அமிர்தம் உண்டான்
   
2736.
  • கைப்பொடி சாந்தம் ஏந்திக் கரக நீர் வீதியில் பூசி
  • மைப்படு மழைக் கண் நல்லார் மணிச் செப்பின் வாசம் நீட்டச்
  • செப்பு அடு பஞ்ச வாசம் திசை எலாம் கமழ வாய்க்கொண்டு
  • ஒப்பு உடை உறுவர் கோயில் வணங்குதும் எழுக என்றான்