நிலையாமை
 
2754.
  • இன்ன தன்மையின் அருமையின் எய்திய பொழுதே
  • பொன்னும் வெள்ளியும் புணர்ந்து என வயிற்று அகம் பொருந்தி
  • மின்னும் மொக்குளும் என நனி வீயினும் வீயும்
  • பின்னை வெண்ணெயின் திரண்ட பின் பிழைக்கவும் பெறுமே
   
2755.
  • வெண்ணெய் ஆயது வீங்குபு கூன் புற யாமை
  • வண்ணம் எய்தலும் வழுக்கவும் பெறும் அது வழுக்காது
  • ஒண்மை வாள் மதி உருவொடு திரு எனத் தோன்றிக்
  • கண் அனார் அழக் கவிழினும் கவிழும் மற்று அறி நீ
   
2756.
  • அழிதல் இன்றி அங்கு அருநிதி இரவலர்க்கு ஆர்த்தி
  • முழுதும் பேர் பெறும் எல்லையுள் முரியினும் முரியும்
  • வழு இல் பொய்கையுள் மலர் என வளர்ந்து மை ஆடிக்
  • கெழீஇ யினாரொடும் கிளை அழக் கெடுதலும் கெடுமே
   
2757.
  • கெடுதல் அவ்வழி இல் எனின் கேள்விகள் துறைபோய்
  • வடி கொள் கண்ணியர் மனம் குழைந்து அநங்கன் என்று இரங்கக்
  • கொடையும் கோலமும் குழகும் தம் அழகும் கண்டு ஏத்த
  • விடையில் செல்வுழி விளியினும் விளியும் மற்று அறி நீ
   
2758.
  • எரி பொன் மேகலை இலங்கு அரிச் சிலம்பொடு சிலம்பும்
  • அரி பொன் கிண்கிணி அணி இழை அரிவையர்ப் புணர்ந்து
  • தெரிவு இல் போகத்துக் கூற்றுவன் செகுத்திடச் சிதைந்து
  • முரியும் பல்சன முகம் புடைத்து அகம் குழைந்து அழவே
   
2759.
  • கோதை மங்கையர் குவி முலைத் தடத்து இடைக் குளித்துக்
  • காதல் மக்களைக் கண்டு உவந்து இனிதினில் கழிப்பப்
  • பேது செய் பிணிப் பெரும் புலி பாய்ந்திடப் பிணம் ஆம்
  • ஓத மாக் கடல் உடை கலத்தவர் உற்றது உறவே
   
2760.
  • காமம் பைப் பயக் கழியத் தம் கடைப் பிடி சுருங்கி
  • ஊமர் போலத் தம் உரை அவிந்து உறுப்பினில் உரையாத்
  • தூய்மையில் குளம் தூம்பு விட்டு ஆம் பொருள் உணர்த்தி
  • ஈமம் ஏறுதல் ஒருதலை இகல் அமர் கடந்தோய்
   
2761.
  • தேம் கொள் பூம் கண்ணித் திருமுடித் திலக வெண் குடையோய்
  • ஈங்கு இது அன்றியும் இமையவர் அமையலர்க் கடந்த
  • தாங்கும் மா வண்கைச் சக்கரம் மிக்கு உயர் பிறரும்
  • யாங்கணார் அவர் ஊரொடு பேர் எமக்கு உரையாய்