மக்கள் கதித் துன்பம்
 
2790.
  • தம்மை நிழல் நோக்கித் தாங்கார் மகிழ் தூங்கிச்
  • செம்மை மலர் மார்பம் மட்டித்து இளையார் தோள்
  • கொம்மைக் குழகு ஆடும் கோல வரை மார்பர்
  • வெம்மை மிகு துன்பம் வேந்தே சில கேளாய்
   
2791.
  • ஈருள் தடி மூடி ஈண்டும் மலப் பண்டப்
  • போர்வை புழு மொய்ப்பப் பொல்லாக் குடர் சூடிச்
  • சார்தற்கு அரிதாகித் தான் நின்று அறா அள்ளல்
  • நீர்வாய்ச் சுரம் போந்தார் தம்மை நினையாரோ
   
2792.
  • அம் சொல் மடவார் தம் ஆர்வக் களி பொங்க
  • நெஞ்சத்து அயில் ஏற்றும் நீள் வெம் கழு ஊர்ந்தும்
  • குஞ்சிக் களியானைக் கோட்டால் உழப்பட்டும்
  • துஞ்சிற்று உலகு அந்தோ துன்பக் கடலுள்ளே
   
2793.
  • பண்ணார் களிறே போல் பாய் ஓங்கு உயர் நாவாய்
  • கண்ணார் கடல் மண்டிக் காற்றில் கவிழுங்கால்
  • மண்ணார் மணிப் பூணோய் மக்கள் உறும் துன்பம்
  • நண்ணா நரகத்தின் நான்காம் மடி அன்றே
   
2794.
  • செந் தீப் புகை உண்டும் சேற்றுள் நிலை நின்றும்
  • அந்தோ என மாற்றால் ஆற்றப் புடை உண்டும்
  • தந்தீக எனா முன் கை வீக்கத் தளர்வுற்றும்
  • நொந்தார் குடிச் செல்வர் நோன்மை நுகம் பூண்டார்
   
2795.
  • கண் சூன்றிடப் பட்டும் கால் கை களைந்து ஆங்கே
  • அண்பல் இறக் கையால் ஆற்றத் தகர் பெற்றும்
  • நுண் சாந்து அரைப்பார் போல் நோவ முழங்கையால்
  • புண் செய்திடப் பட்டும் புன்கண் உழப்பவே
   
2796.
  • மாலைக் குடை மன்னர் வையம் அகற்றுவான்
  • காலைக் கதி துன்பம் காவல் பெருந் துன்பம்
  • சோலை மயில் அன்னார் தோள் சேர்விலர் ஆயின்
  • வேலைக் கடலே போல் துன்பம் விளையுமே
   
2797.
  • ஊன் சேர் உடம்பு என்னும் ஓங்கல் மரச் சோலை
  • தான் சேர் பிணி என்னும் செந் தீக் கொடி தங்கிக்
  • கான் சேர் கவின் என்னும் காமர் மலர் வாடத்
  • தேன் சேர் மலர் மார்ப தீத்திட்டு இறக்குமே
   
2798.
  • கொட்டுப் பிடி போலும் கூனும் குறள் ஆமை
  • விட்டு நடப்பன போல் சிந்தும் விளைந்து சீ
  • அட்டும் உயவு நோய் அல்லாப் பிற நோயும்
  • பட்டார் உறு துன்பம் பன்னிச் சொலலாமோ
   
2799.
  • வேட்டன பெறாமை துன்பம்
  • விழை நரைப் பிரிதல் துன்பம்
  • மோட்டு எழில் இளமை நீங்க
  • மூப்பு வந்து அடைதல் துன்பம்
  • ஏட்டு எழுத்து அறிதல் இன்றி
  • எள்ளற்பாடு உள்ளிட்டு எல்லாம்
  • சூட்டு அணிந்து இலங்கும் வேலோய்
  • துன்பமே மாந்தர்க்கு என்றான்