தேவ கதித் துன்பம்
 
2800.
  • திருவில் போல் குலாய தேம் தார்த்
  • தேவர் தம் தன்மை செப்பின்
  • கருவத்துச் சென்று தோன்றார்
  • கால் நிலம் தோய்தல் செல்லார்
  • உருவமேல் எழுதல் ஆகா ஒளி
  • உமிழ்ந்து இலங்கும் மேனி
  • பருதியின் இயன்றது ஒக்கும்
  • பல் மலர்க் கண்ணி வாடா
   
2801.
  • அம் கையும் அடியும் நோக்கில் தாமரை அலர்ந்தது ஒக்கும்
  • பங்கயம் அனைய செங் கண் பகு ஒளிப் பவழம் செவ்வாய்
  • செங்கதிர் முறுவல் முத்தின் தெளி நகை திகழும் செய்யாள்
  • வெம் கடை மழைக் கண் நோக்கி வெய்து உறத் திரண்ட அன்றே
   
2802.
  • தாள் நெடுங் குவளைக் கண்ணித் தளை அவிழ் கோதை மாலை
  • வாள் முடி வைர வில்லும் வார் குழை சுடரும் மார்பில்
  • பூண் இடை நிலவும் மேனி மின்னொடு பொலிந்த தேவர்
  • ஊண் உடை அமிர்தம் வேட்டால் உண்பது மனத்தினாலே
   
2803.
  • சிதர் அரி ஒழுகி ஓடிச் செவி உறப் போழ்ந்து நீண்ட
  • மதர் அரி மழைக் கண் அம்பா வாங்கு வில் புருவம் ஆகத்
  • துதை மணிக் கலாபம் மின்னத் தொல் மலர்க் காமன் அம்பு
  • புதை மலர் மார்பத்து எய்யப் பூ அணை மயங்கி வீழ்வார்
   
2804.
  • பூத் ததை கொம்பு போன்று பொன் இழை சுடரும் மேனி
  • ஏத் தரும் கொடி அனாரை இரு நடு ஆகப் புல்லிக்
  • காய்த்தியிட்டு உள்ளம் வெம்பிக் கடைந்திடுகின்ற காமம்
  • நீத்து நீர்க் கடலை நீந்தும் புணை என விடுத்தல் செல்லார்
   
2805.
  • பொங்கல் வெம் முலைகள் என்னும் போதொடு பொருது பூந்தார்
  • அம் கலம் தொடையல் மாலை கிழிந்து அழகு அழிய வைகிக்
  • கொங்கு அலர் கோதை நல்லார் குரை கடல் அமிர்தம் ஆகத்
  • தங்கலர் பருகி ஆரார் தாழ்ந்து கண் இமைத்தல் செல்லார்
   
2806.
  • கருவியின் இசைகள் ஆர்ப்பக் கற்பக மரத்தின் நீழல்
  • பொரு கயல் அனைய கண்ணும் புருவமும் அரவம் செய்ய
  • அரவ மேகலைகள் அம் பொன் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்பத்
  • திரு அனார் ஆடல் கண்டும் திருவொடு திளைத்தும் ஆனார்
   
2807.
  • பனி முகில் முளைத்த நான்கு பசுங் கதிர்த் திங்கள் ஒப்பக்
  • குனி மருப்பு உழுது மேகம் குஞ்சரம் குனிந்து குத்த
  • இனிதினின் இலங்கு பொன் தோடு ஏற்றுமின் குழைகள் பொங்கத்
  • துனிவு இலர் களிற்றோடு ஆடித் தொழுதகக் கழிப்பர் வேந்தே
   
2808.
  • கடிகை வாள் ஆரம் மின்னக் கற்பகக் காவு கண்டும்
  • தொடி கவின் அறாத மென் தோள் தேவியர் சூழ வாமன்
  • அடி கையின் தொழுது பூத்தூய் அஞ்சலி செய்து வீடே
  • முடிக இப் பிறவி வேண்டேம் முனைவ என்று இரப்ப அன்றே
   
2809.
  • மலம் குவித்து ஆவி வாட்டி வாய் நிறை அமிர்தம் பெய்த
  • இலங்கு பொன் கலசம் அன்ன எரி மணி முலைகள் பாயக்
  • கலந்தனர் சென்ற பின் நாள் கதிர் கழன்று இருந்த வெய்யோன்
  • புலம்பு போல் புலம்பித் தேவர் பொற்பு உகுத்து இருப்ப அன்றே
   
2810.
  • எல்லை மூ ஐந்து நாள்கள் உள என இமைக்கும் கண்ணும்
  • நல் எழில் மாலை வாடும் நஞ்சு உடை அமிர்து உண்டாரின்
  • பல் பகல் துய்த்த இன்பம் பழுது எனக் கவல்ப கண்டாய்
  • பில்கித் தேன் ஒழுகும் பைந்தார்ப் பெரு நில வேந்தர் வேந்தே
   
2811.
  • தேவரே தாமும் ஆகித் தேவரால் தொழிக்கப் பட்டும்
  • ஏவல் செய்து இறைஞ்சிக் கேட்டும் அணிகம் மாப்பணிகள் செய்தும்
  • நோவது பெரிதும் துன்ப நோயினுள் பிறத்தல் துன்பம்
  • யாவதும் துன்பம் மன்னோ யாக்கை கொண்டவர்கட்கு என்றான்