அந்தப்புர விலாவணை
 
2942.
  • ஒருவர் தம் வலி கெடும் உடன்று பொங்கி மேல்
  • இருவர் மற்று இயைந்து எழுந்து இருப்பின் என்ப போல்
  • உருவ நுண் நுசுப்பு இற இருந்த ஒண் மணிப்
  • பரிய கண் படா முலைப் பைம் பொன் கொம்பு அனீர்
   
2943.
  • காதலம் கழிந்த நாள் இதனின் இப்புறம்
  • ஏதிலம் என்ற சொல் செவிச் சென்று எய்தலும்
  • மாதரார் மழை மலர்த் தடம் கண் மல்குநீர்
  • போது உலாம் மார்பின் வாய்ப் பொழிந்து வீழ்ந்தவே
   
2944.
  • செருக்கி நிணம் தின்று சிவந்து
  • மன்னர் உயிர் செற்ற
  • நெருப்புத் தலை நெடு வேல் கண்ணார்
  • கண்ணீர் நிழல் மணிப்பூண்
  • பரப்பினிடைப் பாய்ந்து குளம்
  • ஆய்ப் பால் ஆர் படா முலையை
  • வருத்தி மணி நெடுங் கோட்டு
  • அருவி போல வீழ்ந்தனவே
   
2945.
  • அழல் ஏந்து வெம் கடுஞ் சொல்
  • உரும் ஏறு உண்டு ஆங்கு அலர் சிந்தி
  • நிழல் ஏந்து பூம் கொடிகள்
  • நிலம் சேர்ந்து ஆங்கு நிலம் சேர்ந்து
  • கழல் ஏந்து சேவடிக் கீழ்க்
  • கண்ணீர் வெள்ளம் கலம் நிரப்பக்
  • குழல் ஏங்குமாறு ஏங்கி
  • அழுதார் கோதை மடவாரே
   
2946.
  • குலிக அம் சேற்றுள் நாறிக் குங்கும நீருள் ஓங்கிப்
  • பொலிக என வண்டு பாடப் பூத்த தாமரைகள் போலும்
  • ஒலி கழல் அடிகள் நும் கீழ்ப் பிழைத்தது என் உரைமின் என்னப்
  • புலி நிழல் பட்ட மான் போல் போகு உயிர் ஆகி நின்றார்
   
2947.
  • அருந் தவிசு ஆகி எம்மைச் சுமந்து அயா உயிர்த்த ஆண்மைப்
  • பெருந் தகு குறங்குகாள் நீர் பெண் உயிர் அளியதா மே
  • வருந்துமால் என்று நோக்கீர் வாடுமால் ஆவி என்னீர்
  • விருந்தினர் போல நின்றீர் வெற்றுடல் காண்மின் என்பார்
   
2948.
  • கோதையும் துகிலும் ஏந்திக் குங்குமம் எழுதிக் கொய் பூந்
  • தாது கொண்டு அளகத்து அப்பித் தட முலை வருடிச் சேர்ந்து
  • காதல் கொண்டு இருந்த காமர் கை விரல் அளிய நீரும்
  • ஏதிலர் ஆகிக் கோமான் எண்ணமே எண்ணி னீரே
   
2949.
  • பஞ்சி கொண்டு எழுதி ஆர்ந்த சீறடி பனித்தல் அஞ்சிக்
  • குஞ்சி மேல் ஏற்ற கோமான் கொப்புளித்திட்ட எம்மை
  • வஞ்சித்தீர் மணி செய் தோள்காள் வாங்குபு தழுவிக் கொள்ளீர்
  • நெஞ்சம் நீர் வலியீர் ஆகி நிற்பீரோ நீரும் என்பார்
   
2950.
  • முட்டு வட்டு அனைய கோல முத்து உலாய்க் கிடந்து மின்ன
  • மட்டு விட்டு அலர்ந்த கோதை மதுவொடு மயங்கி நாளும்
  • ஒட்டி இட்டு உறைய எங்கட்கு உயர் அணை ஆய மார்ப
  • நட்பு விட்டு ஒழியும் ஆயின் நன்மை யார் கண்ணது அம்மா
   
2951.
  • மாக் கவின் வளரத் தீண்டி மணி நகை நக்கு நாளும்
  • பூக் கவின் ஆர்ந்த பைந்தார் புனை மதுத் தேனொடு ஏந்தித்
  • தாக்கி எம் முலைகள் தம்மை நெருக்கினாய் தரணி மன்னின்
  • நீக்கி நீ எம்மை நோக்காய் நீத்தியோ நீயும் என்பார்
   
2952.
  • அன்னமே தோகை நல் யாழ் அமுதமே ஆய்ந்த தீம் தேன்
  • இன்னரே நங்கைமார் என்று ஏத்திய பவளச் செந் நா
  • என்னை நீ கண்டது எம்மை இரண்டு நா ஆயினாயே
  • மன்னன் போல் ஈரம் இன்றி வலித்தனை வாழி என்பார்
   
2953.
  • பூணினால் நெருங்க நொந்து பொதிர்த்தன வெம்பி என்று
  • நாணினால் வருத்தம் தீர்ப்பான் நல் முலைக் கண்கள் தம்மைப்
  • பேணி நீர் எழுதி ஓம்பிப் பேர் இன்பம் கொண்டு தந்தீர்
  • காண்மினோ இன்று எம் வண்ணம் கண்ணிலீர் கண்கள் என்பார்
   
2954.
  • சென்னி மேல் மிதித்த அம் செஞ் சீறடித் திருவில் வீச
  • மின்னி வாள் ஆரம் சிந்த வெறு நிலத்து உறைந்து நீ எம்
  • இன்னகை முறுவல் பார்த்தாய் இன்று எமது ஆவி பார்த்தாய்
  • மன்னிய மாலை வண்டார் மணி முடி வாழி என்பார்
   
2955.
  • வீங்கு பால் கடலும் நஞ்சாய் விளைந்ததால் விரிந்த வெய்யோன்
  • பாங்கு இலா இருளை ஈன்று பார் மறைத்து இட்டதாலோ
  • தீம் கதிர்த் திங்கள் செந் தீச் சொரிந்ததால் திசைகள் எல்லாம்
  • தாங்குமாறு என்னை ஆவி தரிக்கிலேம் தேவீர் காளோ
   
2956.
  • விண்ணோர் மட மகள் கொல் விஞ்சை மகளே கொல்
  • கண்ணார் கழி வனப்பில் காந்தருவ தத்தை என்று
  • எண் ஆய வான் நெடுங் கண் மெய் கொள்ள ஏமுற்றுப்
  • பண்ணால் பயின்றீர் இனி என் பயில்வீரே
   
2957.
  • கொல் வேல் நெடுங் கண் குணமாலை குஞ்சரத்தால்
  • அல்லல் நோய் உற்றாளுக்கு அன்று களிறு அடர்த்துப்
  • புல்லிப் புணர் முலையின் பூங் குவட்டின் மேல் உறைந்தாய்
  • எல்லே மற்று எம் பெருமாற்கு இன்று இவளும் மின்னாளோ
   
2958.
  • தூம்பு உடைய வெள் எயிற்றுத் துத்தி அழல் நாகப்
  • பாம்பு உடைய நோக்கிப் பதுமை பவழவாய்
  • தேம்பு உடைய இன் அமுதாச் சேர்ந்தாய்க்கு இனி அதுவே
  • ஆம்புடைய நஞ்சு அடங்கிற்று இன்று ஊறிற்று ஆகாதே
   
2959.
  • தாழ்ந்து உலவி மெல் முலை மேல் தண் ஆரம் வில் விலங்கப்
  • போழ்ந்து அகன்ற கண்ணினால் ஏப் பெற்றுப் போகலாய்
  • தாழ்ந்து அமரர் இன் அமிர்தம் தக்க நாட்டு ஆகாதே
  • வீழ்ந்தது என வீழ்ந்தாய் நீ இன்று அதுவும் விட்டாயோ
   
2960.
  • கண்ணோ கயலோ கழுநீரோ காவியோ
  • பெண்ணோ அமுதோ பிணையோ எனப் பிதற்றித்
  • துண் என் சிலைத் தொழிலும் காட்டி முன் இன்புற்றீர்
  • புண் மேல் கிழிபோல் துறத்தல் பொருள் ஆமோ
   
2961.
  • பொன் நகர வீதி புகுந்தீர் பொழி முகிலின்
  • மின்னின் இடை நுடங்க நின்றாள் தன் வேல் நெடுங் கண்
  • மன்னன் நகர் எல்லாம் போர்ப்ப வலைப் பட்டீர்க்கு
  • இன்னே ஒளி இழந்த இன்னா இடுகினவோ
   
2962.
  • செங்கச்சு இள முலையார் திண் கறைஊர் பல்லினார்
  • மங்கையர்கள் காப்ப மகிழ்ந்தாளை நீ மகிழ்ந்து
  • பங்கயமே போல்வாளைப் பார்ப்பான் ஆய்ப் பண் அணைத்துத்
  • தங்கினாய் கோவே துறத்த தகவு ஆமோ
   
2963.
  • புல்லார் உயிர் செகுத்த பொன் அம் திணி தோளாய்
  • மல் ஆர் அகன் மார்ப மட்டு ஏந்தி வாய் மடுத்திட்டு
  • எல்லாரும் காண இலக்கணையோடு ஆடினாய்
  • அல்லாந்து அவள் நடுங்க அன்பின் அகல்வாயோ