கோயில் விலாவணை
 
2964.
  • கல்லோ மரனும் இரங்கக் கலுழ்ந்து உருகி
  • எல்லாத் திசை தோறும் ஈண்டி இன மயில் போல்
  • சொல்லாத் துயர்வார் தொழுவார் அழுவார் ஆய்
  • அல்லாந்து அகன் கோயில் ஆழ்கடல் போல் ஆயிற்றே
   
2965.
  • பூப் பரிவார் பொன் செய் கலம் பரிவார் பொன் வளையை
  • நீப்பிர் எனப் புடைப்பார் நீள் தாமம் சிந்துவார்
  • ஏப் பெற்ற மான் பிணை போல் ஏங்குவார் இன் உயிரைக்
  • காப்பரேல் காவலனார் காவாரோ இன்று என்பார்
   
2966.
  • கழுநீரும் தாமரையும் கண்டனவே போலும்
  • முழுநீர் வேல் கண்ணும் முகமும் உலறிச்
  • செழுநீர் மணிக் கொடிகள் காழகம் சேர் கொம்பாய்
  • அழுநீர வாய் அலறி அல்லாப்ப போன்றாரே
   
2967.
  • பண்ணார் பணை முழவம் பாடு அவிந்து
  • பல் மணியாழ் மழலை நீங்கிப்
  • புண்ணார் புனை குழலும் ஏங்கா
  • புனை பாண்டில் இரங்கா வான்பூங்
  • கண்ணார் ஒலி கவுள கிண்கிணியும்
  • அம் சிலம்பும் கலையும் ஆரா
  • மண்ணார் வலம்புரியும் வாய் மடங்கிக்
  • கோன் கோயில் மடிந்தது அன்றே
   
2968.
  • அணியார் மணி அரக்கு வட்டு
  • அழுத்தி வைத்த அனைய செங்கண் மாத்தாள்
  • பிணியார் பெரும் துருத்தி
  • அன்ன பெரும் கவுள பிறை ஏர் கோட்ட
  • பணியார் கமழ் கடாத்து அண்ணல்
  • அரசுவாப் பண்ணார் பாய்மா
  • இணையாதும் இல்லாத கண்ணீர்
  • வீழ்த்து உண்ணா நின்று இனைந்ததாமே
   
2969.
  • கழித்த கடிப் பிணையும் கை வளையும்
  • மாலையும் களைந்து முத்தும்
  • தொழித்த நறும் சாந்தும் சுண்ணமும்
  • பல் மணியும் கலனும் சிந்தி
  • விழித்து வியன் கோயில் பல் மீன்
  • பரந்து இமைக்கும் பனியார் வானம்
  • பழித்துப் பசும் பொன் உலகு குடி
  • போயிற்று ஒத்தது அன்றே
   
2970.
  • அழலார் சுரை எயிற்று வெம் சின
  • ஐந் தலை சுமந்த வெகுளி நாகம்
  • நிழலார் திருமணியும் தேவர்
  • திரு முடி மேல் நிலவி வீசும்
  • சுழல் ஆர் பசும் பொன்னும் வேய்ந்து
  • சொரி கதிர் மென் பஞ்சி ஆர்ந்த
  • கழலான் நகரம் அமுது கடை
  • கடல் போல் கலங்கிற்று அன்றே