|
இதுவுமது
|
10. |
கோள்வலைப்பட்டுச்
சாவாங்
கொலைக்களங் குறித்துச் சென்றே
மீளினு மீளக் காண்டு
மீட்சியொன் றானு மில்லா
நாளடி யிடுத றோன்று
நம்முயிர் பருகுங் கூற்றின்
வாளின்வாய்த் தலைவைப் பாக்குச்
செல்கின்றோம் வாழ்கின் றோமோ. |
(இ - ள்.) கோள்வலைப்பட்டு - பகைவரால்
சிறையாகப்
பிடிக்கப்பட்டு; கொலைக்களம் குறித்துச் சென்றே - கொலைக்களத்திற்
கொடுபோய்க் கொல்லுதலைக் குறித்துச் சென்று; மீளினும் மீளக்காண்டும்
- ஒரோ வழிக் கொலையுண்ணாமல் மீண்டும் வருபவரையும் யாம்
காணலாம்; மீட்சி ஒன்றானும் இல்லா - ஆனால் எவ்வாற்றானும்
மீள்வதென்பது இல்லாத; நம் உயிர் பருகும் கூற்றின் நாள் அடியிடுதல்
தோன்றும் - நம்முடைய உயிரைக் குடித் தொழிதற்குக் கால்கோள்
செய்தல் தோன்றாகின்ற; வாளின் வாய் - நாளாகிய அவ்வாளின்கண்;
தலை வைப்பாக்கு - நமது தலையை வைத்தற்கு; செல்கின்றோம் -
யாம் நாடோறும் செல்வதல்லது; வாழ்கின்றோமோ - யாம் வாய்மையாக
வாழ்கின்றோமில்லை என்பதாம்.
(வி
- ம்.) யாம் நாள்தோறும் நாள்கள் வருதல் கண்டு
அறியாமையால் வாழ்கின்றோமென்று மகிழ்கின்றோம். ஆராய்ந்து
பார்க்குமிடத்துயாம் ஒருநாளும் வாழுகின்றோமில்லை. நாள்தோறும்
நமது வாழ்நாளை ஈர்கின்ற கூற்றுவன் வாளின்கண் நமது தலையை
வைப்பது நன்கு விளங்கும் என்பதாம். ஈண்டு,
நாளென
வொன்றுபோற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின் --குறள், 334
என்னுத் திருக்குறளை நினைவு கூர்க. (10)
|