திரு.பொ.வே.சோமசுந்தரனார் உரை

  யாக்கையின் இழிதகைமை

11. 

நன்கன நாறுமி தென்றிவ்
   வுடம்பு நயக்கின்ற தாயி
னென்பது வாயில்க டோறு
   முண்ணின் றழுக்குச் சொரியத்
தின்பதொர் நாயு மிழுப்பத்
   திசைதொறுஞ் சீப்பில்கு போழ்தி
னின்பநன் னாற்ற மிதன்க
   ணெவ்வகை யாற்கொள்ள லாமே.

     (இ - ள்.) இது நன்கனம் நாறும் என்று - இது நன்றாக
நறுமணம் கமழ்கின்றது என்று பாராட்டி; இவ்வுடம்பு நயக்கின்றது
ஆயின் - இந்த உடம்பு நம்மாற் பெரிதும் விரும்பப்படுமானால்;
ஒன்பது வாயில்கள்தோறும் உள்நின்று அழுக்குச் சொரிய -
மற்றிவ்வுடம்பே அதன்கண் அமைந்த கண் முதலிய ஒன்பது
தொளைகளின் வழிகளானும் அதனகத்தினின்றும் தீ நாற்றமிக்க
அழுக்குகள் ஒழுகா நிற்பவும்; தின்பது ஓர் நாயும் - அதனைத்
தின்னுமியல்புடைய நாய்கள்; திசைதொறும் இழுப்ப - தம்முள் கலாம்
கொண்டு வாயாற் கௌவி நாற்றிசைகளினும் இழுத்தலாலே; சீபில்கு
போழ்தின் - இவ்வுடம்பினின்றும் சீழ்வடிகின்ற பொழுது; இதன்கண்
இன்ப நல் நாற்றம் எவ்வகையால் கொள்ளலாம் - இவ்வுடம்பின்கண்
மனமின்புறுதற்குக் காரணமான நறுமணத்தை எவ்வாற்றால் யாம்
எய்துதல் கூடும்? கூறுமின்! என்பதாம்.

     (வி - ம்.) இவ்வுடம்பு இயற்கையாகவே அருவருக்கத்தக்க
தீ நாற்றம் உடையதேயாம்; இதன்கண் செயற்கையாலுண்டாகிய
நறுமணத்தை அதன் மணமாகவே கருதி அறிவிலிகளாற்
பாராட்டப்படுகின்றது. அதனியற்கை தீ நாற்றமே என்பதனை அதன்கண்
அமைந்த ஒன்பது தொளைகளும் சொரிகின்ற அழுக்காலும் உயிர்
போயவழி நாய் முதலியன பற்றி யிழுக்க அவ்வுடம்பினின்றும் ஒழுகும்
சீ முதலியவற்றாலும் உணரலாம். ஆதலால் இவ்வுடம்பு விரும்பத்தகுந்த
சிறப்பொன்று மில்லாதது என்பதாம்.

இதனோடு,

 “எழுகு றும்பி பெருகு காதை வள்ளை யென்ப ரிகழ்கரும்
  புழுவ டர்ந்த குழலி ருண்ட புயல தென்பர் பூளைநீ
  ரொழுகு கண்கள் குவளை யென்பர் தரள மென்ப ருயிரொடும்
  பழுது றும்பல் லென்பை யின்ன பகர்வ தென்ன பாவமே”

எனவும்,

    “எச்சி றங்கு வாய்வி ளிம்பு பவள மென்ப ரெழுமிரண்
     டச்சி லந்தி கொங்கை யானை யாகு மென்ப ரதுபெருங்
     கச்சி லங்கி ருந்து மாவி கவரு கின்ற தென்பராற்
     பிச்சி லங்க வர்க்கு நேர்பி ராந்தர் யாவர் பேசிலே.”

எனவும்,

   
 “நாசி யூறல் கோழை யெச்சி னாறு மாமு கத்தையே
     மாசு றாத பூர்ண சந்த்ர வட்ட மென்ப ரொட்டுவைத்
     தேசு றாந ரம்பி னைக்கொ டென்பு கட்ட மைத்ததோள்
     வீச வீச நெஞ்ச ழிந்து வேணு வென்பர் காணுமே”


எனவும்,

  
“குடர்ந ரம்பு தசைவ ழும்பு குருதி யென்பு சுக்கில
   முடைகி டந்த பொந்தின் மேலொர் தோல்வி ரித்து மூடியே
   யடர்வு றும்பஃ றுளைக டோறு மருவ ருப்ப றாமலம்
   படர்தல் கண்டு மதனை யேகொன் மகளிரென்று பகர்வதே”


எனவும்,

      
“கூராரும் வேல்விழியார் கோலாக லங்களெல்லாந்
       தேராத சிந்தையரைச் சிங்கிகொள்ளு மல்லாமல்
       நேராயு ணிற்கு நிலையுணர்ந்து நற்கரும
       மாராய் பவருக் கருவருப்ப தாய்விடுமே”


எனவும்,

     
 “வால வயதின் மயக்கு மடந்தையருங்
       கால மகன்றதற்பின் கண்டெவரு மேயிகழ
       நீல நறுங்குழலு நீடழகு நீங்கியவர்
       கோலதொரு கையூன்றிக் கொக்குப்போ லாயினரே”


எனவும்,

     
 “கிட்டா தகன்மின் கிடப்பதிதிற் பொல்லாங்கென்
       றிட்டா ரலரே லிலங்கிழையார் தம்முடம்பிற்
       பட்டாடை மேல்விரித்துப் பாதாதி கேசாந்த
       மட்டாய் மறைத்துவரு மார்க்கமது வென்கொண்டோ”


எனவும்,

      “வீசியதுர்க் கந்தம் வெளிப்படுத்தம் மெய்யிலெனக்
       கூசி மறைப்பதன்றேற் கோற்றொடியா ரங்குமெங்கு
       நாசி மணக்க நறுங்குங் குமசுகந்தம்
       பூசி முடித்தல்பசி போக்கும் பொருட்டேயோ”

எனவும்,


      “மாற்றரிய தம்மூத்தை வாய்திறக்கு முன்னமெழு
       நாற்ற மறைக்கவன்றே னாவழித்துப் பல்விளக்கிக்
       கோற்றொடியார் நன்னீருங் கொப்புளித்துப் பாகுசுரு
       டீற்றுவது மென்குதலை தீர்க்கு மருத்தென்றே.”

எனவும்,

     
 “பட்டாடை சாத்திப் பணிமே கலைதிருத்தி
       மட்டா யவயவங்கள் மற்றவைக்கு மேற்கும்வண்ணம்
       கட்டாணி முத்தங் கனகமணிப் பூடணங்க
       விட்டா லலதவருக் கென்னோ வியலழகே”
                          --மெஞ்ஞான விளக்கம், 10 - 19


எனவும் வரும் செய்யுள்கள் ஒப்புநோக்கற்பாலன.           (11)