திரு.பொ.வே.சோமசுந்தரனார் உரை



       இதுவுமது

 13. உறுப்புக் கடாமுடன் கூடி
   யொன்றா யிருந்த பெரும்பை
மறைப்பில் விழைவிற்குச் சார்வாய்
   மயக்குவ தேலிவ் வுறுப்புக்
குறைத்தன போல வழுகிக்
   குறைந்து குறைந்து சொரிய
வெறுப்பிற் கிடந்த பொழுதின்
   வேண்டப் படுவது முண்டோ.

      (இ - ள்.) உறுப்புக்கள் தாம் உடன்கூடி ஒன்றாய் இருந்த
பெரும்பை - கால்கை முதலிய புறத்துறுப்புக்களும் குடர் காற்றுப்பை
முதலிய உள்ளுறுப்புக்களும் ஒருசேர ஓருடம்பாக இருந்த இந்தத்
தோலாலியன்ற பெரிய பையானது; மறைப்பில் - மேலே தோல்
போர்த்துள்ள மறைப்பினாலே; விழைவிற்குச் சார்வாய் மயக்குவதேல் -
நந்தம் அவாவிற்குச் சார்பிடமாகி நம்மை மயக்கு மியல்புடையதென்னின்;
உறுப்புக் குறைத்தனபோல - மற்றிவ்வுடம்பே உயிர் பிரிந்துழித்
தன்னுறுப்புகள் துணிக்கப்பட்டன போல்வனவாக; அழுகிக் குறைந்து
குறைந்து சொரிய - அழுகி நாளுக்கு நாள் தேய்ந்து தேய்ந்து வீழாநிற்ப;
வெறுப்பிற் கிடந்த பொழுதின் - கண்டோர் வெறுப்பிற் கிடனாகிக்
கிடந்த காலத்து; வேண்டப்படுவதும் உண்டோ - இவ்வுடம்பின்கண்
யாம் அவாவுதற்கியன்ற தன்மையும் உண்டாகுமோ? கூறுதிர் என்பதாம்.

     (வி - ம்.) “உறுப்பு. கண் முதலிய புறவுறுப்புக்களும் குடர்
முதலிய உள்ளுறுப்புக்களுமாம். தோலாற் போர்த்து
மறைக்கப்பட்டிருத்தலால் இது விழைவிற்குச் சார்வாய் மயக்குவது;
அங்ஙனம் போர்க்கப் படாவிடின் அருவருக்கத் தக்கதேயாம்
என்பாள். மறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவது என்றாள்.
அங்ஙனம் மயக்குமேனும் இஃது அழுகிக் குறைந்து குறைந்து
சொரியக் கிடந்த பொழுதின் இதன் கண் மயங்குவதற்குரிய தன்மை
சிறிதும் இல்லையாம் என்றவாறு.

      “என்புந் தடியும் உதிரமும் யாக்கை என்று
       அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி
       வழுவொடு கிடந்த புழுவின் பிண்டம்”

என்றார் மணிமேகலையினும். இன்னும், இவ்விடம்பியல்பினை:--

“காலி ரண்டுநி றுத்தி மேலிரு கைபி ணைத்தொரு புறவெலும்
 பாலி ணக்கிமு கட்டு மேல்வளை யடர்ந ரம்பெனு மாக்கையாற்
 கோலி யிட்டப ழுக்க ழிக்கொரு குறைவு றாமல் வரிந்துமேற்
 றோலி ணக்கிய கற்றை வேய்ந்துயர் சுவர்பு லால்கொ டியற்றியே”

  “வந்து போகவி ரண்டு வாசல் வகுத்து மற்றெழு சாளரந்
   தந்து சாக்கிர மாதி யீரிரு தளமெ டுத்ததன் மேன்மலர்க்
   கொந்து லாவிய மாமு டிக்கன கும்பம் வைத்தவிர் கூந்தலா
   முந்து நீள்கொடி மாட நாலு முகக்கண் மாளிகை முற்றினாள்”


எனவரும் மெய்ஞ்ஞான விளக்கச் செய்யுள்களும் (அவித்தியா -
13 - 14.)


 
“என்பினை நரம்பிற் பின்ளி யுதிரந்தோய்த் திறைச்சிமெத்திப்
  புன்புறந் தோலைப் போர்த்து மயிர்புறம் பொலிய வேய்ந்திட்
  டொன்பது வாயி லாக்கி யூன்பயில் குரம்பை செய்தான்
  மன்பெருந் தச்ச னல்லன் மயங்கினார் மருள வென்றான்”

எனவரும் சீவக சிந்தாமணிச் செய்யுளும் (1577)
அறிவுறுத்துதலையும் ஈண்டு நினைக.                  (13)