|
இறைமாட்சி
|
15. |
இறந்த
நற்குண மெய்தற் கரியவா
யுறைந்த தம்மையெல் லாமுட னாக்குவான்
பிறந்த மூர்த்தியொத் தான்றிங்கள் வெண்குடை
யறங்கொள் கோலண்ணன் மும்மத யானையான். |
(இ
- ள்) மும்மத யானையான் - மூன்று மதங்களையும்
பொழிகின்ற களிற்றியானையையுடையவனும்; திங்கள் வெள்குடை -
நிறைத்திங்கண் மண்டிலம் போன்ற வெள்ளிய தன் குடையினாலே ;
அறங்கொள் கோல் - அறத்தையே குறிக்கோளாகக் கொண்ட
செங்கோன் முறைமையினையுடைய; அண்ணல் - இவ்வேந்தன்
இவ்வாற்றால்; இறந்த நற்குணம் இவ்வுலகத்தை விட்டகன்று போய்விட்ட
நல்ல மக்கட் பண்புகள்; எய்தற்கு அரியவாய் - மீண்டும் மாந்தர்
எய்துதற்கரியனவாகி; உறைந்த தம்மை எல்லாம் - இருந்தவற்றை
யெல்லாம் ; உடன் ஆக்குவான் - மீண்டும் இவ்வுலகத்து மக்களோடே
சேர்த்து அவரை யுய்விக்கும் பொருட்டு; பிறந்த மூர்த்தி ஒத்தான் -
துடித விமானத்தினின்றும் போந்து இந்நிலவுலகத்திற் றோன்றியருளிய
புத்த பெருமானையே ஒத்தவனாய்த் திகழ்ந்தான் என்பதாம்.
(வி
- ம்) இச் செய்யுள் தொடங்கிவருகின்ற செய்யுள்கள்
குண்டலகேசி என்னும் பெருங்காப்பியத்திற் பேசப்படுகின்ற அரசன்
மாண்புகள். இந்த அரசனுடைய பிற மாண்புகள் இச் செய்யுளின்முன்
பல செய்யுட்களிற் பேசப்பட்டிருத்தல் வேண்டும் என்று
நினைத்தற்கிடனுளது அவையெல்லாம் கிடைத்தில. இச் செய்யுளின்
முற்போந்த செய்யுட்களில் அந்த அரசனுடைய அறமாண்புகளை
வருணித்து இச் செய்யுளில் இவ்வாற்றால் இம் மன்னவன்
புத்தபெருமானையும் ஒப்பாவான் என்று கூறுகின்றார் போலும்.
புத்தபெருமான்
உலகின்கண் அறங்கள்கெட்டு மக்கட்பண்பு
அழித்தகாலத்தே உலகிற்றோன்றி அவ்வறங்களை மீண்டும் உலகில்
நிறுவினன் என்பகவாகலின் “இறந்த நற்குணம் எய்தற்கரியவா யுறைந்த
தம்மையெல்லாம் உடனாக்குவான் பிறந்த மூர்த்தி” என்று புத்தரைச்
சுட்டினார். மக்கள் மேற்கொள்ளாவிடினும் அறம் அழிந்தொழியாமையின்
எய்தற்கரியவாய் உறைந்த தம்மையெல்லாம் என்றார். உறைந்த
தம்மையெல்லாம் என்றது உறைந்தவற்றை யெல்லாம் என்றவாறு. புத்தர்
உலகில் அறமுதலியன நிலைகுலைந்துழி வந்து தோன்றுவர் என்பதனை,
“பூமகளே
முதலாகப் புகுத்தமரர் எண்டிசையும்
தூமலரா லடிமலரைத் தொழுதிரந்து வினவியநான்
காமமும் கடுஞ்சினமுங் கழிப்பரிய மயக்கமுமாய்த்
தீமைசால் கட்டினுக்குத் திறற்கருவி யாய்க்கிடந்த
தாமஞ்சார் நமர்களுக்கு நயப்படுமா றினிதுரைத்துச்
சேமஞ்சார் நன்னெறிக்குச் செல்லுமா றருளினையே
எண்ணிறந்த குணந்தோய்நீ யாவர்க்கு மரியோய்நீ
உண்ணிறைந்த வருளோய்நீ யுயர்பார நிறைந்தோய்நீ
மெய்ப்பொருளை யறிந்தோய்நீ மெய்யறமிங் களித்தோய்நீ
செப்பரிய தவத்தோய்நீ சேர்வார்க்குச் சார்வுநீ
நன்மைநீ தின்மைநீ நனவுநீ கனவுநீ
வன்மைநீ மென்மைநீ மதியுநீ விதியுநீ
இம்மைநீ மறுமைநீ இரவுநீ பகலுநீ
செம்மைநீ கருமைநீ சேர்வுநீ சார்வுநீ
அருளாழி நயந்தோய்நீ அறவாழி பயந்தோய்நீ
மருளாழி துரந்தோய்நீ மறையாழி புரந்தோய்நீ
மாதவரின் மாதவனீ வானவருள் வானவனீ
போதனருட் போதனனீ புண்ணியருட் புண்ணியனீ
ஆதிநீ யமலனீ யயனுநீ யரியுநீ
சோதிநீ நாதனீ துறைவனீ யிறைவனீ
அருளுநீ பொருளுநீ அறவனீ யநகனீ
தெருளுநீ திருவுநீ செறிவுநீ செம்மனீ” |
எனவரும்
பழம் பாடலானும் (வீரசோழியம் : யாப்புப் படலம் 11
- ஆம் கவித்துறையின் உரையிற்கண்டவை) இன்னும்,
“தரும
தலைவன் றலைமையி னுரைத்த
பெருமைசால் நல்லறம் பெருகா தாகி
இறுதியில் நற்கதி செல்லும் பெருவழி
அறுகையு நெருஞ்சியு மடர்ந்துகண் ணடைத்தாங்குக்
செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்லென்
றுயிர்வழங்கு பெருநெறி யொருதிறம் பட்டது
தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
உண்டென வுணர்த லல்ல தியாவதுங்
கண்டினிது விளங்காக் காட்சி போன்றது
சலாகை நுழைந்த மணித்துளை யகவையின்
உலாநீர்ப் பெருங்கட லோடா தாயினு
மாங்கத் துளைவழி யுகுநீர் போல
வீங்கு நல்லற மெய்தலு முண்டெனச்
சொல்லலு முண்டியான் சொல்லுத றேற்றார்
மல்லன்மா ஞாலத்து மக்களே யாதலின்
சக்கர வானத்துத் தேவ ரெல்லாம்
தொக்கொருங் கீண்டித் துடித லோகத்து
மிக்கோன் பாதம் விழுந்தன ரிரப்ப
விருள்பரந்து கிடந்த மலர்தலை யுலகத்து
விரிகதிர்ச் செல்வன் றோன்றின னென்ன
................................................
புத்த ஞாயிறு தோன்றுங் காலை”
|
எனவரும்
மணிமேகலையானும், (12 ; 58 - 86) உணர்க,
இன்னும்,
“துடித விமானத்தினின்றும்
போந்து குயிலாபுரத்துத் தோன்றி உலும்பினி
வனத்துப் பிறந்து சுபிலாபுரத்துப் புத்ததத்துவம் பெற்றுத் தர்மோப
தேசம் பண்ணி மகாபோதிப் பிரதேசத்துப் பொன்றக் கெடுதல்
புத்தனுக்கு நியதி” (மொக்கலவாதச் சருக்கம் 160 ஆம் பாட்டுனர)
எனவரும் நீலகேசி யுரையாசிரியர் கூற்றும் ஈண்டு நினைக. (15)
|