திரு.பொ.வே.சோமசுந்தரனார் உரை

        குற்றங் கடிதல்
17. மண்ணுளார் தம்மைப் போல்வார்
    மாட்டதே யன்று வாய்மை
நண்ணினார் திறத்துங் குற்றங்
   குற்றமே நல்ல வாகா
விண்ணுளார் புகழ்தற் கொத்த
   விழுமியோ னெற்றி போழ்ந்த
கண்ணுளான் கண்டந் தன்மேற்
   கறையையார் கறையன் றென்பார்.

     (இ - ள்.) விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த - வானுலகத்தே
வாழுகின்ற தேவர்களும் புகழ்ந்து பாராட்டுதற் கேற்ற; விழுமியோன் -
சிறப்பினையுடையவனும்; நெற்றிபோழ்ந்த கண் உளான் - நெற்றியைப்
பிளந்து தோன்றிய நெருப்புக் கண்ணை யுடையவனும் ஆகிய
சிவபெருமானுடைய; கண்டம் தன்மேல் கறையை - மிடற்றின்
கண்ணமைந்த களங்கத்தை: யார் கறை அன்று என்பார் - யார்
தாம் களங்கம் அன்று என்று கூறுவார்? அங்ஙனமே; குற்றம்
மண்ணுளார் தம்மைப் போல்வர் மாட்டதே அன்று - குற்றம் என்பது
இந்நிலவுலகத்தே வாழும் மக்கள் போல்வாரிடத்து மட்டும்
உண்டாவதொன்றன்று; குற்றம் வாய்மை நண்ணினார் திறத்தும் -
குற்றமானது மெய்யுணர்வு பெற்ற மேலோரிடத்துத் தோன்றினும்;
குற்றமே - குற்றமாகவே கொள்ளப்படுவதன்றி; நல்ல ஆகா - அவர்
மேலோர் என்பதற்காக நல்லனவாகி விடா; ஆதலால் எத்தகையோரும்
தம்பாற் குற்றம் நிகழாதபடி விழிப்புடனிருத்தல் வேண்டும் என்பதாம்.

     (வி - ம்.) ஆதலால் எத்தகையோரும் தம்பாற் குற்றம்
நிகழாதபடி விழிப்புடன் இருத்தல் வெண்டும் என்பது குறிப்பெச்சம்.

   கந்தருவர் அரக்கர் முதலியோரையும் கருதி மண்ணுளார் தம்மைப்
போல்வர் என்றார், வாய்மை நண்ணினார் என்றது மெய்யுணர்வு
கைவரப் பெற்ற மேலோரை!

     “தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
      கொள்வர் பழிநாணு வார்”             --குறள், 433

எனவும்,

     
“குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
      அற்றந் தரூஉம் பகை”                --குறள், 434

எனவும் வரும் அருமைத் திருக்குறள்களையும் நோக்குக,    (17)