|
இடுக்கணழியாமை
|
18. |
மறிப
மறியு மலிர்ப மலிரும்
பெறுப பெரும்பெற் றிழப்ப விழக்கும்
அறிவ தறிவா ரழுங்கா ருவவா
ருறுவ துறுமென் றுரைப்பது நன்று. |
(இ
- ள்.) மறிப
மறியும் - அழியும் பொருளெல்லாம் அழிந்தே
தீரும்; (அவற்றை யழியாமற் பாதுகாத்த லியலாது) மலி்ர்ப மலிரும் -
அங்ஙனமே வளரும் ஊழுடையன வெல்லாம் வளர்ந்தே தீரும்;
(அவற்றை வளராமற் றடுக்கவுமியலாது) பெறுப பெறும் - பயன்
பெறுகின்ற ஆகூழுடையன பெற்றே தீரும்; (அப்பயனைப்
பெறாவண்ணம் செய்தலு மியலாது); பெற்று இழப்ப இழக்கும் -
அங்ஙனமே, பெற்றபயனை இழக்கும் போகூழுடையன அவற்றை
இழந்தே தீரும்; (இழவாதபடி செய்ய வியலாது) அறிவது அறிவார் -
ஆதலால் அறிதற்குரிய பொருளியல்பினை அறிந்த மேலோர்;
அழுங்கார் - தமக்குப் பொருளிழவு நேர்ந்துழி இது பொருளியல்பென்
றுணர்ந்து அவ்விழவின்பொருட்டு வருந்துதலிலர். உவவார் -
அங்ஙனமே தாம் சிறந்த பேறுகளைப் பெற்ற வழியும் இஃது ஊழின்
செயலென் றுணர்ந்து அப்பேறு கருதியும் பெரிதும் களிப்பதுமில ராவர்;
உறுவது உறுமென்று உரைப்பது நன்று - ஆதலால் வருவது
வந்தே
தீரும் என்று
உலகோர் கூறும் பழமொழி மிகவும்
வாய்மையுடையதென்று கொண்மின் என்பதாம்.
(வி
- ம்.) உறுவதுறும்
என்பது ஒரு பழமொழி.
மறிப, மலிர்ப,
பெறுப, இழப்ப என்பன பலவறிசொல்.
மெய்யுணர்வுடையோர்
யாது நிகழ்ந்தாலும் எல்லாம் ஊழின்
செயலென்று கருதி அமைதியுடனிருப்பர். செல்வம் வந்துழிக்
களிப்பதிலர். வறுமை வந்துழி வருந்துவதுமில்லை என்றவாறு,
இக்கருத்தோடு,
யாதும்
ஊரே யாவருங் கேளிர்
தீது நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படுஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியந்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே
எனவரும் கணியன் பூங்குன்றனார் பொன்மொழியும், (புறநா-192)
மெய்த்தி ருப்பத மேவென்ற போதினும்
இத்தி ருத்துறந் தேகென்ற போதினும்
சித்தி ரத்தி னலர்ந்தசெந் தாமரை
யொத்தி ருந்த முகத்தினை யுன்னுவாள்
எனவரும் கம்பநாடர் கவின்மொழியும் ஒப்புநோக்கற்
பாலன. (18)
|