|
மனந்தூயோர்க்கே
இன்பமுளவாகும் எனல்
|
3. |
வாயுவினை
நோக்கியுள மாண்டவய நாவாய்
ஆயுவினை நோக்கியுள வாழ்க்கையது வேபோல்
தீயவினை நோக்குமியல் சிந்தனையு மில்லாத்
தூயவனை நோக்கியுள துப்புரவு மெல்லாம். |
(இ
- ள்) மாண்டவய நாவாய் - மாண்புடைய வலிமை மிக்க
மரக்கலங்கள்; வாயுவினை நோக்கி உள - தமது இயக்கத்திற்குக்
காற்றினையே பெரிதும் அவாவிருப்பனவாகும்; வாழ்க்கை - உயி்ர்களின்
வாழ்வு தானும்; ஆயுவினை நோக்கி உள - தமக்கென ஊழ் வகுத்த
அகவையையே குறிக்கொண்டிருப்பனவாம்; அது போல் அங்ஙனமே;
துப்புரவும் எல்லாம் - பொறிகளானுகரப்படும் நுகர்ச்சிகளும் பிறவுமாகிய
நன்மைகளெல்லாம்; தீயவினை நோக்கும் - தீவினையை நயந்து
நோக்கும் நோக்கமும்; இயல் சிந்தனையும் - அத்தீவினை செய்தற்குரிய
நெறிகளிலே செல்கின்ற நினைவும்; இல்லாத் தூயவனை - தன்பாற்
சிறிதுமில்லாத தூய்மையுடைய சான்றோனையே: நோக்கி உள - தாம்
எய்துதற்குரிய இடமாக எதிர்பார்த் திருப்பனவாம் என்பதாம்.
(வி
- ம்) மரக்கலங்கள் தமக்கு ஆதாரமாகக் காற்றை
எதிர்பார்த்திருப்பது போலவும், உயிரினங்களின் வாழ்வுகளெல்லாம்
தத்தமக்கு ஊழ் வரைந்துள்ள வாழ்நாளையே ஆதாரமாகக்
குறிக்கொண்டிருப்பது போலவும். இவ்வுலகத்துள்ள இன்பங்களும்
புகழ்களும் தீவினை செய்தற்கண் ஆர்வமும் அவ்வழியியங்கும்
எண்ணங்களும் சிறிதுமின்றி மனத் தூயனாகிய நல்லோனையே தமக்கு
ஆதாரமாகக் கொண்டுள்ளன என்றவாறு.
எனவே மனந்தூயரல்லாதர்க்கு
இவ்வுலகத்து இன்பமும் பிற
நலங்களும் உளவாகா என்பது கருத்தாயிற்று. ஆகவே இம்மை
யின்பங் களையும் புகழ் முதலியவற்றையும் விரும்புவோர் மனநலம்
உடையராகவே அவை யெல்லாந் தாமே வந்தெய்தும்.
மனந்தூயரல்லார்க்கும் இவைகள் எய்தா; ஆதலின் மனந்தூயராய்த்
தீவினையை எஞ்ஞான்றும் அஞ்ச வேண்டும் என்றறிவுறுத்தவாறாயிற்று
இதனோடு,
மனத்தூயார்க்கு
கெச்சதன் றாகு மினந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை --குறள், 456
எனவும்,
மனநலம்
மன்னுயிர்க் காக்க மினநல
மெல்லாப் புகழுந் தரும், --குறள், 457
எனவும்,
மனநலத்தின்
ஆகு மறுமைமற் றஃது
மினநலத்தி னேமாப் புடைத்து --குறள், 459
எனவும், வரும் அருமைத்
திருக்குறள்களையும்,
பொய்குறளை
வன்சொல் பயனிலவென் றிந்நான்கும்
எய்தாமை சொல்லின் வழுக்காத்து--மெய்யில்
புலமைந்துங் காத்து மனமா சகற்று
நலமன்றே நல்லா றெனல் --நீதிநெறி விளக்கம்,60
எனவும்,
மனத்த
கறுப்பெனி னல்ல செயினும்
அனைத்தெவையுந் தீயவே யாகும் --எனைத்துணையும்
தீயவே செய்யினு நல்லவாக் காண்பவே
மாசின் மனத்தி னவர் --நீதிநெறிவிளக்கம், 58
எனவும் வரும் குமரகுருபரவடிகளார்
பொன்மொழிகளையும் ஒப்பு
நோக்குக. (3)
|