|
மெய்த்தவம் |
4. |
போர்த்தலுடை
நீக்குதல் பொடித்துகண் மெய்பூசல்
கூர்த்தபனி யாற்றுதல் குளித்தழலு ணிற்றல்
சார்த்தரிடு பிச்சையர் சடைத்தலைய ராதல்
வார்த்தையிவை செய்தவ மடிந்தொழுக லென்றான். |
(இ
- ள்.) உடை போர்த்தல் - காவி ஆடை முதலியவற்றால்
உடம்பினைப் போர்த்துக் கோடலும் ; நீக்குதல் - ஆடையுடாது
விட்டுவிடுதலும் ; பொடித் துகள் மெய்பூசல் - சாம்பல் முதலியவற்றை
உடல் நிரம்பப் பூசிக்கோடலும் ; கூர்த்த பனி குளித்து ஆற்றுதல் -
மிக்க பனியினும் (மழையினும்) நீருட்குளித்து நின்று,
அவற்றாலுண்டாகும் துன்பங்களைப் பொறுத்துக் கோடலும் ; அழலுள்
நிற்றல் - கோடையின்கண் தீயினுள் நிற்றலும் ; சார்த்தர் இடு
பிச்சையர் ஆதல் - தம் சமயத்தைச் சார்ந்துள்ள இல்லறத்தாரிடுகின்ற
பிச்சையை ஏற்றுண்டு திரிதலும்; சடைத்தலையர் ஆதல் - சடை
வளர்த்துக் கட்டிய தலையினையுடையராதலும் (அன்றி மழித்த
தலையையுடையராதலும்) இவை வார்த்தை - இன்னோரன்ன
செயலெல்லாம் வறிய சொல்லளவே மன்றத் தவவொழுக்க
மாகமாட்டா; செய்தவம் மடிந்து ஒழுகல் என்றான் - இனி
வாய்மையாகச் செய்கின்ற தவவொழுக்கம் யாதெனின் மனம்
பொறிகள் வழியாகப் புலன்களிடத்தே செல்லாமல் அடங்கி ஒழுகும்
ஒழுக்கமேயாம் என்று கூறினான்; என்பதாம்.
(வி
- ம்.) உடை போர்த்தல் - காவியாடை துவராடை
முதலியவற்றால் உடம்பு முழுதும் போர்த்தல். காவியாடை போர்ப்பவர்
வேதவாதியர். துவராடை போர்ப்போர் பௌத்தர். பல்வேறு ஆடைகள்
போர்க்கும் பல்வேறு சமயங்களும் அடங்குதற்கு உடை போர்த்தல்
எனப் பொதுவினோதினர். பொடியும் துகளும் என உம்மை விரித்துப்
பொடி பூகவோர் சைவசமயத்தினர் என்றும், துகள் பூசுவோர் வைணவ
சமயத்தினர் என்றுங் கொள்ளலாம். ஈண்டுத்துகள் : மண்ணும்,
சூரணமும் என்க. கூர்த்தல் - மிகுதல். பனி கூறியதனால் மழையும்
கொள்க. சடை கூறியதனால் மழித்தலும் கொள்க. பிச்சை கூறியதனால்
கிழங்கு தழை காய்கனி சருகு முதலியன உண்ணலும் கொள்க.
வார்த்தை - ஈண்டுப் பொய்யாய புகழ் என்பது பட நின்றது.
இனி இதனோடு,
“வீடு
வேண்டி விழுச்சடை நீட்டன்மெய்ம்
மூடு கூறையின் மூடுதல் வெண்டலை
ஓடு கோடலு டுத்தலென் றின்னவை
பீடி லாப்பிற விக்குவித் தென்பவே” --சீவக, 1427
எனவும்,
“ஏம
நன்னெறி யெந்நெறி யன்னெறி
தூய்மை யின்னெறி யாமுந் துணிகுவம்” --சீவக, 1428
எனவும்,
“தூங்குறிக்
கிடந்து காயும் பழங்களுந் துய்ப்ப நில்லா
பாங்கலா வினைகள் என்றார் பகவனா ரெங்கட் கென்னின்
ஓங்குநீண் மரத்திற் றூங்கு மொண்சிறை யோடுங்கல் வாவல்
பாங்கரிற் பழங்க டுய்ப்பப் பழவினை பரியு மன்றே” --சீவக,
1429
எனவும்,
“அல்லியும்
புல்லும் உண்டாங் காரழ லைந்து ணின்று
சொல்லிய வகையி னோற்பத் துணியும்வெவ் வினைக ளென்னிற்
கல்லுண்டு கடிய வெம்புங் காணுறை புறவ மெல்லாம்
புல்லிய வினையை வென்று புறக்கொடை காணு மன்றே”
--சீவக, 1430
எனவும்,
“நீட்டிய சடைய மாகி நீ்ர்மூழ்கி நிலத்திற் சேர்ந்து
வாட்டிய வுடம்பின் யாங்கள் வரகதி விளைத்து மென்னிற்
காட்டிடைக் கரடி போகிக் கயமூழ்கிக் காட்டி னின்று
வீட்டினை விளைக்க வேண்டும் வெளிற்றுரை விடுமி னென்றான்”
-- சீவக, 1431
எனவும் வரும் சீவகன் மொழிகளும்,
“மழித்தலு நீட்டலும் வேண்டா வுலகம்
பழித்த தொழித்து விடின்” --குறள், 280
எனவும்,
“மனத்தது மாசாக மரண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்” --குறள், 278
எனவும்
“புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து” --குறள், 277
எனவும்
வரும் திருவள்ளுவர் பொன்மொழிகளும்,
“நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை
கஞ்சுக மன்று பிறிதொன்றே - கஞ்சுகம்
எப்புலமும் காவாமே மெய்ப்புலங் காக்குமற்
றிப்புலமுங் காவா திது“ --நீதிநெறி விளக்கம், 13
எனவருங் குமரகுருபரவடிகளார் மணிமொழியும் ஒப்புநோக்கற்
பாலன. (4)
|